ஐப்பசி துலா ஸ்நானம் சிறப்புகள்

By Tejas

ஐப்பசி மாதத்தில் கங்கைக்கு நிகரான காவிரியில் நீராடினாலும், தரிசித்தாலும், அதனை பக்தியுடன் தொட்டாலும், அதன் கரையில் தானம் தர்ப்பணம் செய்தாலும், எல்லா பாவங்களும் விலகி புண்ணியம் கிட்டும்.

 

துலா காவிரி புராணம்!

 

சோழ நாட்டை பொன்னி நாடு என்றும், சோழ அரசனை பொன்னி நாடன் என்றும் சொல்வது உண்டு. சோழர்கள் ஆட்சி செய்த சோழ நாட்டில் காவிரியின் இருகரைகளிலும் சிவஸ்தலங்களையும் விஷ்ணு ஸ்தலங்களையும் எழுப்பி வழிபட்டு வந்ததால், தெய்வ பொன்னி சோழ நாட்டை 'சோறுடைய' நாடாக செய்கிறாள். 'சோறு' என்பதற்கு மோட்சம் என்றும் பொருள் உண்டு. இப்பிறவிக்கு உணவையும் அடுத்த பிறவியே இல்லாத மோட்சத்தையும் அளிக்கும் வள்ளல் இவள்.

 

ஆதியில் உமாதேவிக்கு ஸ்ரீ பரமேஸ்வரன் சொன்ன காவிரி மகாத்மியத்தை, தேவ வன்மன் என்ற அரசனுக்கு சுமத்திரங்கி என்ற ரிஷி சொல்ல தொடங்குகிறார். ஒரு சமயம் பார்வதி - பரமேஸ்வரர் ஒரு நந்தவனத்தில் தங்கி இருந்தபோது, அங்கு பறவைகள் வடிவில் வந்த நதி தேவதைகள் துலா (ஐப்பசி) மாதத்தில் காவிரியில் ஸ்நானம் செய்து விட்டு அவ்விருவரையும் தரிசிக்க வந்தன. அவர்கள் வேண்டிய வரங்கள் எல்லாவற்றையும் தந்த ஈஸ்வரன் கூறியதாவது, "கங்கைக்கு நிகரான காவிரியில் நீராடினாலும், தரிசித்தாலும், அதனை பக்தியுடன் தொட்டாலும், அதன் கரையில் தானம் தர்ப்பணம் செய்தாலும், எல்லா பாவங்களும் விலகி புண்ணியம் கிட்டும். இதன் கறைகளில் காசிக்கு சமமான ஸ்தலங்களும் இருக்கின்றன, நினைத்ததை தரும் சிந்தாமணியான காவிரி".

 

இதே ஐப்பசி காவிரியில் நீராடி பலன்களையும் புண்ணியங்களையும் பெற்றவர்கள் ஏராளம். காவிரியில் துலாஸ்நானம் செய்து ஸ்ரீரங்கநாதரை வழிபட்டதன் பலனாக சந்தனு மகாராஜா பீஷ்மரை புத்திரனாக பெற்றார். அர்ஜுனன் துலாஸ்நானம் செய்து ஸ்ரீரங்கநாத பெருமாளை தரிசித்து சுபத்ராவை மணம் புரிந்தார், என்கிறது புராணம். மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத அமாவாசை அன்று கங்காதேவி காவிரியில் நீராடி மக்கள் தன்னிடம் கரைத்த பாவங்களை எல்லாம் போக்கிக் கொள்கிறாள், எனவும் கூறுகின்றனர்.

 

காவிரியை தட்சிண கங்கை என்றும் போற்றுகின்றனர். பொன்னி, விதிசம்பூதை, கல்யாணி, சாமதாயினி, கல்யாண திருத்தரூபி, உலாபமுத்ரா, சுவாசாஸ்யாமா, கும்பசம்பவ வல்லவை, விண்டுமாயை, கோனிமாதா, தக்கனபதசாவணி என காவிரி நதியை பல பெயர்களில் அழைக்கின்றனர்.

 

ஐப்பசியில் காவிரி நதியில் துலாஸ்நானம் செய்வதால் உண்டாகும் நன்மைகள்!

 

ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்றும் போற்றுவார்கள். ஐப்பசி எனப்படும் துலாம் மாதத்தில் காவிரியில் நீராடுவதை 'துலா ஸ்நானம்' என்று விவரிக்கிறது, புராணம். இந்த பூவுலகில் அறுபத்தாறு கோடி தீர்த்தங்கள் உள்ளன, என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐப்பசியில் உலகில் உள்ள அறுபத்தாறு கோடி திருத்தங்களும் காவேரியில் சங்கமமாகின்றன என்பது ஐதீகம்.

 

ஐப்பசி துலா காவேரி ஸ்நானம் செய்பவர்கள், காவிரி ஆற்றுக்கு பூஜை செய்து வழிபடுவதுடன் அருகில் அரசமரம் இருந்தால், அம்மரத்திற்கு காவிரி நீரை ஊற்றி வலம் வந்து வணங்குவது புண்ணிய பலன்களை தரும்.

 

14 லோகங்களில் உள்ள புண்ணிய தீர்த்தங்களின் தேவதைகளும் காவிரி நதியில் சங்கமமாவதால், ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது மகத்தான பலன்களை வழங்கும் என்கிறார்கள்.

 

காவிரியில் நீராடுபவர்கள், தங்கள் குடும்பத்தினரையும் சேர்த்து மூன்று கோடி உறவினர்களையும் கடைத்தேற்றுகிறார்கள். மேலும் துலா மாத ஐப்பசியில், காவிரியில் நீராடி முன்னோர்களுக்கு பிதுர் பூஜை செய்து அன்னதானம், வஸ்திரதானம் செய்தால் நம்முடைய பித்ருக்கள் மகிழ்ந்து வாழ்த்துவார்கள், ஆசி வழங்குவார்கள்.

 

மேலும் ஐப்பசியில் காவிரியில் நீராடினால் ஆயுளும் ஆரோக்கியமும் கூடும். வாக்கு பலிதம் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் பெறலாம் என காவேரி மகாத்மியம் கூறுகிறது.

 

ஐப்பசி மாதம் முழுவதும் துலாம் மாதம் எனப்படும். இந்த காலங்களில் சூரிய உதயத்தில் செய்யும் புனித ஸ்நானம் துலாஸ்நானம் என்று போற்றப்படுகிறது. ஐப்பசி முதல் தேதி திருச்சிக்கு அருகில் உள்ள திருப்பராய்த்துறையிலும், இரண்டாவது நீராடலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையிலும், கடைசி தேதி என்று மயிலாடுதுறை நந்திக்கட்டத்திலும் நீராட வேண்டும் என்பது முறை.

 

தலைக்காவேரி, ராமபுரம், கொடுமுடி, ஸ்ரீரங்கம், திருப்பராய்த்துறை, திருவானைக்கோவில், சப்தஸ்தானம், திருவையாறு, புஷ்பராண்யம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, மயிலாடுதுறை, கும்பகோணம், திருவிடைமருதூர் முதலிய காவேரி நீர் துறைகளில் துலாம் மாதத்தில் நீராட சிறந்தவை ஆகும்.

 

பாவங்கள் போக்கும் பராய்த்துறை துலா ஸ்நானம்!!

 

திருச்சி மாவட்டம் - திருப்பராய்த்துறையில், விஸ்தாரமாக ஓடுவதால் அகண்ட காவிரி, என்று அழைக்கப்படும் காவிரி நதியின் தென் கரையில் அமைந்திருக்கும் பராய்த்துறை நாதர் சிவாலயம், பாடல் பெற்ற தலம் ஆகும். இங்குள்ள இறைவனுக்கு, ‘தாருகாவனேஸ்வரர்’ என்ற திருப்பெயரும் உண்டு.

 

திருப்பராய்த்துறை தல புராணம்!!

 

முற்காலத்தில் இப்பகுதி ‘தாருகாவனம்’ என அழைக்கப்பட்டது. அக்காலத்தில் அங்கு இருந்த முனிவர்கள், பல வகையான வேள்விகளைச் செய்துவந்தனர். தாங்கள் செய்யும் வேள்விகளே முதன்மையானது என்ற எண்ணத்தில், சிவபெருமானை மதிக்கத் தவறினர். அவர்களின் இறுமாப்பை அடக்க திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், பிட்சாடனர் கோலத்தில் தாருகாவனத்துக்கு வந்தார். பிட்சாடனராக இருந்தாலும், பேரழகுடன் திகழ்ந்த சிவனாரிடம் மனதைப் பறிகொடுத்தனர் முனிவர்களின் பத்தினிகள்.

 

இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் பிட்சாடனரை அழிக்க மாபெரும் யாகம் செய்தனர். யாக குண்டத்தில் இருந்து புலியைத் தோற்றுவித்து அவர் மீது ஏவினர். பிட்சாடனர் அதைக் கொன்று, அதன் தோலை ஆடையாக அணிந்துகொண்டார். பிறகு மானை ஏவுகின்றனர். பிட்சாடனர் மானை அடக்கி தனது இடக்கரத்தில் ஏந்திக்கொண்டார். பின்னர், முனிவர்கள் பாம்புகளை ஏவ, அவற்றை தனது அணிகலன்களாக ஆக்கிக் கொண்டார், பிட்சாடனர்.

 

இதனால் கோபம் கொண்ட முனிவர்கள், பரமனாரின் மீது பூதகணங்களை ஏவினார்கள். ஆனால், அந்த முயற்சியும் தோல்வியுற்றது. நிறைவாக, வந்திருப்பவர் சிவபெருமான்தான் என்று உணர்ந்த முனிவர்கள், இறுமாப்பு நீங்கி மன்னிப்பு வேண்டினர். சிவபெருமானும் அவர்களை மன்னித்து, சுயம்புலிங்கமாக தாருகாவனத்தில் எழுந்தருளினார். பராய் மரங்கள் சூழ்ந்த பகுதியில் எழுந்தருளியதால், ‘திருப்பராய்த்துறை நாதர்’ என்றும் திருப்பெயர் கொண்டார்.

 

ஏழுநிலை ராஜகோபுரத்துடனும், ஐந்துநிலை முதன்மை கோபுரத்துடனும் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் இறைவன் சுயம்புலிங்கமாகக் காட்சி தருகிறார். இறைவி ஸ்ரீபசும்பொன் மயிலாம்பிகை எனும் திருநாமத்துடன் தெற்கு நோக்கி காட்சி தருகிறாள்.

 

பிட்சாடனராக வந்த சிவபெருமானின் திருவுருவத்தையும் ஆலயத்தில் தரிசிக்கலாம். கோயிலின் பிராகாரத்தில் உள்ள தூண்களில் சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகரின் திருஉருவங்களும், திருப்பணி செய்தவர்களின் திருவுருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இங்கு, தன் தேவியை மடியில் அமர்த்தியபடி அருளும் ஸ்ரீவல்லப உச்சிஷ்ட கணபதியையும் தரிசிக்கலாம்.

 

மேலும் வலம்புரி விநாயகர், சப்த கன்னியர், அறுபத்து மூவர், சோமாஸ்கந்தர், மகா கணபதி, பஞ்சபூத லிங்கங்கள், ஆறுமுகர், பிரம்மா, துர்கை, கஜலட்சுமி, பைரவர் ஆகியோருக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன. அம்பாள் சந்நிதியையொட்டி அமைந்துள்ள மண்டபத்தூண்களில், ஈசனின் ஊர்த்துவத் தாண்டவம் மற்றும் காளிதேவியின் சிற்பங்களைக் காணலாம்.

 

அம்பாள் பசும்பொன் மயிலம்மையும், நடராஜரும் தனிதனிச்சன்னதிகளில் தெற்கு பார்த்தபடி அருளுகின்றனர். வைகாசியில் பிரம்மோற்ஸவம் நடக்கும்போது தேரில் நடராஜர் மட்டும் எழுந்தருளி வீதியுலா வருகிறார். அவருடன் அம்பாள்கூட வருவதில்லை. இது வித்தியாசமானதாகும்.

 

தொண்டு பாடியும் தூமலர் தூவியும்

 

இண்டை கட்டி இணையடி ஏத்தியும்

 

பண்டரங்கர் பராய்த்துறைப் பாங்கரைக்

 

கண்டு கொண்டடியேன் உய்ந்து போவனே

 

என்று அப்பர் பெருமான் பாடிய பராய்த்துறை பெருமானைப் பாடி பரவுகிறார்.

 

“பராய்த்துறை மேவிய பரனே போற்றி’’ என்று மாணிக்கவாசகரும் திருவாசகத்தில் பாடுகிறார்.

 

நீறு சேர்வதோர் மேனியர் நேரிழை

 

கூறு சேர்வதோர் கோலமாய்ப்

 

பாறு சேர் தலைக்கையர் பராய்த்துறை

 

ஆறு சேர்சடை அண்ணலே -

 

செல்வ மல்கிய செல்வர் பராய்த்துறைச்

 

செல்வர்மேல் சிதையாதன

 

செல்வன் ஞானசம்பந்தன் செந்தமிழ்

 

செல்வமாம் இவை செப்பவே - என்று

 

திருஞானசம்பந்தப் பெருமான் பாடிப் பரவுகிற பராய்த் துறை நாதர்- ‘தாருகாவனேஸ்வரர்’ என்றும் ‘செல்வர்’ என்றும் இவருக்குத் திருநாமங்கள் உண்டு.

 

தாருகாவனத்து முனிவர்கள் தந்த தீமைகளை ஏற்று, அபஸ்மாரத்தையும் ஆணவத்தையும் அடக்கி, பதிலுக்குச் சிவஞானம் என்னும் பெருஞ்செல்வத்தைத் தந்ததனால், இவர் ‘செல்வர்.’ கிழக்கு நோக்கிய மூலவர். அழகான சிவலிங்கத் திருமேனி. புரட்டாசி மாதம் 18ம் தேதி சுவாமியின் மேனியில் சூரிய ஒளி விழுகிறது.

 

தொடர்ந்து 8 திங்கட்கிழமைகள் இந்தக் கோயிலுக்கு வந்து, நெய் தீபம் ஏற்றி வழிபட்டு, சிவனாரின் திருமேனியில் அபிஷேகம் செய்யப்பட்ட விபூதியைப் பிரசாதமாகப் பெற்று உடலில் பூசிக்கொண்டால், தீராத சருமநோய்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் இங்குள்ள பஞ்சபூத சக்திகளின் உருவம் பதிக்கப்பட்ட தூண் ஒன்றில் கைவைத்து வேண்டினால், நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கையும் பக்தர்களிடையே நிலவுகிறது.

 

அம்பாளுக்கு, பசும்பொன் மயிலாம்பாள் என்றும் ஹேமவர்ணாம்பிகை என்றும் திருநாமங்கள். தெற்கு நோக்கிய சந்நிதி. அம்பாளின் திருநாமம் கவனிக்கத் தக்கது. பராசக்திக்கு ‘ஹைமவதி’ எனும் திருநாமம் உண்டு. ‘ஹிமவான் மகள்’ என்பதால் ஹைமவதி. தங்கம் போன்று பிரகாசிப்பவள் என்பதால் (ஹைமம், ஹேமம்- தங்கம்) ஹைமவதி. உபநிடதத்தில்தான் இந்தப் பெயர் முதன் முறையாகக் காணப்படுகிறது. தேவேந்திரனும் தேவர்கள் பிறரும் ஈசனை உணரத் தெரியாமலும் ஞானம் இல்லாமலும் ஆணவத்தில் செருக்குண்டபோது, அவர்களுக்கு ஈஸ்வர வித்யையை உபதேசிப்பதற்காகத் தோன்றினாள் அம்பிகை. தங்க வண்ணத்தில் பளபளத்துக் கொண்டு தோன்றிய அவளுக்கு ‘உமா ஹைமவதி’ என்று பெயர்.

 

தேவர்களுக்கு, சிவஞானத்தை உணர்த்தத் தோன்றினாள் அங்கு; இங்கு பராய்த்துறையிலும் சிவஞானத்துக்கு வழிகாட்டுவதால்தானோ என்னவோ ஹேமவர்ணாம்பிகை என்று திருநாமம்! பசும்பொன் மயிலாம்பாள் என்ற தமிழ்ப் பெயரைச் சொல்லச் சொல்ல நாமணக்கிறது.

 

பிட்சாடனராக வந்த சிவன் அர்த்த மண்டபத்தில் உற்சவர் வடிவில் இருக்கிறார். முன்மண்டபத்தில் 12 ராசிகள் குறித்த கட்டம் மேல் விதானத்தில் இருக்கிறது. இதற்கு கீழே நின்றுகொண்டு சிவலிங்கத்தையும், பிட்சாடனாரையும் ஒரே நேரத்தில் வழிபட்டால் ராசி மற்றும் கிரகதோஷங்கள் நீங்கும் என்கிறார்கள்.

 

பிரகாரத்திலும் பிட்சாடனார் சிலை இருக்கிறது. பல்லாண்டுகளுக்கு பின்பு இத்தலம் பராய் மரங்கள் நிறைந்த வனமாக இருந்தபோது, சிவலிங்கம் இருந்ததைக் கண்டு கோயில் எழுப்பப்பட்டது. சுவாமியும் “பராய்த்துறை நாதர்” என்று பெயர் பெற்றார்.

 

கருவறைக்கு பின்புள்ள பிரகாரத்தில் தலவிருட்சம் பராய் மரத்தின் அடியிலும் ஒரு சிவலிங்கம் இருக்கிறது. இந்த மரத்தின் அடியில் சிவன் காட்சி தந்ததாக சொல்கிறார்கள். இந்த தெய்விக மரத்தைச் சுற்றிவந்து வழிபடும்போது, புற்றுநோயைக் குணப்படுத்தும் சில நுண்துகள்களை வெளியிடுவதாக நம்புகின்றனர் பக்தர்கள். மேலும், இந்த மரத்தை வலம் வந்து வழிபடுவதால், தோல் நோய்கள் குணமடையும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

 

இந்தக் கோயிலின் தல விருட்சம் பராய் மரம், கேட்டை நட்சத்திரத்துக்கு உரிய விருட்சம் ஆகும். கேட்டை நட்சத்திரக்காரர்கள் பராய் மரத்தடியில் சிறிது நேரம் அமர்ந்தால், பிணிகளும் நட்சத்திர தோஷமும் நீங்கும்; தேக வலிமை கூடும் என்கிறது வானவியல் சாஸ்திரம்.

 

இதன் இலை துவர்ப்பாகவும், பால் இனிப்பாகவும் இருக்கும். இந்த இலையானது, சீதபேதி மற்றும் ரத்த பேதியை குணமாக்கும். பராய் மரத்துப் பால், கால் வெடிப்புகளைச் சரியாக்கும்.

 

வடமாநிலங்கள் மற்றும் பர்மாவில், தேயிலைக்கு மாற்றாக பராய் இலையைப் பயன்படுத்துகின்றனர். அந்தத் தேயிலை, ஆண்மையை அதிகரிக்கும் என்கிறது ஆயுர்வேதம். பராய் வேரைப் பாம்புக்கடி முறிவு மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். பராய் மரத்துப் பாலைப் பூசுவதால் தலைவலி நீங்குகிறது. இதன் பழங்களை இடித்து, கண் நோய் நீங்கப் பயன்படுத்து கிறார்கள். விதைகளை அரைத்துக் களிம்பாக்கி, வெண்குஷ்டம் அகலப் பூசுவார்கள். மூக்கிலிருந்து ரத்தம் வடிதல், மூலம், பேதி ஆகியவற்றைக் கட்டுப்படுத்த இந்த விதைகள் மருந்தாகின்றன.

 

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரியார் ஆகியோர் இத்தலம் மற்றும் சுவாமியைக் குறித்து பாடியுள்ளார். இத்தலத்தின் அருகேயுள்ள காவேரியை “அகண்ட காவேரி” என்கின்றனர். இங்கிருந்து சுமார் 2 கி.மீ., தூரத்தில் காவேரி, கொள்ளிடம் என இரண்டு நதிகளாக இது பிரிகிறது.

 

திருப்பராய்த்துறை என்ற பெயரைச் சொன்னாலே நினைவுக்கு வருவது ஒன்று உண்டு. குடகு மலைப் பகுதிகளில் உற்பத்தியாகிப் பாய்ந்து வருகிற காவிரிப் பெண், தனது உபநதிகளுடன் சேர்ந்து, மிகவும் அகலமானவளாக மாறுகிற இடம் திருப்பராய்த்துறை. அகண்ட காவிரி என்ற பெயர், இங்குதான் ஏற்படுகிறது.

 

இங்கிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கிற காவிரி, சுமார் அரை கி.மீ. தொலைவில் காவிரியாகவும் கொள்ளிடமாகவும் பிரிந்து விடு கிறாள். அதன் பின்னர், நிறையக் கிளை நதிகளும் கால்வாய்களும் ஏற்பட்டு விடுகின்றன. எனவே, காவிரி நல்லாளின் முழுமையான மகிமையும் பரிமாணமும் திருப்பராய்த்துறையிலேயே உள்ளது என்பது பெரியோர்களின் நம்பிக்கை.

 

வருடம் முழுக்க காவிரியில் நீராடினாலும், துலா (ஐப்பசி) ஸ்நானத்துக்குச் சிறப்பு உண்டு. சூரியன், துலா ராசிக்குள் பிரவேசிக்கும் மாதம் ஐப்பசி. இந்தச் சந்தர்ப்பத்தில், பருவ மாற்றம் காரணமாகக் காவிரியில் நீர் வரத்தும் அதிகரிக்கும்; நீர் சற்றே கலங்கி பல்வேறு தாதுக்களைத் தாங்கி வரும். இதனால் தாதுக்களின் சக்தியும் கலங்கிய மண்ணின் வளமும் அதிகரிக்கும். இந்தக் காலகட்டத்தில், காவிரியில் ஸ்நானம் செய்வது உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் தருவதாகும்.

 

துலா நீராடல், தமிழகத்தில் இரண்டு இடங்களில் இரண்டு சந்தர்ப்பங்களில் பிரசித்தமானது. ஒன்று, ஐப்பசி மாதத் தொடக்கத்தில் நடைபெறும் முதல் முழுக்கு; அடுத்தது, ஐப்பசி மாதக் கடைசியில் நடைபெறும் கடை முழுக்கு.

 

ஐப்பசி முதல் தேதி, திருப்பராய்த்துறையில் முதல் முழுக்கும், கடைசித் தேதி மயிலாடுதுறையில் கடை முழுக்கும் போடவேண்டும் என்பது ஐதீகம்.

 

கொங்கு நாட்டுப் பகுதிகளைத் தாண்டும் வரை, காவிரி அடிக்கடி திசை மாறிக் கொண்டு, வளைந்து நெளிந்து கொண்டு, குண்டும் குழியும் ஏறி வருகிறாள். கொடுமுடிப் பகுதியில், காவிரிப் பெண் முழுவதுமாகக் கிழக்கு நோக்கித் திரும்புகிறாள். அதன் பின்னர் அவளின் ஆர்ப்பாட்டமும் சற்றே குறைகிறது.

 

இளம் பெண்ணாகத் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தவள், கிழக்கே திரும்பிப் பாயும்போது, தாய்மையின் வாத்சல்யத்தோடு அகன்று அரவணைத்துப் பல்கிப் பெருகி விடுகிறாள். ‘நாடெங்குமே செழிக்க, நன்மையெல்லாம் சிறக்க, நடந்தாய் வாழி காவேரி!’ என்று அவள் நடந்து வருவதும், வருபவர்களை அன்புடன் அரவணைப்பதும் அகண்ட காவிரியாக மாறுகிற திருப்பராய்த்துறைப் பகுதியில்தான் நடக்கிறது. அதனால்தான் இங்கு, துலா முதல் முழுக்கிட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

 

காவிரி தல புராணத்தின்படி, காவிரி, அகத்தியரின் மனைவி. லோபாமுத்திரை என்பதும் இவள் பெயரேயாகும். அகத்தியரிடம் பல வரங்களைப் பெற்று, அவற்றைப் பலருக்கும் வாரி வழங்கும் நிலையில் அகண்ட காவிரி என்று அழைக்கப்படுகிறாள்.

 

‘சூரியன் துலா விஷவை அடையும் போது பசுவின் நாக்கு போன்ற தன்மையைக் கொண்ட இலைகளோடு கூடிய பராய் மரத்துப் பராய்த்துறைத் தலத்தில் காவிரி நீராடினால், பாவங்கள் தொலையும்’ என்று பிரம்மோத்தர காண்டம் என்னும் நூல் தெரிவிக்கிறது.

 

‘இந்தியாவின் தூளியும் காற்றும் புனிதமானவை; இந்தியாவே ஒரு புண்ணிய தீர்த்தம்’ என்றார் சுவாமி விவேகானந்தர்; இந்தியத் தீர்த்தங்களுள் ஒரு புண்ணிய தீர்த்தமாம் திருப்பராய்த்துறையின் புனிதத் தூளியை அனுபவித்த பெருமிதத்தோடு மீண்டு வருகிறோம் (தூளி என்றால் ‘பாதம் பட்ட இடம்’ என்று பொருள் கொள்ளலாம். தன் பக்தர்களின் பாதம் பட்ட தூளியை- அதாவது மண்ணை எடுத்து வைத்து ஸ்ரீகண்ணபிரான் தினமும் பூஜை செய்வதாக ஒரு கதை சொல்லப்படுவதுண்டு).

 

திருப்பராய்த்துறை ஐப்பசி துலாஸ்நானம் முதல் முழுக்கு!!

 

''திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், பட்டினத்தார் ஆகியோர் பாடிப் போற்றிய திருத்தலம் இது. வைகாசி மாதம், பத்து நாள் பிரமோத்ஸவம் இங்கே சிறப்புற நடைபெறும்.

 

ஐப்பசியின் முதல் நாள் (முதல் முழுக்கு) திருப்பராய்த்துறையிலும், ஐப்பசியின் கடைசி நாள் (கடை முழுக்கு) கார்த்திகை முதல் நாள் (முடவன் முழுக்கு) மயிலாடுதுறையில் காவிரி துலா ஸ்நானம் விசேஷமாக நடைபெறும்.

 

பராய்த்துறைக்கு வந்து தரிசித்தால் பாவங்கள் நீங்கப் பெறும் என்பது ஐதீகம். அந்த நாளில், ஸ்வாமியும் அம்பாளும் வெள்ளி ரிஷப வாகனங்களில் எழுந்தருள்வார்கள். அப்போது காவிரியில் எண்ணற்ற பக்தர்கள் வந்து தரிசனம் செய்து, பாவங்கள் நீங்கப் பெறுவார்கள்!!''

 

நதிக்கரை தலம் என்பதால், பித்ருக்கள் ஆராதனைக்கும் உகந்த தலம் இது எனச் சொல்கிறார்கள் பெரியோர்கள். இந்நாளில் காவேரியில் நீராடி சுவாமியை வணங்கினால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. நாமும் பராய்த்துறைக்குச் சென்று நாதனை வேண்டி, பாவங்கள் நீங்கப் பெறுவோம்!!

 

எப்படிச் செல்வது?

 

திருச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலையில் சுமார் 24 கி.மீ. தொலைவில் உள்ளது, திருப்பராய்த்துறை. திருச்சி - சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பராய்த்துறை செல்ல நகரப் பேருந்துகள் உள்ளன. திருப்பராய்த் துறை பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால், நடந்து செல்லும் தூரத்தில் இருக்கிறது கோயில்.

 

நடை திறந்திருக்கும் நேரம்: தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரை; மாலை 4 முதல் இரவு 8 மணி வரை.

.
மேலும்