சுவாமி ஐயப்பன் சபரிகிரிவாசனாக பிரம்மச்சரிய விரதம் பூண்டு இருந்தாலும், அவர் அநேக அவதாரங்கள் எடுத்திருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. அவற்றில் சிறப்பான பத்து வடிவங்கள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
ஆதி பூதநாதர்: இவர் பொதுவாக ஐயனார் என்று அழைக்கப்படுவார். கிராமங்களில் எல்லைத் தெய்வமாக அமர்ந்து காத்தருள்பவர். காலத்தே மழை பெய்விக்கச் செய்து பயிர்கள் செழிக்க அருள்பவர். பஞ்சம் நீங்கி பசுமை நிலவ இவரே காரணம்.
சம்மோஹன சாஸ்தா: பக்தர்களின் இல்லத்தை காப்பவர். இல்லத்தில் ஒற்றுமையை ஓங்கச் செய்பவர். குடும்ப அமைதிக்குக் காரணமாக விளங்குபவர்.
கல்யாண வரத சாஸ்தா: தடைப்பட்ட திருமணங்கள் நடைபெற அருள்புரிபவர். செவ்வாய் தோஷத்தினால் ஏற்படும் உபாதைகளை நீங்கச் செய்பவர். இவரை வழிபட்டால் மங்கலங்கள் யாவும் வசப்படும்.
வேத சாஸ்தா: கலைகளில் ஞானம் பெற உதவுபவர். புத தேவன் போல, சாஸ்திர ஞானம் அருளி வேதம் தழைக்க வழிவகுத்து, வேதத்தின் சொற்படி நம்மை வழிநடத்தி செல்பவர்.
ஞான சாஸ்தா: கல்லால மரத்தின் கீழ் சீடர்களுடன் எழுந்தருளியிருப்பவர். மாணிக்க வீணையை கையில் ஏந்தி மேதா தட்சிணாமூர்த்தியாய் குரு பகவான் ஸ்தானத்தில் அமர்ந்து வணங்குவோருக்கு கல்வி அறிவை அருள் செய்பவர்.
பிரம்ம சாஸ்தா: சந்தான பாக்கியம் பெற அருளும் நாயகனாய் பிரம்ம சாஸ்தாவாய் சுக்கிரன் போல, சுடர்மிகு தேஜஸுடன் காட்சி தந்து அருள்புரிபவர்.
ஸ்ரீ தர்ம சாஸ்தா: பக்தர் தம் தவறுகளைக் களைந்து, பிழைகள் பல பொறுத்து ஞானமும், மவுனமும் உபதேசித்து, ஜாதி, மத பேதமின்றி தடுத்தாட்கொண்டு முக்தி நிலை அருள்பவர். சனி பகவானின் உபாதைகளை நீங்கச் செய்பவர்.
மஹா சாஸ்தா: இவரை வணங்கினால் வாழ்வில் முன்னேற்றம் அடைவார்கள். ராகுவினால் ஏற்படும் கிரக தோஷம் நீங்கும். மிகுந்த வல்லமை படைத்தவர்.