"பக்தரின் மாரடைப்பைப் போக்கிய மகா பெரியவா 'பாத மண்" - காஞ்சி மகா பெரியவா

By News Room

("நீங்க எதைப்பத்தியும் கவலைப்பட வேண்டாம். எல்லாத்தையும் பெரியவா பாத்துப்பா! ஒங்களுக்காக அருமையான மருந்து ஒண்ணை எடுத்துண்டு வந்திருக்கேன். இதை நான் எடுத்துண்டு வந்தேன்னு சொல்றதைவிட, பரமாசார்யா என் மூலமா அனுப்பவைச்சிருக்கார்னுதான் சொல்லணும்!"

காசி யாத்திரை பண்ணிட்டு கங்கா ஜலத்தை எடுத்துண்டு வந்த ஒரு பக்தர், தன் தாயோரோட அபிலாஷைப்படி அதை பரமாசார்யாகிட்டே சேர்ப்பிச்சதை போன வாரம் படிச்சது நினைவிருக்கா? அதைத் தொடர்ந்து நடந்ததுதான் மகாபெரியவா துங்கபத்ராவுல மூழ்கி ஸ்நானம் பண்ணினப்போ கங்கா ஜலத்தையும் சிரசுல ஊத்திண்டு குளிச்சார் இல்லையா? ஸ்நானம் ,அனுஷ்டானம் எல்லாம் முடிஞ்சதும் அப்படியே ஆற்று மண்ணுல நடந்து முகாம் இருந்த ஸ்தானத்துக்குப் புறப்பட்டார்.

இந்த சமயத்துல கங்கா ஜலத்தை எடுத்துண்டு வந்து தந்திருந்தாரே அந்த பக்தர், மகாபெரியவாளோட திருப்பாதம் பதிஞ்சிருந்த தடத்தைப் பார்த்தார்.

அந்த பக்தருக்கு எதோ பொறிதட்டினாப்புல இருந்தது. பரமாசார்யா இது தனக்காகவே தந்திருக்கிற பிரத்யேக பிரசாதம்னு அவருக்குத் தோணித்து. உடனே ஆசார்யா பாதம் பதிஞ்சிருந்த மண்ணை அப்படியே சேகரிச்சு எடுத்து,தன்கிட்டே இருந்த பட்டுத்துணி ஒண்ணுல வைச்சு முடிச்சா கட்டி எடுத்துண்டார்.

அதை அப்படியே வீட்டுக்குக் கொண்டுபோய் பூஜை அறையில பத்திரமா வைச்சார். தினமும் சுவாமிக்கு பூஜை ஆரத்தி பண்றச்சே அந்தத் திருவடித் தூளிக்கும் காட்டுவார். மனசார மகாபெரியவாளை வேண்டிப்பார். பரமாசார்யா அனுகிரஹத்தால் வாழ்க்கை எந்த சிரமும் இல்லாம ஓடிண்டே இருந்தது.

இந்த சமயத்துல ஒருநாள் அவருக்கு அதிர்ச்சியான தகவல் ஒண்ணு வந்தது. அது, அவரோட நண்பர் ஒருத்தர் கடுமையான ஹார்ட்  அட்டாக்னால பாதிக்கப்பட்டு, மெட்ராஸ்ல ஒரு ஆஸ்பத்ரியில அனுமதிக்கப்பட்டிருக்கார்ங்கற தகவல்.

குஜராத்தியான அந்த நண்பர், தன்னோட குலதெய்வமா மகாபெரியவாளை கும்பிடக்கூடியவர். மகாபெரியவாளோட ஆணைப்படி ஹிந்து தர்ம சாஸ்திரத்தை சமஸ்கிருதத்துல இருந்து குஜராத்தியில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தவர். அவருக்குத்தான் இப்படி ஒரு சோதனை வந்திருந்தது. உடனே நண்பரைப் பார்க்க புறப்பட்டார்.

'பரமாசார்யாளோட பாததூளியை கூட எடுத்துண்டு போவோம், எதுக்கும் பாதுகாப்பாக  இருக்கும்!'ன்னு தோணினதால எடுத்துண்டு புறப்பட்டார்.

நண்பரைப் பார்க்க மருத்துவமனைக்குப் போனார் இவர். அங்கே அவர் ரொம்ப நிலைகுலைஞ்சு மனசு உடைஞ்சு படுத்துண்டு இருந்தார். மூன்றாவது முறையா ரொம்பவே சிவியரா மாரடைப்பு வந்திருக்கறதால டாக்டர்கள் பெரிய ஆபரேஷன் பண்ணணும்னு சொல்லி இருக்கறதாகவும், அந்த ஆபரேஷன் பண்ணினாலும் பிழைக்கறதுக்கு உத்திரவாதம் இல்லை!'ன்னும் சொல்லி வேதனைப்பட்டார்.

எல்லாத்தையும் கேட்டுண்டு இருந்தவருக்கு இப்பவும் ஒரு எண்ணம் தோணித்து."நீங்க எதைப்பத்தியும் கவலைப்பட வேண்டாம். எல்லாத்தையும் பெரியவா பாத்துப்பா!

ஒங்களுக்காக அருமையான மருந்து ஒண்ணை எடுத்துண்டு வந்திருக்கேன்.இதை நான் எடுத்துண்டு வந்தேன்னு சொல்றதைவிட, பரமாசார்யா என் மூலமா அனுப்பி வைச்சிருக்கார்னுதான் சொல்லணும்!"

சொன்னவர், மகாபெரியவாளோட பாததூளியை எடுத்து, ஜயஜய சங்கரஹரஹர சங்கரன்னு சொல்லிண்டே நண்பரோட மார்புல தடவிவிட்டார். வலி குறையாட்டாலும் மனசுலேர்ந்து ஏதோ பாரம் குறைஞ்ச உணர்வுல அப்படியே தூங்கிப்போனார் குஜராத்திக்காரர்.

மறுநாள் கார்த்தால,ஆபரேஷனுக்கு முன்னால செய்யக்கூடிய வழக்கமான பரிசோதனைகளைச் செய்ய ஆரம்பிச்ச மருத்துவமனை ஊழியர்களுக்கு ஒரே ஆச்சரியம். அவசர அவசரமா ரிப்போர்ட்டுகளை எடுத்துண்டுபோய் பெரிய டாக்டர்கள்கிட்டே காட்டினர். அவாளுக்கும் என்ன ஏது? எப்படி இது நடந்ததுன்னு புரியலை. ஏன்னா, எல்லா ரிசல்டும்,அவர் பூரண ஆரோக்யமா இருக்கறதாகவும் அவரோட இதயம் ரொம்ப சீராக இயங்கறதாகவும்  காட்டித்து.

"என்ன இது ஆச்சரியம்! நீங்க அட்மிட் ஆனப்போ, ரொம்ப சீரியஸ் கண்டிஷன்ல இருந்தீங்க! இப்போ எல்லாமே நார்மல் ஆயிட்டதா ரிசல்ட் வருதே.எங்களுக்குத் தெரியாம வெளிலேர்ந்து வேற ஆயுர்வேதா,அது இதுன்னு ஏதாவது மருந்து எடுத்துக்கிட்டீங்களா!?"

மருத்துவர்கள் அவர்கிட்டே கேட்கக் கேட்க, அவருக்கு ஒரு விஷயம் முழுசா புரிய ஆரம்பிச்சுது. மகாபெரியவா மேல தான் வைச்சிருந்த நம்பிக்கை, அதோட நண்பர் எடுத்துண்டு வந்து தன் மார்புல தடவின மகாபெரியவாளோட பாததூளியோட மகிமை எல்லாமா சேர்ந்து தன்னை குணப்படுத்திடுத்து என்பதை அவர் புரிஞ்சுண்ட கணத்துல அவரோட கண்ணுலேர்ந்து நீர் பெருகி வழிய ஆரம்பிச்சுது. விஷயத்தை டாக்டர்கள் கிட்டே சொன்னார்.அப்படியே காஞ்சிபுரம் இருக்கிற திசையில திரும்பி சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணினார்.

தன்னை மீறி உரத்த குரல்ல ஜயஜய சங்கர,ஹரஹர சங்கரன்னு அவர் சொல்லத் தொடங்க, அதை தடுக்காம, டாக்டர்களும் சேர்ந்து சொல்லத் தொடங்கினர்.

"ஜயஜய சங்கர ஹரஹர சங்கர"

குஜராத்தி நண்பரிடம் பெரியவா பக்தர்) நன்றி-குமுதம் லைஃப் தொகுப்பு-எஸ்.வெங்கட்டராமன். 13-09-2017 தேதியிட்ட இதழ். தட்டச்சு-வரகூரான் நாராயணன்

இலவச வரன் பதிவுக்கு கணேசன் மேட்ரிமோனி ganesanmatrimony.com

.
மேலும்