இறைவர் திருப்பெயர் : கண்ணாயிரமுடையார், கண்ணாயிரநாதர் இறைவியார் திருப்பெயர் : முருகுவளர்கோதை, சுகந்தகுந்தகுந்தளாம்பிகை கருவறையில் மூலவர் கண்ணாயிரநாதர் கிழக்கு நோக்கி சுயம்புத் திருமேனியுடன் எழுந்தருளியுள்ளார். பாணப்பகுதி சற்று உயரமாக உள்ளது. பெயருக்கேற்பத் திருமேனி முழுவதிலும் கண்கள் போன்று பள்ளம் பள்ளமாக உள்ளன.
தல வரலாறு:
தேவர்களின் தலைவனான இந்திரன், கெளதம முனிவரின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டு, முனிவரின் வேடத்தில் அகலிகையுடன் சந்தோஷமாக இருந்தான். வந்திருப்பது தன் கணவர் அல்ல என்பது தெரிந்தும், இந்திரன் மீது கொண்ட ஆசையினால் தவறு செய்ய அகலிகையும் சம்மதித்தாள். நடந்ததை அறிந்த முனிவர் கோபம் கொண்டு, இந்திரன் உடல் எங்கும் பெண் குறிகள் உண்டாகும் படி சபித்தார். அதன் பின் அகலிகையை கல்லாகும் படி சபித்து விட்டார். தவறை உணர்ந்த அகலிகை சாப விமோசனம் கேட்க, "ராமரின் திருவடி பட்டதும் சாபவிமோசனம் கிடைக்கும்" என்றார் முனிவர். இந்திரன் தனக்கு ஏற்பட்ட இந்த துன்பத்திற்கு பரிகாரம் வேண்டி பிரம்மாவிடம் சென்றான். அதற்கு பிரம்மா குறுமாணக்குடி சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற வழி கூறினார். இந்திரனும் இத்தல தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட, அவனது ஆயிரம் பெண் குறிகளும் ஆயிரம் கண்களாகத் தோன்றுமாறு அருள் செய்தார். இந்திரனின் சாபம் தீர்ந்தது. எனவே இத்தல இறைவன் "கண்ணாயிரமுடையார்" என்று பெயர் பெற்றார். வாமன அவதாரம் எடுத்த திருமாலும் இத்தலத்தில் லிங்கம் ஸ்தாபித்து வழிபட, அவருக்கும் அருள் செய்ததால் இத்தலத்திற்கு குறுமாணக்குடி என்ற மறு பெயரும் உண்டாயிற்று.
திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
"திருக்கண்ணார் கோயிலைக் கைகளால் தொழுது வணங்குவாரைத் துன்பங்களும் பாவங்களும் அணுகாது, நல்வினைகளும் அவற்றின் பயனான இன்பங்களும் வந்தடையும், இத்தல இறைவனை வழிபடுபவர்களுக்கு எமனால் வரும் துன்பங்கள் இல்லை, இத்தல இறைவனை வழிபடுகவர்கள் தம் உள்ளத்தில் மலம் நீங்கப் பெற்றவராய் வானுலகில் இனிது உறைபவராவர், இப்பதிகப் பாடல்கள் பத்தினாலும் போற்றி வழிபட வல்லவர்கள், தம் மேல் வரும் பழிகள் நீங்கப் பெறுவர்." என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் கூறியுள்ளார்.
அம்பாள் சன்னதிக்கு எதிர்புறம் மண்டபத்தில் மேற்கூரையில் 12 ராசிகளுக்கான ராசி கட்ட சிற்பங்கள் உள்ளன. இக்கோயிலில் அவரவர் ராசிக்கு நேரே அம்பாளுக்கு 21 தீபங்கள் ஏற்றி வழிபட திருமணத்தடை காரியத்தடைகள் நீங்குவதாக ஐதீகம் .
சீர்காழிக்கு அருகில் உள்ள வைத்தீஸ்வரன்கோவில் என்ற பாடல் பெற்ற தலத்தில் இருந்து தென்கிழக்கே சுமார் 5 கி.மி. தொலைவில் திருக்கண்ணார்கோவில் சிவஸ்தலம் உள்ளது.
வைத்தீஸ்வரன்கோவில் - மாயவரம் சாலையில் பாகசாலை என்ற ஊர் வரும். அங்கிருந்து பிரியும் சாலையில் 2 கி.மி. தொலைவில் திருக்கண்ணார்கோவில் உள்ளது. சிதம்பரம் - மயிலாடுதுறை சாலை மார்க்கத்தில் உள்ள கதிராமங்கலம் என்னும் இடத்தில் இருந்து 5 கி. மி. சென்றாலும் இத்தலத்தை அடையலாம்.