குழந்தை வரமளிக்கும் கார்கோடேஸ்வரர் திருக்கோயில், திருநல்லூர்

By nandha

தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகே உள்ள திருநல்லூரில் கார்கோடேஸ்வரர் கோயில்  அமைந்துள்ளது. இந்த கோயிலில் இறைவனாக கார்கோடேஸ்வரரும்  இறைவியாக காமரதிவல்லி என்னும் காமரசவல்லி அம்மனும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

இத்தலம், பிரிந்த தம்பதியை சேர்த்து வைக்கும் தலமாகவும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் அளிக்கும் கோயிலாகவும் விளங்குகிறது.

பழைமை வாய்ந்த இந்த தலம், கடக ராசிக்காரர்களுக்கு பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது.

பாம்புகளின் அரசனான ஸ்ரீ கார்கோடகன் இக்கோயிலுக்கு வந்து சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருந்ததால் இங்குள்ள இறைவனுக்கு கார்கோடேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.

காமக்கடவுளான மன்மதனுக்கு உயிர்பிச்சை வேண்டி அவரது மனைவி ரதிதேவி வழிபட்டதால் இங்குள்ள அம்மனுக்கு காமரதிவல்லி என்ற திருநாமம் ஏற்பட்டது.

இக்கோயிலானது கி.பி. 962 - ஆம் ஆண்டு சுந்தரசோழன் (கி.பி. 957 - 974) கட்டியதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.

தலவரலாறு:

 முன்பு ஒருமுறை பாம்புகளின் அரசனான கார்கோடகன்,  முனிவர் ஒருவருக்கு துன்பம் செய்தான். இதனால் கோபப்பட்ட முனிவர் தொழு நோயால் அவதிப்படுவாய் என்று  கார்கோடகனை சபித்தார். தன்னுடைய சாப விமோசனத்திற்காக கார்கோடகன் மஹா விஷ்ணுவிடம் சென்று முறையிட்டான்.

மஹாவிஷ்ணு, "கார்கோடீஸ்வரம் சென்று சிவனை நோக்கி தவம் இருந்தால் நோய் நீங்கிவிடும்' என்றார்.

அதன்படியே கார்கோடகன் கார்கோடீஸ்வரம் வந்து சிவனை நோக்கி கடும் தவம் இருந்தான்.

 அவனது தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு சாப விமோசனம் அளித்தார்.

அப்போது பாம்புகளின் அரசனான கார்கோடகன் இவ்வூரில் உள்ள சிவபெருமானை கட்டிப்பிடித்து தன்னை காப்பாற்றும்படி வேண்டிக்கொண்டான்.

அப்போது இறைவன்,  "இத்தலத்தில் எவரையும் நாகம் தீண்டக்கூடாது. காளசர்ப்பதோஷம், நாகதோஷம் இருக்கக்கூடாது. பாம்பு கடித்து யாரும் இறக்கக் கூடாது'' என்று கார்கோடகனிடம் கூற, அதைக்கேட்ட கார்கோடகன் அப்படியே நடப்பதாக கூறி இறைவனிடம் அதற்கான வரத்தையும் பெற்றுக்கொண்டான்.  

திருமணத்தடை, உத்தியோக தடை, பிரிந்த தம்பதிகள்,  குழந்தையின்மை, மனவளர்ச்சிக் குறைந்த குழந்தைகள் போன்ற குறைகளை நீக்கி நன்மை பயக்கும் சிறந்த பரிகாரத் தலமாக இத்தலம் விளங்குகிறது.

மேலும் தாம்பத்ய உறவு சரியில்லாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வந்து வேண்டிக்கொண்டு பலன் பெறுகின்றனர்.  ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம் பௌர்ணமி தினத்தில் காமன் பண்டிகை இங்கு கொண்டாடப்படுகிறது.

தஞ்சை மாவட்டம், திருவையாறில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவிலும்; அரியலூரில் இருந்து 18 கி.மீ. தொலைவிலும் இவ்வாலயம் உள்ளது.  தஞ்சையில் இருந்தும் திருவையாறில் இருந்தும் இத்தலத்திற்குச் செல்ல பேருந்து வசதி உண்டு...

.
மேலும்