கருடனுக்கு வந்த சந்தேகம் தெளிவுபடுத்திய பகவான் விஷ்ணு!

By saravanan

கருடன் விஷ்ணுவைப் பார்த்து, “பிரபுவே! பிதுர்க்களுக்கு எங்களைப் போன்ற உடம்பு இல்லை. அப்படி இருக்க நாம் சமர்ப்பிக்கும் பிண்டங்களை, உணவை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்” என்று சொல்வது எப்படிப் பொருந்தும் என்று கேட்க, விஷ்ணு விடை கூறினார்.

"கருடா பிதுர்க்களுக்கு பூமியில் உள்ளவர்களைப் போல உடம்பு இல்லை என்பது உண்மைதான். ஆனால் சிராத்தச் சடங்கில் பிராமணர்களை அழைத்து, உணவு பரிமாறுகிறார்கள் அல்லவா? வருகின்ற பிதுர்க்கள் இந்த பிராமணர்களின் உடம்பில் புகுந்து உணவை ஏற்றுக் கொண்டு போய் விடுகிறார்கள். ராமன் சிரார்த்தச் சடங்கு செய்த கதையை உனக்குச் சொல்கிறேன், கேள். அசல் பதிவேற்றியவருக்கு நன்றி.

ராமன், இலக்குவன், சீதை ஆகிய மூவரும் காட்டில் இருக்கும் பொழுது தசரதன் இறந்து விட்ட செய்தி ராமனுக்குக் கிட்டியது. அப்பொழுது எளிய உணவைச் சமைத்து, முனிவர்களை அழைத்து அவர்களுக்கு உணவு கொடுக்கத் தயாரானான் ராமன். முனிவர்கள் உண்ண அமர்ந்தவுடன், பரிமாற வேண்டிய சீதை எங்கும் காணப்படவில்லை. நேரம் ஆகிக் கொண்டிருந்தபடியால், ராமனே அவர்களுக்குப் பரிமாறி, அவர்கள் உண்டபின் அனுப்பிவிட்டான். வந்தவர்கள் உண்டு போனபின் சீதை இராமனிடம் வந்தாள். பரிமாற வேண்டிய நீ எங்கே போய்விட்டாய் என்று ராமன் கேட்டான்.

இங்குள்ள முனிவர்களைத்தான் நீங்கள் அழைத்தீர்கள் அவர்கள் தாம் வருகிறார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்தேன். என்னுடைய மாமனார். அவர் தகப்பனார், அவருடைய தகப்பனார் ஆகிய மூவரும் வந்து உட்கார்ந் திருந்தார்கள். மாமன்மாரின் எதிரே இந்த மரவுரியைக் கட்டிக் கொண்டு வர வெட்கமாக இருந்தது. மேலும் பெரிய அரசராகிய அவருக்கு மிக எளிய உணவைத் தருவதற்கு மிகவும் வெட்கமாக இருந்தது. அதனால்தான் ஒடி ஒளிந்து கொண்டேன்’ என்று சொன்னாள்.

நம்முடைய பிதுர்க்கள் நாம் அழைக்கும் விருந்தினர்கள் உடம்பில் புகுந்து கொண்டு நாம் அளிக்கும் உணவை உட்கொள்ளுகிறார்கள் என்பதை நீ தெரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறி முடித்தார் ஸ்ரீ மகாவிஷ்ணு.

.
மேலும்