பகவான் கிருஷ்ணன் தர்மத்தை நிலை நாட்டுவதற்காக, அதர்மத்தை அழிப்பதற்காக, பக்தர்களுக்காக யுகங்கள் தோறும் அவதரிக்கின்றான் !
ஒரு யுகத்தில் மீனாக வந்தான் ! ஒரு சமயத்தில் ஆமையாக வந்தான் ! ஒரு காலத்தில் வராஹமாக வந்தான் ! ஒரு சந்தர்ப்பத்தில் நரசிம்மனாக வந்தான் ! ஒரு நேரத்தில் வாமனனாக வந்தான் ! ஒரு அவசியத்தில் பரசுராமனாக வந்தான் ! ஒரு வேகத்தில் ராமனாக வந்தான் ! ஒரு தேவையில் ஹயக்ரீவனாக வந்தான் ! ஒரு ரஹஸ்யத்தில் மோஹினியாக வந்தான் ! ஒரு தவிப்பில் சனத்குமாரர்களாக வந்தான் ! ஒரு ஆசையில் வேதவ்யாசராக வந்தான் ! ஒரு கணக்கில் கபிலராக வந்தான் ! ஒரு கோபத்தில் நர-நாராயணனாக வந்தான் ! ஒரு க்ருபையில் ஸ்ரீ ஹரியாக வந்தான் ! ஒரு யோசனையில் சுகப்ரும்மமாக வந்தான் ! ஒரு அவசரத்தில் தன்வந்த்ரியாக வந்தான் ! ஒரு காரணத்தில் விஷ்ணுவாக வந்தான் ! ஒரு காதலில் கிருஷ்ணனாக வந்தான் ! இதுபோல் பல கோடி அவதாரங்கள் பகவான்கிருஷ்ணன் எடுத்துவிட்டான் ! இன்னும் பல கோடி அவதாரங்கள் பகவான் கிருஷ்ணன் எடுத்திருக்கிறான் ! கலியுகத்திலும் பல கோடி அவதாரங்கள் உண்டு ! மனிதரூபமில்லாமல் பலமுறை கலியுகத்தில்,இந்த பூமியில் வந்திருக்கிறான் ! நாராயண தீர்த்தரின் வயிற்று வலியை தீர்க்க வெள்ளைப் பன்றியாக வந்தான் ! ஏகநாதரிடம் பாலைவனத்தில் கங்கா ஜலம் வாங்கிக் குடிக்க கழுதையாக வந்தான் ! ஹாத்தீ ராம் பாவாஜீயை நிரூபணம் செய்ய சிறைச்சாலையில் யானையாக வந்தான் ! நாமதேவரிடம் ரொட்டியையும், சர்க்கரை கலந்த நெய்யையும் சாப்பிட நாயாக வந்தான் ! கனகதாசரின் பக்தியை நிரூபிக்க, பக்தர்கள் கூட்டத்தின் நடுவே பாம்பாக வந்தான் ! கர்மடாதேவியின் கற்பை மிலேச்சனிடமிருந்துக் காப்பாற்ற சிங்கமாக வந்தான் ! வாதிராஜரின் பக்தியில் மயங்கி, வயலில் விளையாடும் குதிரையாக வந்தான் ! துகாராமை ஆலிங்கனம் செய்து, அவருடைய பக்தியைப் பார்க்க கருநாகமாக வந்தான் ! பக்த வேஷமிட்ட கயவனிடமிருந்து சுரசுரீயைக் காப்பாற்ற புலியாக வந்தான் ! பூந்தானத்தின் கபடமற்ற பக்தியை மற்றவர்களுக்குப் புரிய வைக்க எருதாக வந்தான் ! இன்னும் எத்தனையோ சந்தர்ப்பங்களில் எத்தனையோ அவதாரங்கள் எடுத்திருக்கிறான் ! ஒவ்வொரு நாளும், ஓவ்வொரு இடத்தில், ஒவ்வொரு வேஷத்தில் கிருஷ்ணன் அவதரித்துக் கொண்டு தான் இருக்கிறான் ! பல சந்தர்ப்பங்களில் நீ தான் தவற விட்டு விட்டாய் ! இனியாவது பக்தியோடு உலகத்தில் சுற்றித் திரிந்து கொண்டிரு ! ஒரு நாள் உன் கிருஷ்ணன் உனக்காக எடுக்கின்ற அவதாரத்தைப் பார்த்தே தீருவாய் . . . அதற்காக கற்பனையில் அலையாதே . . . நாம ஜபத்தோடு, கிருஷ்ண விரஹத்தோடு, திடமான பக்தியோடு, வினயத்தோடு, உலகில் வாழ்ந்து கொண்டிரு . . . ஒரு நாள் நீயும் பார்ப்பாய் . ராதேகிருஷ்ணா !!
நன்றி விஸ்வநாதன் பவுன்சாமி