கிருஷ்ண ஜெயந்தி 2024

By Tejas

துவாபரா யுகம் தொடங்கும் முன்பாக பூமியில் அசுரர்களின் அட்டகாசம் அதிகரித்தது. பூமியில் பாரம் தாங்க முடியாத பூமா தேவி இறைவன் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட தானும், ஆதிசேசனும் அவதரிப்போம் என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.

 

துவாபரா யுகத்தில் ஆதிசேசன் பலராமனாகவும், மகாவிஷ்ணு கிருஷ்ணராகவும் அவதரித்தனர். பூவுலகில் எப்போதெல்லாம் அதர்மம் தலை எடுக்கிறதோ அப்போதெல்லாம் தர்மத்தை காக்கவும் அதர்மத்தை அழிக்கவும் இறைவன் யுகங்கள் தோறும் அவதரிக்கிறார். 

 

☆ ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திர நாளில் பகவான் கிருஷ்ணர் அவதரித்தார்.இந்த ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

 

பகவான் மகாவிஷ்ணு 10 அவதாரங்கள் மூலம் உயிரினங்களை காக்கும் முக்கிய வேலையை செய்துள்ளார். தன்னுடைய 9வது அவதாரமான கிருஷ் அவதாரத்தை தான், கிருஷ்ண ஜெயந்தியாக நாம் கொண்டாடுகின்றோம். 10வது அவதாரம் கலியுகம் முற்றும் போது கல்கி அவதாரமாக எடுப்பார் என புராணங்கள் தெரிவிக்கின்றன. அப்படிப்பட்ட முக்கிய காக்கும் தொழிலை செய்ய அவதரித்த கிருஷ்ணரை வரவேற்கும் விதமாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

 

○ ☆ கிருஷ்ணர் அவதாரம்:

 

அஷ்டமி திதியானது ஆகஸ்ட் 26 ஆம் தேதி காலை 9:13 மணிக்கு தொடங்கி, ஆகஸ்ட் 27ஆம் தேதி காலை 7:30 வரை உள்ளது. அதே சமயம் ரோகிணி நட்சத்திரமானது, ஆகஸ்ட் 26 ஆம் தேதி இரவு மாலையில் தொடங்கி, ஆகஸ்ட் 27 ஆம் தேதி மாலை வரைக்கும் ரோகிணி நட்சத்திரமும் உள்ளது. அஷ்டமி திதியும் இணைந்து வரும் நேரம் இரவு நேரம் என்பதால், அது கிருஷ்ணன் அவதரித்த நாளாக கருதப்படுகிறது. மேலும், ஆகஸ்ட் 26 ஆம் தேதி நள்ளிரவில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு செய்வதற்கு உகந்த நேரமாக கருதப்படுகிறது.

 

○ ☆ கிருஷ்ண ஜெயந்தி விரதம்:

 

இந்த நாளில் நாம் கிருஷ்ணரை முழு மனதுடன் விரதம் இருந்து வேண்டினால், நம்மை காத்து அருளுவார். கிருஷ்ணரின் மிக தீவிர பக்தர்கள் உணவு, நீர் இல்லா விரதம் மேற்கொள்கின்றனர். கிருஷ்ண ஜெயந்தி அன்று காலை முதல் உணவு, நீர் என எந்த ஒரு வகையான உணவையும் எடுத்து கொள்ளாமல் விரதம் இருப்பது வழக்கம். சரியாக அஷ்டமி திதி நடக்கும் நாளின் இரவு 12 மணிக்கு கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை, பிரசாதங்கள் படைத்த பின்னர் தன் விரதத்தை முடிப்பது வழக்கம்.

 

○ ☆ கிருஷ்ணருக்கு படையல்:

 

வீட்டின் நுழைவாயிலில் குழந்தை நடந்து வந்தது போன்ற பாதச்சுவட்டினை அரிசி மாவால் பதியச் செய்ய வேண்டும். கிருஷ்ணர் சிலைக்கு பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். அதில் துளசி இருந்தால் இன்னும் சிறப்பு. பிறகு கிருஷ்ணருக்கு பிடித்த தயிர், வெண்ணை, அவல் கண்டிப்பாக வைக்க வேண்டும். சீடை, முருக்கு, லட்டு போன்ற இனிப்பு உணவுகளை வைக்க வேண்டும். கிருஷ்ணர் பிறந்தது நள்ளிரவு என்பதால் பூஜையை மாலையில் செய்ய வேண்டும். பாத கோலம் போட்டு அலங்கரித்தால் குட்டிக்கண்ணன் நம் வீடு தேடி வருவான் என்பது நம்பிக்கை.

 

○ ☆ எப்படி விரதம் இருப்பது:

 

கிருஷ்ண ஜெயந்தி நாளில் விரதம் இருப்பவர்கள் உணவு ஏதும் சாப்பிடாமல், தண்ணீர் குடிக்காமல் விரதம் இருக்கலாம். வயதானவர்கள் மருந்து எடுத்துக் கொள்பவராக இருந்தால் பழங்களை மட்டும் சாப்பிடலாம். அதுபோல அரிசியில் சமைத்து உணவை தவிர ஜவ்வரிசி கஞ்சி சப்பாத்தி போன்றவற்றை சாப்பிடலாம். அதுமட்டுமின்றி, அந்நாளில் விரதம் இருப்பவர்கள் தேவைப்படுபவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீரை தானமாக செய்வது மிகவும் நல்லது என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். 

 

இப்படி செய்தால் வாழ்க்கையில் சந்தோஷம் நிலைத்திருக்குமாம். அந்நாளில் பசுக்களுக்கு உணவு அளிப்பது புண்ணியமாக கருதப்படுகிறது.விரதம் இருப்பவர்கள் நாள் முழுவதும் சோர்வாக இல்லாமல் முழு ஆற்றலுடன் இருக்க பழங்கள் மற்றும் உலர் பழங்களை சாப்பிடலாம்.

 

○ ☆ என்ன சாப்பிடக்கூடாது:

 

கிருஷ்ண ஜெயந்தி நாளில் விரதம் இருப்பவர்கள் டீ மற்றும் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். வீட்டில் சமைப்பவர்கள் வெங்காயம், பூண்டு பயன்படுத்தவே கூடாது. வெங்காயம், பூண்டு சேர்க்கப்படாத உணவை தான் வீட்டில் சமைக்க வெங்காயம். அதுபோல இறைச்சி மற்றும் அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது.

 

விரதம் இருப்பவர்கள் முடிந்த அளவிற்கு எண்ணெய் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக பழங்கள், பால், பழ ஜூஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

 

○ ☆ பாண்டவர்களுக்கு உதவி:

 

பாரதப் போரில் பாண்டவர்களுக்கு உறுதுணையாக இருந்து, போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு தேரோட்டியாக வந்தவரும் கண்ணன்தான். தேரோட்டியாக வந்த கண்ணன்தான் பார்த்தசாரதி என்று அழைக்கப்படுகிறார். தேரோட்டியாக வந்த கண்ணன், அர்ஜூனனுக்கு உபதேசித்த அறிவுரைகள்தான் இந்து மக்களின் புனித நூலான பகவத் கீதையாக போற்றப்படுகிறது. தன்னுடைய கடைசிக் காலத்தில் வேடன் ஒருவன் எய்த அம்பு காலில் தைக்க பூலோகத்தில் கண்ணன் அவதாரத்தை முடித்து மீண்டும் வைகுண்டம் சென்றார் என்று கூறப்படுவது உண்டு.

 

ஜெய் கிருஷ்ணா ...

.
மேலும்