க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண பாஹிமாம் க்ருஷ்ண கேசவ க்ருஷ்ண கேசவ கேசவ கேசவ பாஹிமாம்.
ஸ்ரீ க்ருஷ்ணரின் பிறப்பும் வளர்ப்பும் :
ஸ்ரீ கிருஷ்ணரின் குலம் யதுகுலம்.யதுகுலத்தின் அரசன் சூரசேனன்,மதுராவை ஆண்டு வந்தார். இவருடைய புதல்வன் வசுதேவர். வசுதேவர், உக்ர சேனனின் மகளான தேவகியை மணந்தார். மணமுடித்தபின் ஊர் திரும்புகத்தை ஓட்டினான். அவ்வாறு திரும்புகையில், ஆகாசத்தில் ஓர் அசரீரி ஒலித்தது. "கம்சா, தேவகிக்குப் பிறக்கும் எட்டாவது சிசு உன்னை அழிக்கும் ", என உரைத்தது. இதைக் கேட்ட கம்சன், ஆவேசத்தின் உச்சியில், தேவகியைக் கொல்ல எத்தனித்தான். கம்சனிடமிருந்து தேவகியைக் காப்பாற்ற வசுதேவர் கூறியதாவது, "கம்சா, நீ பயப்படத் தேவையில்லை. தேவகிக்கும் பிறக்கும் அனைத்து சிசுக்களையும் உன்னிடம் அளிக்கிறேன்" என உறுதி அளித்தார்.
வசுதேவர் வாக்கு மாறாதவர் என்பதினால் கம்சன் அதற்கு இணங்கினான், :.ஸ்ரீ ஹரியின் இச்சையை யாராலும் மாற்ற இயலாது என்பதை கம்சன் அறிவான். எனவே,வசுதேவரையும் தேவகியையும் சிறையில் இட்டான். அவர்களுக்குப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஹரியின் அம்சமாக இருக்கலாம் என்று நினைத்து, தேவகியின் குழந்தைகளை ஒவ்வொன்றாகக் கொன்றான். தன் பல குழந்தைகளை கம்சன் கொன்றதனால், கம்சனிடம் தேவகி மிக அச்சம் உடையவளானாள்.
ஸ்ரீ க்ருஷ்ணரின் பிறப்பு :
ஏழு குழந்தைகளை இழந்த பின், தனது எட்டாவது குழந்தையைக் காப்பாற்ற,ஸ்ரீ ஹரியிடம் உள்ளம் உருக ப்ராத்தித்தாள். " ஆவணி மாதம், அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தில் ", தேவகிக்கு எட்டாவது குழந்தை பிறந்தது. குழந்தை ஸ்ரீ ஹரியின் அவதாரமே என்று உணர்ந்த வசுதேவர், குழந்தையை வணங்கி துதித்தார்.
ஸ்ரீ ஹரியின் சித்தப்படி, தேவகிக்கு குழந்தை பிறந்த அதே நேரத்தில், கோகுலத்தில், நந்தகோபருக்கும் யசோதைக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த நேரத்தில், மாயா சக்தியின் காரணத்தால், அங்கிருத்த அனைவரும் ஆழ்ந்த நித்திரைக்கு உட்பட்டார்கள். ஸ்ரீ ஹரியின் ஆணைக்கு இணங்க, வசுதேவர் ஸ்ரீ க்ருஷ்ணரை வெளியே சுமந்து சென்ற போது, இடி இடித்து பெருமழை பெய்தது. சேஷ பகவான் தனது படத்தை விரித்து, ஸ்ரீ க்ருஷ்ணர் மழையில் நனையாமல் காத்தார்.
வசுதேவர், ஆர்ப்பரித்து பாய்ந்து கொண்டிருந்த யமுனை நதிக்கரையை அடைந்தார். நதியானது வசுதேவர் கடந்து செல்ல வசதியாக, இரண்டாகப் பிளந்து அவருக்கு வழி விட்டது.கோகுலத்தை அடைந்த வசுதேவர், அங்கும் அனைவரும் நித்திரையில் இருக்கக் கண்டு, சூழ்நிலையைப் பயன் படுத்தி, ஸ்ரீ க்ருஷ்ணரை அவ்விடம் வைத்து, பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு மீண்டும் கம்சனின் சிறைக்குத் திரும்பினார். தேவகி பிரசவக் களைப்பினால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
சற்று நேரத்தில், குழந்தையின் அழுகுரல் கேட்ட காவலர்கள்,செய்தியை கம்சனிடம் தெரிவித்தனர். கம்சன் விரைந்து அவ்விடம் வந்தான். தேவகி தன் சகோதரனிடம், "இப்பெண் மகவைக் கொல்லாதே, இவளை உன் மகனுக்கு மனைவியாக்குகிறேன்" என மன்றாடினாள். தேவகியின் சொற்களை பொருட்படுத்தாது, அவளிடமிருந்து சிசுவைப் பறித்து, கல் தரையில் அடித்துக் கொல்ல எத்தனித்தான். அவன் கையிலிருந்து நழுவிய குழந்தை, ஆகாயத்தில் சென்று, துர்க்கை வடிவத்துடன் காட்சியளித்தது.
அங்கிருந்தபடியே,துர்க்கையானவள் கம்சனை நோக்கி, "உன்னைக் கொல்வதற்கு, எனக்கு முன்பாகவே ஓர் குழந்தை இவ்வுலகில் பிறந்து விட்டது. எனவே நீ உன் வன்மத்தை சகோதரியிடம் காட்டாதே" எனச் சொல்லி மறைந்தது. கம்சனும் மனம் மாறி, தேவகி மற்றும் வசுதேவரை விடுதலை செய்தான். ஆனாலும் அவன் மனதில் ஓர் அச்சம் இருந்தது. அவன் தன் அலோசகர்களைக் கலந்தான். அவர்களின் ஆலோசனைப்படி, நன்னடைத்தை உள்ள அனைவரையும் துன்புறுத்த கட்டளையிட்டான்.
அங்கே, கோகுலத்தில் யசோதைக்கு குழந்தை பிறந்த செய்தி, காட்டுத் தீ போல் பரவியது. நந்தகோபர் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார். அதன் பொருட்டு அவர் தான, தர்மங்கங்களைச் செய்ததுடன், மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவும் செய்தார். ஸ்ரீ க்ருஷ்ணர் இவ்வாறாக கோகுலத்தில் வளர்ந்து வந்தார்.
ஸ்ரீ க்ருஷ்ணரின் சில லீலைகள் :-
1 ) பூதனா வதம் :-
தன்னை அழிக்க யார் பிறந்துள்ளார்கள் எனும் அச்சத்தில் இருந்த கம்சன், தன் அமைச்சர்களின் ஆலோசனைப்படி, சிறு குழந்தைகளை அழிக்க முடிவு செய்தான். இதன் பொருட்டு அவன், செய்வினைகளில் தேர்ந்தவளான, "பூதனா " எனும் அரக்கியின் உதவியை நாடினான். யதோதையின் குழந்தையைக் காண,பலர் வருவதும் போவதுமாக இருந்தனர். அந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்த, பூதனா ஓர் சதித் திட்டம் தீட்டினாள். கொடிய நஞ்சை தன் மார்பில் பூசிக் கொண்டு, ஓர் அழகிய யுவதியாக தன்னை உரு மாற்றிக் கொண்டாள்.பின் அவள் குழந்தையைக் காண கோகுலம் சென்றாள்.
அவள் மிக நாகரீகமாக தோற்றம் அளித்ததால், யாருக்கும் அவள் மீது சந்தேகம் எழவில்லை. தகுந்த நேரத்தில், அவள், குழந்தையை எடுத்து, அதன் வாயை தனது மார்பில் பொருத்தினாள். மார்பகத்தை உறிஞ்சிய குழந்தை விஷத்தால் இறந்துவிடும் என நினைத்தாள். ஆனால், குழந்தையோ, தனது வாயால் அவளது மார்பை இறுகப் பற்றி, அவளது உயிர்நிலையை உறிஞ்சியது.அதிலிருந்து மீள முடியாது, பூதனா தன் சுய உருவம் பெற்று, உயிர் நீங்கி, ஓர் பெரிய மலை சரிந்தது போல், தடால் என்று கீழே வீழ்ந்தாள். சப்தம் கேட்டு அவ்விடம் வந்தவர்கள், குழந்தை அரக்கியின் மேல் விளையாடுவதைப் பார்த்து, அதிசயித்தார்கள். பூதனாவின் மார்பில் பகவான் வாய் வைத்து, அவள் உயிர் பிரிந்ததால் அவளுக்கு மோட்சம் கிட்டியது.
2) த்ருணாவர்த்தனனன அழித்தல் :-
ஸ்ரீ . க்ருஷ்ணரின் முதலாவது பிறந்த நாள், மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதன் பின், சில நாட்கள் கழித்து யசோதை, குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தாள். குழந்தையின் பாரம் தாங்காது,குழந்தையை கீழே படுக்கவைத்தாள். அதே நேரம், கம்சனின் அடியாள், த்ருணாவர்தனன் என்பவன், கம்சனின் கட்டளைப்படி, தனது மாயா சக்தியால், வ்ருந்தாவனம் முழுவதும்,சூறாவளியென,துாசியைக் கிளப்பினான். ஒருவரையொருவர் பார்க்க இயலாதபடி, தூசியின் அடர்த்தி இருந்தது.
அதேநேரத்தில்,த்ருணாவர்த்தனன் குழந்தையைத் தூக்கிக் கொண்டுஆகாயத்தில் வெகு உயரம் சென்றான்.அவனின் கழுத்தைப் பற்றியிருந்த பகவான், தன் கைகளினால், அவனது கழுத்தை நெறித்தார். மூச்சு விட முடியாமலும், குழந்தையின் பிடியிலிருந்து விடுபட இயலாமலும், அவன் மிகவும் சோர்ந்து தத்தளித்தான்.திடீரென, பகவான் கைகளைத் தளர்த்த, அவன், வெகு உயரத்திலிருந்து, கீழே பாறையின் மீது மோதி, தன் உயிர் நீத்தான். தூசிப் படலம் நீங்கியதும்,குழந்தை தன் அருகில் இருப்பதைக் கண்டு, யசோதை மனமகிழ்த்தாள்.
3) அன்னைக்கு காட்டிய அகிலம் :- க்ருஷ்ணரும், பலராமரும், வளர, வளர, அவர்களது குறும்புத்தனம் அதிகரித்தது. அவர்கள் தாயாருக்கு, இவர்களை சமாளிப்பது, பெரும் பாடாய் இருந்தது. இருவரும், தன் நண்பர்களுடன் சேர்ந்து, அண்டை வீடுகளில் உள்ள கன்றுகளை, அவர்கள் பால் கறப்பதற்கு முன்பே அவிழ்த்து விடுவதும், உறிகளில் சேமித்து வைத்த பால், தயிர், வெண்ணை ஆகியவற்றை களவாடுவதும், மீறி யாராவது கண்டித்தால் அவர்கள் வீட்டை அசத்தப் படுத்துவதும் ஆகிய செயல்களைச் செய்தனர். ஆகையினால், அவர்கள் அனைவரும் ஒன்று கூடி, யசோதையிடம், க்ருஷ்ணரை கண்டிக்க வேண்டினார்கள்.
யசோதையும், க்ருஷ்ணரை தண்டிக்க பல முறை முயன்றும், அவரின் அழகான முகம், பரிதாபமாக இருப்பதைக் கண்டு மனதை மாற்றிக் கொள்வாள். ஒரு முறை, அவனுடன் விளையாடிய சிறுவர்கள் ஒடி வந்து,க்ருஷ்ணர் மண்ணைத் தின்றதாக புகார் அளித்தனர். இது குறித்து அவள் க்ருஷ்ணரிடம் வினவ, அவரோ "அவர்கள் பொய் சொல்கிறார்கள், நீ என்னை அடிக்க வேண்டி, அவர்கள் அவ்வாறு கூறுகிறார்கள்.
நான் உனக்கு என் வாயைத் திறந்து காட்டுகிறேன். நீயே பார்த்துக் கொள்" எனக் கூறி, தன் வாயை அகலத் திறந்து அன்னைக்கு காட்டினான். க்ருஷ்ணரின் வாயின் உள்ளே கண்ட காட்சியைக் கண்டு, அதிசயித்தில் உறைந்தாள். அங்கே, அவன் வாயினுள்ளே, அண்ட சராசரமும் காட்சியளித்தது. தானும், கிருஷ்ணரும் அவன் வாயில் காட்சியளிப்பதைக் கண்டு வியந்தாள். தன் குழந்தை ஓர் சாதாரணக் குழந்தையன்று, தெய்வ அம்சம் பொருந்திய பரமாத்மாவே எனத் தெளிந்தாள்.
4) தேவர்களுக்கு அளித்த சாப விமோசனம் :-
ஒரு முறை, க்ருஷ்ணருக்கு மிகவும் பசியெடுத்தது. அவர், யசோதையிடம் பாலூட்ட வற்ப்புறுத்த, அவளும் பால் புகட்டினாள். திடீரென்று, அவள் அடுப்பில் வைத்த பால் பொங்குவதைக் கண்டு, குழந்தையை கீழே இறக்கி விட்டுச் சென்றாள். இதனால் கோபம் கொண்ட க்ருஷ்ணர், அருகில் இருந்த வெண்ணைத் தாழியை உடைத்து, அதில் இருந்த வெண்ணையைத் தானும் சாப்பிட்டு, மீதமுள்ளதை எடுத்துச் சென்று, மறைவிடத்தில் உள்ள உரலின் மீது நின்று, அதை அங்குள்ள குரங்குகளுக்கு அளித்தான்.
சற்று நேரம் கழித்து வந்த யசோதை, அவனைக் காணாமல் தேடினாள். உரலின் மீது, அவன் நிற்பதைக் கண்டதும், மிகக் கோபம் கொண்டாள். கையில் ஒர் பிரம்புடன் அவனைத் துரத்தினாள். ஆனால், அவனோ இவளை அலைக்கழித்தான். இறுதியில் ஒரு வழியாக, அவனை உரலில் கட்டினாள்.
நளகூவரன் மற்றும் மணிக்ரீவன் எனும் இரு தேவர்கள், நாரதரின் சாபத்தால்,அர்ஜுன மரங்களாக, நந்தகோபரின் இல்லத்தில் இருந்தனர். க்ருஷ்ணர்,கயிற்றால் கட்டிய உரலை இழுத்தபடி, அவ்விரு மரங்களுக்கிடையே தவழ்ந்தார். உரலானது மரங்களுக்கிடையே சிக்கியது. தன் பலம் முழுவதும் கொடுத்து குழந்தை இழுக்கவும், அவ்விரு மரங்களும், பெருத்த ஓசையுடன், ஒடிந்து கீழே வீழ்ந்தது. அதிலிருந்து பிகாசமான ஒளியுடன் இருவர் தோன்றி க்ருஷ்ணரை வணங்கினார்கள்.
நாரதர் அளித்த சாப விமோசனத்தின் பயனாக, பகவானான தங்களின் அருளாள், சாபம் நீங்கப் பெற்றோம். தங்களுக்கு எங்களது பணிவான வணக்கங்கள் என்று கூற, க்ருஷ்ணரும் அவர்களுக்கு ஆசி அளித்து விடையளித்தார்.
5) அசுரர்களை வதம் செய்தல் :-
கோகுலத்தில் க்ருஷ்ணருக்கு வரும் தொடர்ந்த இன்னல்களைக் களைய, நந்தகோபரின் சகோதரரின் ஆலோசனைப்படி, அவர்கள் அனைவரும், கோவர்த்தனகிரியின் அருகில் உள்ள, இயற்கை எழில் சூழ்ந்த விருந்தாவனத்திற்கு, தங்கள் உடைமைகளுடன் இடம் பெயர்ந்தார்கள். அங்கே க்ருஷ்ணரும், பலராமரும், ஆயர் குலச் சிறுவர்களுடன் சேர்ந்து, மாடு மேய்த்துக் கொண்டும், விளையாடியும் தங்கள் பொழுதைக் கழித்தனர்.இவ்வாறு ஒரு நாள் , இவர்கள் யமுனை நதியில் விளையாடுகையில், வத்ஸாசுரன் எனும் அரக்கன், கன்றின் வடிவம்கொண்டு, க்ருஷ்ணரை அழிக்கும் எண்ணத்துடன், இவர்களுக்கு சொந்தமான கன்றுகளுடன் கலந்தான். இதைக் கவனித்த க்ருஷ்ணர், ஒசைப்படாமல், அந்த அசுரக் கன்றின் பின் சென்று, அதன் பின் கால்கள் இரண்டையும் சேர்த்துப் பிடித்து, அதனைச் சுழற்றி,மரத்தின் மேல் அடித்து, மேலே வீசினார்.
அரக்கனும் உயிர் நீத்தான். மறுமுறை, யமுனைக் கரையில் இவர்கள் இருந்த போது, நதியிலே ஓர் வாத்தின் உருவம் கொண்ட பெரிய பறவையைக் கண்டணர். பகாசுரன் எனும் கம்சனின் நண்பன், வாத்து வடிவம் கொண்டு வந்திருந்தான். திடீரென்று அவன் க்ருஷ்ணரை தன் அலகினால் தாக்கி விழுங்கினான்.நண்பர்கள் மூர்ச்சையானார்கள். ஆனால் க்ருஷ்ணரோ, பறவையின் அலகுகளை, இரண்டாகப் பிளந்தார்.பகாசுரனும் உயிர் நீத்தான்.
க்ருஷ்ணரும் அவரது நண்பர்களும்,வழக்கம் போல், விருந்தாவனத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர்.அப்போது, பூதனா மற்றும் பகாசுரனின் சகோதரனுமான அகாசுரன் க்ருஷ்ணரைக் கொல்ல எத்தனித்தான்.இவன் மஹிமா எனும் யோகத்தில் சிறந்தவன். இதை அறிந்தவர்கள் தன் உருவத்தை, அவர்கள் விருப்பப்படி பெரிதாக்க முடியும். அவன் இவர்கள் அனைவரையும் ஒரு சேர முழுங்க எண்ணினான்.
உடனே, ஓர் பாம்பின் வடிவெடுத்து, தன் வாயை, ஆகாசத்திற்கும், பூமிக்கும் படும்படியாகத் திறந்தான். இதைக் கண்ட சிறுவர்கள், க்ருஷ்ணன் மேல் உள்ள நம்பிக்கையால், குகை போன்ற அதன் வாயில் நுழைந்தனர். இதைப் பார்த்து கிருஷ்ணர் வருந்தினார். அவர்களைக் காக்க, தானும், அசுரனின் வாயினுள் சென்றார். அவனது தொண்டையில் சென்று, அங்கு தன் உருவத்தைப் பெரிது படுத்தினார். அதனால், அசுரன் மூச்சுத் திணறி, தலை வெடித்து இறந்தான். அவன் உடலில் இருந்த க்ருஷ்ணரின் நண்பர்கள் உயிர் பெற்று வெளியே வந்தனர்.
6) தாள வனத்தில் தேனுகாசுர வதம் :-
சிறுவர்கள் சற்று வளர்த்தவுடன், பசுக்களின் பொறுப்பை, அவர்களிடம் அவர்களது பெற்றோர் ஒப்புவித்தனர். சிறுவர்களும், க்ருஷ்ணருடன் சேர்ந்து ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என மகிழ்ந்து மாடு மேய்த்து வந்தனர். க்ருஷ்ணரின் நண்பர்கள் அவரிடம், இவ்விடத்திற்கு அருகில், தாளவனம் எனும் காடு உள்ளது. அங்கே பல ஈச்ச மரங்கள் உள்ளது. அதன் கனிகள் மிகச் சுவையானவை. அக்காடு, அரக்கன் தேனுகாசுரன் வசம் இருப்பதால், யாரும் அக்கனிகளைப் புசித்ததில்லை. நாம்அதை ருசிக்கலாமே எனக் கூறினர். அவர்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய, க்ருஷ்ணரும், பலராமரும் தங்கள் நண்பர்களுடன் தாளவனத்தினுள் சென்றனர். அங்கிருந்த ஈச்ச மரங்களை உலுக்கி பழங்களை உதிரச் செய்தனர். அவர்களின் ஓசை கேட்டு, கழுதை வடிவில் இருந்த தேனுகாசுரன் மிகவும் வேகமாக அங்கு வந்தான். பலராமன் கழுதையின் பின்னங்கால்களைப் பற்றி, அதைச் சுழற்றி அடித்துக் கொன்றார். தேனுகாசுரன் இறந்த பின்,அனைவரும் அவ்வனத்தை அனுபவித்தனர்.
7) காளிங்க நர்த்தனம் :-
யமுனை நதியை ஒட்டி, ஒர் பெரிய ஏரி இருந்தது. அதில் காளிங்கன் எனும் கொடிய நாகம், கருடனுக்கு அஞ்சி அவ்விடம் வாழ்ந்து வந்தது. அதன் நச்சுத் தன்மையால், அந்த ஏரி முழுதும் நஞ்சாக மாறியது. ஏரித் தண்ணீர் துர்நாற்றத்துடன், குடிக்க இயலாததாய் ஆயிற்று. இதனால், கரையிலிருந்த புல்வெளி மற்றும் மரங்கள் பட்டுப் போயிருந்தது. நெடிதுயர்ந்த ஒர் கடம்ப மரம் மட்டும் வாடாதிருந்தது.
இந்நிலையை மாற்ற எண்ணிய க்ருஷ்ணர், உயர்ந்த அந்த கடம்ப மரத்தின் மீது ஏறி, அங்கிருந்து தடால் என ஏரிக்குள் குதித்தார். சப்தம் கேட்டு,கோபம் கொண்ட காளிங்கன், தனது பெரிய உடலால், க்ருஷ்ணரைச் சுற்றி வளைத்து இறுக்கினான். கரையில் இருந்தவர்கள், இதைக் கண்டு, கதறி அழுதார்கள்.ஆனால் க்ருஷ்ணரோ, சில மணி நேரம் சென்ற பின், தனது தெய்வீக சக்தியால், தனது உடலை விரிவுபடுத்தினார். ஓர் எல்லைக்கு மேல், அதைத் தாங்க இயலாத காளிங்கன், தன் பிடியைத் தளர்த்தினான். க்ருஷ்ணனர், ஒரே தாவாகத் தாவி, படமெடுத்து ஆடிய, காளிங்கனின் தலை மீது நர்த்தனம் ஆடினான்.
அவர் பாத அடிகளைத் தாங்க இயலாத சர்ப்பம் களைப்படைந்து க்ருஷ்ணரைச் சரணடைந்தது. அதே நேரம், காளிங்கனின் மனைவியரான, நாக கன்னிகைகள், தனது கனவரின் செயலுக்கு மன்னிப்பு வேண்டி க்ருஷ்ணரைத் துதித்தனர். க்ருஷ்ணரும் மனம் இரங்கி, காளிங்களை நோக்கி, " நீ இவ்விடம் விட்டு அகல்வாயாக. என் பாதம், உன் தலையில் பட்டதன் குறி இருப்பதால்,இனி உனக்கு கருடனால் அபாயம் ஏற்படாது" என அருள் புரிந்தார்.
பசுக்களைக் காத்தல் :-
காளிங்க நர்த்தனத்ற்குப் பின், அங்கு அமைதி திரும்பியது. க்ருஷ்ணரும், பலராமரும் தங்கள் நண்பர்களுடன் பழையபடி, ஆடிக்கொண்டும், பாடிக் கொண்டும் மாடுகள் மேய்த்து வந்தனர். ஒர் நாள், இவர்கள் மாடுகளை மேய விட்டு விட்டு, விளையாடுகையில்,பசுக்கூட்டம், இவர்களை விட்டு வெகு தூரம் சென்று விட்டது. அவைகள் இடம் மாறி இஷிகடாவி எனும் அருகிலுள்ள காட்டிற்குள் சென்று விட்டன. திடீரென்று அங்கு காட்டுத் தீ பரவியது.காற்று சுழன்று, சுழன்று வீசியதால், பசுக் கூட்டம் காட்டுத் தீயிடை சிக்கியது. அவைகள் "அம்மா" என பெருங் குரல் கொடுத்தன. தன் திருஷ்டியால் இதை உணர்த்த க்ருஷ்ணர், பலராமருடன் அங்கு விரைந்து, பசுக்களுக்கு அபயம் அளித்தார். தன் வாயை அகலத் திறந்து அக்னி ஸ்வாலைகளை விழுங்கினார்.பசுக்கள் காப்பாற்றப்பட்டது.
9) கோபியர்களின் ஆடைகள் திருட்டு :-
விருந்தாவனத்தில் இருந்த மணமாகாத இளம் கன்னியர் அனைவரும், யமுனை நதிக்கரையில் நீராடி, "காத்யாயனி " தேவியை வழிபடுவார்கள். இவர்கள் நதியில் நீராடும்போது, தங்கள் ஆடைகளை முற்றிலும் களைந்து, கரையில் வைத்து விட்டு நீராடுவார்கள்.அவர்கள் நீராடும் பகுதிக்கு ஆண்கள் வரக்கூடாது எனும் கட்டுப்பாடு இருந்தது. இளம் கன்னியர் யாவர்க்கும் க்ருஷ்ணர் தன் கணவராக வேண்டும் என உள்ளத்தில் நினைத்தனர். அவர்கள் உணர்வை க்ருஷ்ணரும் அறிவார்.
ஓர் நாள், க்ருஷ்ணர், அவ்விடம் வந்து,கரையில் கன்னியர் வைத்த ஆடைகள் அனைத்தையும் கைப்பற்றி, கரையில் இருந்த ஒர் மரத்தின் மீது அமர்ந்தார். அவர்களை நோக்கி, " உங்கள் மனதில் உள்ளதை நான் அறிவேன். நீங்கள் ஒருவர் பின் ஒருவராக, கரையேறி என்னிடம் ஆடைகளைக் கேட்டால் தருவேன்", என்றார்.
இதைக் கேட்ட கன்னியர், மனதில் மிகவும் சந்தோஷப்பட்டாலும், அதை வெளியேகாட்டாது,
" க்ருஷ்ணா,நீ இப்படிச் செய்வது முறையற்றது. நீ எங்கள் ஆடைகளைத் தராவிட்டால், நாங்கள் உன் தந்தையிடம் முறையிடுவோம்", எனக் கூறினார்கள். ஆனால் பகவானோ தன் முடிவிலிருந்து மாறவில்லை. இறுதியில் க்ருஷ்ணரின் அருளைப் பெற விரும்பி, அவருடைய கட்டளைப் படியே, ஒவ்வொருவராக வந்து ஆடையைப் பெற்றனர். பகவானைப் பொருத்தவரை, அவர், அவர்களின் இச்சையைப் பூர்த்தி செய்தாரேயன்றி, அவர், அவர்களை ஓர் சாதாரண பொம்மையெனவே கருதி இந்தச் செயலைச் செய்தார். அதில் சற்றும் காமமோ,விரசமோ இல்லை.
10) கோவர்த்தன கிரி பூஜை :-
விருந்தாவனத்து மேய்ப்பர்கள், இந்திர பூஜை செய்வதற்கான ஆயுத்தங்களை மேற்க் கொண்டிருந்தனர். அதற்கான காரணம் என்ன, என்பது பற்றி பகவான் நந்தகோபரிடம் கேட்டார். அவர், நமக்குத் தேவையான மழையை, இந்திர தேவர் அளிப்பதால், அவருக்கு நன்றி தெரிவிக்க இப்பூஜை செய்யப்படுவதாக கூறினார். ஆனால், ஸ்ரீ க்ருஷ்ணருக்கு இதில் உடன்பாடு இல்லை. அவர், நந்தகோபருக்கு, பலவித காரணங்களை விளக்கிக் கூறி, பூஜையைத் தடுத்து நிறுத்தினார். மேலும், அதற்குப் பதிலாக, கோவர்த்தன கிரியைப் பூஜிக்கக் கூறினார். நந்தகோபரும் அதற்கு இசைந்து, ஆயர் குலத்தவருடன் இணைந்து, கோவர்த்தன கிரியை மிகச் சிறந்த அளவில் பூஜித்து மகிழ்ந்தனர்.
11) குடையாக மாறிய கோவர்த்தன கிரி:
தனக்காக, செய்யப்படும் பூஜையைத் தடுத்து நிறுத்திய ஸ்ரீ க்ருஷ்ணர் மேல், இந்திரன் கடும் கோபம் கொண்டார். அதற்குப் பழி வாங்கும் விதமாக, தன் கட்டுப்பாட்டில் உள்ள மழையை, அடுத்த ஏழு நாட்களுக்கு விருந்தாவனத்தின் மீது ஏவினான். கடும் மழையோடு, புயல் காற்றும் சேர, அனைவரும், தம்மைக் காக்க ஸ்ரீ க்ருஷ்ணரிடம் தஞ்சம் அடைந்தனர். ஸ்ரீ க்ருஷ்ணரும், அனைவரையும் காப்பாற்ற திருவுளம் கொண்டார். சிறு செடியை, வேருடன் பறிப்பது போல், அவர், கோவர்த்தன கிரியை, தன் யோக பலத்தால் பெயர்த்து, தன் சுண்டு விரலால்,அதை குடை போல் தாங்கினார்.ஆயர் குலத்தினர், தம் உடமைகளுடன் அங்கு ஒரு வார காலம் தங்கினர். ஸ்ரீ க்ருஷ்ணரின் இந்தச் செயலால், இந்திரன், மனம் தளர்ந்து, தனது தாக்குதலை நிறுத்தினான். மழையும் புயலும் ஓய்ந்தது.ஆயர்குல மக்கள் ஸ்ரீ க்ருஷ்ணர் துதி பாடி, மீண்டும் விருந்தாவனம் அடைந்தனர். ஸ்ரீ க்ருஷ்ணரும், கோவர்த்தன கிரியை, அதன் இடத்தில், பழையபடி வைத்தார்.
12) ஸ்ரீ க்ருஷ்ண கோபிகா நடனம் :-
நாட்டியம் அறிந்த ஒரு நபர், பெண்கள் பலர் மத்தியில் ஆடும் நடனம் "ராஸ " நடனம் எனப்படும். சரத் காலத்தில், ஓர் பெளர்ணமியன்று ஸ்ரீக்ருஷ்ணர்,கோபிகைகளுடன் நடனமாடியதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அப் பெளர்ணமியன்று இரவு, ஸ்ரீ க்ருஷ்ணர் குழலை இசைக்க, விருந்தாவனத்துக் கோபியர் அனைவரும், இசைக்கு மயங்கி, க்ருஷ்ணர் இருந்த இடத்திற்கு விரைந்தனர். இந்நடனமானது,ஒரு வித யோக நிலையில் நடைபெறுவது. இதில் பக்தி உணர்வு மேலோங்கி, பாலுணர்வு தலை காட்டாது. எனினும்,ஸ்ரீ க்ருஷ்ணர் அங்கு கூடி இருந்தவர்களில், மணமான பெண்டிரை, அவரவர் இல்லத்திற்கு திரும்பக் கூறினார்.
அவர்களோ, க்ருஷ்ணா, நீ எங்களை மிகவும் வசீகரித்துள்ளாய். நாங்கள் இந்நேரத்தை, நழுவ விட தயாராக இல்லை. உலக அதிபதினான உன் ஸ்பரிஸம் எங்களுக்கு முக்தி அளிக்க வல்லது என்பதை நாம் அறிவோம். எனவே, நீ எங்களுடன் நடனமிட அருள் செய்வாயாக என உள்ளம் உருகும் படி வேண்ட, அவர்களின் பக்தி பூர்வமான கோரிக்கைக்குச் சம்மதித்தார். அவர் அவ்வாறு நடனமிடுகையில், ஒவ்வொரு யுவதியும், அவர் தம்மிடம் நடனமிடும் ஆனந்த நிலையை அடைந்தார்கள்.
சந்தோஷத்தின் அதி உச்சியில் இருந்த அவர்கள், தமக்கு வாய்ந்த இந்த அரிய சந்தர்ப்பத்தை எண்ணி மனதளவில் கர்வம் கொண்டனர். இதை உணர்ந்த பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர், திடீரென, அங்கிருந்து மறைந்தார். தான் புலன் இன்பங்களுக்கு அப்பாற்ப்பட்டவன் என்பதை இதன் மூலம் அவர் உலகிற்கு காட்டினார். அவ்வாறு அவர் அவ்விடம் விட்டு மறைந்தவுடன் கோபியர்கள் அவரை பல இடங்களிலும் தேடினர்.அவர்கள் சமநிலை தவறி அரற்றினர்.அங்கிருந்த செடி, கொடி, மரம், மண் மற்றும் விண்ணை நோக்கி பகவானை கண்டீரா எனக் கேட்டனர். அவர்கள் புத்தியாலும் மனதாலும் ஸ்ரீ க்ருஷ்ணா என துதித்துக் கொண்டே இருந்தனர்.
அவர்களின் நிலை அறிந்து, மீண்டும் ஸ்ரீ க்ருஷ்ணர் அவர்களிடையே தோன்றி அவர்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்தார்.
12) தேவனுக்கு முக்தி, அசுரனுக்கு வதம்
ஓர் சிவராத்திரி பூஜை விமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை, சரஸ்வதி நதிக்கரையோரம், நந்தகோபர் அவர் நண்பர்களுடன் ஓய்வெடுத்து வந்தார். பெரிய பாம்பொன்று அவரை விழுங்கத் தொடங்கியது. நந்தகோபர், அபயக் குரல் எழுப்ப, அங்கு விரைந்த ஸ்ரீ க்ருஷ்ணர், தனது பாதத்தால் அதை மிதிக்க, அடுத்த நிமிடம், பாம்பானது தன் சர்ப்ப சரீரம் நீங்கி, தேவ வடிவம் கொண்டு, அவரைப் பணிந்து நின்றது.
ஸ்ரீ க்ருஷ்ணர், அத்தேவனிடம், நீ பாம்பு சரீரம் அடையக் காரணம் என்ன என வினவினார். தேவனும், என் பெயர் வித்யாதரன். பகவத் க்ருபையால் நான்மிகவும் அழகு மிக்கவனாக இருந்தேன்.அந்த அழகின் செருக்கு, என்னிடம் எப்போதும் இருந்தது. இந்நிலையில்,ஓர் நாள்,நான் அழகற்ற ஆங்கிரா எனும் முனிவரை எள்ளி நகையாடினேன். சினம் கொண்ட முனிவர் என்னை சர்ப்பமாக வேண்டும் என சபித்தார்.அவரின் சாபத்தால் எனக்கு பாம்பின் உடல் கிட்டியது. அச்சாபமே இன்று எனக்கு ஓர் நன்மையையும் செய்தது.
பகவான் தங்கள் திருப்பாதம் பட்டதால்,எனது பழைய மேனி திரும்பியது. எனவே தாங்கள், நான் மீண்டும் எனது தேவலோகம் செல்ல அருள் புரியுங்கள் என வேண்டினான். ஸ்ரீ க்ருஷ்ணரும் அவனுக்கு அருள் புரிய, அவன் முக்தி பெற்று தேவலோகம் அடைந்தான்.
ஸ்ரீ க்ருஷ்ணர், கோபியர்களின் கர்வம் அடக்க, அவர்களிடமிருந்து மறைந்த நேரத்தில், சங்கு வடிவ ஆபூர்வ மணி தரித்த, சங்கரன் எனும் அசுரன் அங்கு தோன்றி, கோபியர்களைக் கடத்த முற்ப்பட்டான். கோபியர்களின் அபயக் குரலைக் கேட்ட ஸ்ரீ க்ருஷ்ணர் அங்கு விரைந்து, அசுரனை ஓட ஓட விரட்டிப்பிடித்து, அவனை தனது முஷ்டியால் வதைத்துக் கொன்றார். அவனிடம் இருந்த அந்த அபூர்வ மணியை, தனது சகோதரன் பலராமருக்குப் பரிசாக அளித்தார்.