ஆடி மாதத்தில் வரும் முதல் வெள்ளிக் கிழமை இன்று. பொதுவாகவே வெள்ளிக் கிழமைகளுக்கு தனிச் சிறப்பு உண்டு. அதிலும் ஆடி, தை மாதங்களில் வரும் வெள்ளிக் கிழமைகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை.
இந்த மாதங்களில் வரும் வெள்ளிக் கிழமைகளில் பெண்கள் விரதம் இருந்து வீடுகளிலும் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்வார்கள். தங்கள் குல வழக்கப்படி, கணவன் மற்றும் குடும்ப நன்மை வேண்டி அம்மன் வழிபாடு செய்கின்றனர். அந்த விதத்தில் இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை.
ஆடி மாதமே அம்மனுக்கு உகந்த மாதமாக போற்றப்படுகிறது. எந்த விதத்திலும் பக்திக்கு இடையூறு இருக்க கூடாது என்றே ஆடி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட இதர குடும்ப விசேஷங்கள் இடம்பெறுவதில்லை.
ஆடி முதல் வெள்ளியான இன்று மட்டுமின்றி இந்த மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக் கிழமைகளுக்கும் சிறப்பு சேர்க்கும் விதத்தில் காலை, மாலை என பெண்கள் வீடுகளிலும் கோயில்களிலும் அம்மனை வழிபாடு செய்வது வழக்கம். மகாலட்சுமியை வழிபட்டால் செல்வ வளம் பெருகும். அந்த வகையில் இந்த மாத கடைசி வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி நோன்பு அனுசரிக்கப்படுகிறது. மகாலட்சுமிக்கு உகந்த இந்த விரதத்தை வீடுகளில் பூஜைகள் செய்து பெண்கள் அனுசரிப்பார்கள்.
சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் கூடி வரவும் விரதம் மேற்கொள்கின்றனர். ஆடி மாதத்தில் புற்று அம்மனான நாகதேவதை வழிபாடும் சிறப்பானது.
புற்றுக்கு பால் தெளித்து, வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பூ, ஆகியவற்றை படைத்து பெண்கள் சிறப்பு பூஜை செய்து வழிபடுவது வாடிக்கை. கூழ்வார்த்தல், வேப்பிலை ஆடை அணிந்து வலம் வருதல், பால்குடம் எடுத்து ஊர்வலம், முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தல், தீக்குண்டம் இறங்குதல் என மாதம் முழுவதுமே அம்மன் கோயில்களில் வழிபாடுகள் கோலாகலமாக நடைபெறுகிறது. அம்மனுக்கு உகந்த ஆடி மாதம் பக்தி மணம் கமழும் மாதமாக போற்றப்படுகிறது.
கோயில்களில் சிறப்பு வழிபாடு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி முதல் வெள்ளியையொட்டி இன்று சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடந்தது. பெண்கள் புற்றுக்கு பால் ஊற்றி வழிபாடு நடத்தினர். சென்னை மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன், கோலவிழி அம்மன், மண்ணடி காளிகாம்பாள், திருவல்லிக்கேணி அங்காளபரமேஸ்வரி, மின்ட் கன்னிகா பரமேஸ்வரி உள்ளிட்ட அம்மன் கோயில்களில் காலையிலேயே ஏராளமான பெண்கள் திரண்டிருந்தனர்.
திருவொற்றியூர் வடிவுடையம்மன், திருவேற்காடு கருமாரியம்மன், மாங்காடு காமாட்சி கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா தொடங்கியது. முதல் வெள்ளிக்கிழமை என்பதால் அம்மனுக்கு இன்று காலை பால், சந்தனம், மஞ்சள், குங்குமம் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பெரும்பாலான கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. புற்று கோயில்களில் பெண்கள் பால் ஊற்றியும் நெய்விளக்கு ஏற்றியும் வழிபட்டனர். சில கோயில்களில் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல் போன்றவை பிரசாதமாக வழங்கப்பட்டது. அன்னதானமும் நடந்தது.