பரசுநாதசுவாமி திருக்கோயில், முழையூர், தஞ்சாவூர்

By Tejas

மூலவர் பரசுநாத லிங்கம் பீஜாட்க்ஷர லிங்க வடிவைச் சார்ந்தது. "நீண்ட கூம்பு நெடுந்திடை லிங்கம்' என்பது இதன் பொருள். வட்டவடிவில், எட்டுப் பட்டைகளுடன் இது காட்சி தருகிறது. இந்தக் கோயில் கருவறை கோஷ்டத்தில் (சுற்றுச் சுவர்) லிங்கோத்பவருக்கு பதிலாக அர்த்தநாரீஸ்வரர் காட்சி தருகிறார்.

 

தந்தையின் உத்தரவுப்படி தனது தாயை வெட்டிய பரசுராமர், பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக சிவபூஜை செய்தார். அவர் முழையூர் திருத்தலத்திற்கு வந்தார். ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, பூஜை செய்தார். அவருடைய தோஷம் நீங்கியது. இதன் காரணமாக சுவாமிக்கு "பரசுநாதர்' என்ற பெயர் ஏற்பட்டது. 

 

மேற்கு பார்த்த திருத்தலம் இது. தேவார வைப்புத் தலங்களில் இதுவும் ஒன்று. பாடல் பெற்ற தலம் என்பது அப்பர், சம்பந்தர், சுந்தரரால் நேரடியாக பாடல் பெற்றதாகும். வைப்புத்தலம் என்றால், ஏதாவது ஒரு கோயிலைப் பற்றி பாடும்போது, இன்னொரு கோயிலின் சிறப்பையும் இணைத்து பாடுவதாகும். இத்தலத்தில் முருகப்பெருமான் வேலுக்கு பதிலாக சக்திக்குரிய சூலத்தை தாங்கியிருக்கிறார். அதையும் இடது கை நடுவிரலின் நுனியில் தாங்கியிருப்பது விசேஷம்.

 

 இந்த ஊருக்கு முழையூர் என பெயர்வர காரணம் இருக்கிறது. அக்காலத்தில் முழை எனப்படும் வாத்தியத்தில் வேத இசை ஒலியை துல்லியமாக வாசிப்பார்கள். அட்சய திரிதியை நாளன்று சிவலோகத்தில் பூதகணங்கள் இந்த வாத்தியத்தை வாசிப்பதுண்டு. இது ஒரு வகை மேள வாத்தியம். இதை வாசிக்கும்போது பத்தாயிரம் கஜ தூரம் உயரே குதித்து பூதகணங்கள் வாசிப்பார்கள்.

 

 இத்தலத்தில் திரிதியை திதி நாட்களில் விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. அட்சய திரிதியை மட்டுமின்றி எல்லா வளர்பிறை, தேய்பிறை திரிதியை திதிகளில் சுவாமிக்கு நெய் அன்னம் படைத்து வழிபடுகின்றனர். உணவு தொடர்பாக உடலில் ஏற்படும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், செரிவின்மை போன்ற நோய்களுக்கு நிவாரணம் வேண்டி இந்த பூஜையை செய்கின்றனர். முடங்கிக் கிடக்கும் பணம், தரிசாக கிடக்கும் நிலம், தோட்டம், வீடு ஆகியவை விருத்தி பெறுவதற்காக அட்சய திரிதியை அன்று மாதுளை முத்துக்களால் காப்பிட்டு, பரசுநாதரை வணங்குகின்றனர். 

 

கும்பகோணத்திலிருந்து பட்டீஸ்வரம் செல்லும் வழியில் 6 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. டவுன் பஸ்கள் உள்ளன.

.
மேலும்