மார்கழி சிறப்பு பதிவு - பெருமாள் மீசை!

By saravanan

வைகுண்டம் புகுவது மண்ணவர் விதியே என்பார்கள்.

 திருமால் குடிகொண்டிருக்கும் வைகுண்டத்துக்குச் சென்று, அவன் திருவடியைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்பதை விரும்பாத மனிதர்கள் இருக்கிறார்களா, என்ன?

கோயிலுக்குச் சென்று, பெருமாளின் திவ்வியரூபத்தை சேவித்துப் பிரார்த்தித்து, அவனுடைய அடியவன் என்று சொல்லிக் கொள்வதில் ஆனந்தப்படுகிற பக்தர்கள்,

'என்னை வைகுண்டத்துக்கு அழைச்சுக்கோ பகவானே’என்று ஒருகட்டத்தில் பிரார்த்திக்கின்றனர்.

'பதம் அநுத்தமம்’ என்றொரு சொல் உண்டு. பதம் என்றால் இடம்; அநுத்தமம் என்றால், அதைவிட வேறில்லை என்று அர்த்தம். அதாவது, நாம் அடைக்கலம் அடைவதற்கு பரந்தாமன் குடிகொண்டிருக்கிற வைகுண்டத்தைவிட ஆகச் சிறந்த இடம் வேறில்லை என்று பொருள்!

நிறைவில் இறைவனிடம் அப்படித்தான் வேண்டுகிறோம். ஆனால், ஆரம்பத்தில்... பகவானின் திருமேனியில் சிலிர்த்துப் போகிறோம்; அப்பேர்ப்பட்ட பொன்னான திருமேனி உடையவன் ஸ்ரீபகவான். அதனால்தான் அவனுக்கு ' ஸ்வர்ண வர்ணஹா’ எனும் திருநாமம் அமைந்தது.

'என்ன இது குழப்பம்!  கண்ணபிரான் நீலமேக சியாமளன் ஆயிற்றே... அவனுடைய நிறம் கறுப்பும் நீலமும் கலந்தது அல்லவா! அப்படியிருக்க, ஸ்வர்ண வர்ணம் என்று சொல்லி அதைக் கொண்டே திருநாமம் சூட்டியிருக்கிறார்களே..?!' என்று குழப்பம் அடைகிறீர்களா?

ஸ்வர்ணம் என்றால் பொன்; ஸ்வர்ண வர்ணம் என்றால்  பொன்னின் நிறம் என்று அர்த்தம். ஆனால், கண்ணபிரான் நீல வண்ணம் கொண்டவன்தான். ஆனால், அவன் திருமேனி எந்த நிறத்தில் இருந்தால் என்ன... அவன் பொன்னின் நிறத்தைப் போல ஜொலிஜொலிக்கிறான்; தங்க நிறத்தில் தகதகக்கிறான். அதாவது, தங்க நிறத்தைப்போல் ஒளி கொண்டு திகழ்கிறான் என்று அர்த்தம்.

'சரி... கண்களும் தலைமுடியும் கறுப்பு நிறத்தில்தானே இருக்கும்? அதுவுமா தங்க நிறத்தில் காட்சி தந்தது?!' என்கிறீர்களா?

ஆனால், கருமை நிறக் கண்ணனான பரமாத்மாவின் தலைமுடியும் கண்களும் கறுப்பு நிறமாகத்தான் தெரிந்தன. அதேநேரம், கண்ணபிரானின் மேனியெங்கும் ஒருவித ஒளி படர்ந்து, பரவியிருந்தது. கறுப்பு நிறத்தில்கூட, தங்க நிற ஒளி பிரகாசமாக ஜொலித்தபடி காட்சி தந்ததாம்!

இன்னொரு விஷயம்... சாஸ்திரப்படி மீசை வைத்துக் கொள்ளக்கூடாது என்பார்கள். ஆனால், ஆயர் குலத்தில் பிறந்தவன் என்பதால் மீசை வைத்திருந்தானாம் ஸ்ரீகண்ணபிரான். 108 திவ்விய தேசங்களில், எத்தனையோ திருக்கோலங்களில் பகவான் திருக்காட்சி தந்தாலும்,  பெரிய மீசையுடன் ஸ்ரீவேங்கடகிருஷ்ணனாக, ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாளாகக் காட்சி தருவது  திருவல்லிக்கேணி திருத்தலத்தில்தான்!

சென்னை, திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதியின் திவ்வியமான மேனியைத் தரிசித்தால், அவன் ஸ்வர்ண வர்ணன் என்பதை அறிந்து சிலிர்ப்பீர்கள். ' பரஞ்ஜோதி’ அல்லவா பரம்பொருள்! ஓம் நமோ நாராயணாய!

.
மேலும்