புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை வழிபாடு

By saravanan

ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய ஏகாதசி திதி அன்று பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அதேபோல் புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களும் இருக்கிறார்கள். இவை இரண்டும் சேர்ந்து வரக்கூடிய இந்த நாளில் நாம் கண்டிப்பான முறையில் பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும்.

 

பொதுவாக ஏகாதசி திதி அன்று விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்பவர்கள் எப்பேர்பட்ட பாவத்தை செய்திருந்தாலும் அந்த பாவங்கள் நீங்க பெற்று வைகுண்டம் அடைவார்கள் என்று புராணங்களில் கூறப்பட்டிருக்கிறது. அவ்வளவு சிறப்பு மிகுந்த ஏகாதசி திதி அன்று பெருமாளுக்குரிய புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமையும் சேர்ந்து வருவதால் அன்றைய தினம் விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்வது நமக்கு பல நன்மைகளைத் தரும்.

 

அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு இருக்கக்கூடிய கருடாழ்வாருக்கு முதலில் நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும். பிறகு பெருமாளுக்கு துளசி மாலையும் தாயாருக்கு வாசனை மிகுந்த மலர்களையும் வாங்கித் தர வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் மகாலட்சுமி தாயாருக்கு மஞ்சளை வாங்கி தருவது என்பது நம்முடைய வாழ்க்கையில் பல நன்மைகளை உண்டாகும்.

 

இந்த வழிபாட்டை முடித்த பிறகு அங்கு இருக்கக்கூடிய ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அவரை 21 முறை வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த முறையில் நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய கர்ம வினைகள் நீங்கும் என்று கூறப்படுகிறது.

 

இதோடு மட்டுமல்லாமல் சக்கரத்தாழ்வாருக்கு நெய் தீபம் ஏற்றி வைத்து 27 முறை அவரை வலம் வந்து வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய முன் ஜென்ம பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. சக்கரத்தாழ்வார் நரசிம்மர் ஆலயத்தில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. அருகில் நரசிம்மர் ஆலயம் இருந்தாலும் பெருமாள் ஆலயம் இருந்தாலும் இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய முன் ஜென்ம சாபங்களும் கர்ம வினைகளும் நீங்கும் என்பது உறுதி.

 

பெருமாளுக்கு உகந்த இந்த நாளை தவறவிடாமல் அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று இந்த முறையில் வழிபாடு செய்து கர்ம வினைகளையும் முன் ஜென்ம பாவங்களையும் நீக்கலாம்.

.
மேலும்