சிவ வழிபாடுகளில் மிகவும் உயர்ந்தது பிரதோஷ வழிபாடு. . சிவபுராணம் முதலான ஞானநூல்களும் பிரதோஷ மகிமையை விரிவாக எடுத்துரைக்கின்றன. ஒவ்வொரு கிழமையில் வருகிற பிரதோஷத்துக்கு ஒவ்வொரு விதமான பலன்கள் நமக்குக் கிடைக்கின்றன. சனிக்கிழமை வரும் பிரதோஷத்துக்கு மகிமைகள் அதிகம் என்று சிவாகம நூல்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை பிரதோஷம் வருகின்றன. திரயோதசி திதி மாலையில் எப்போது இருக்கிறதோ, அதுவே பிரதோஷ பூஜை செய்ய உகந்த நாளாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. பிரதோஷ நேரம் என்பது மாலை4.30 முதல் 6 மணி வரையிலான காலம். அந்த வேளையில், சிவவாலயத்திற்குச் செல்வதும், சிவ தரிசனம் செய்வதும் நந்தியம்பெருமானை வணங்குவதும் புண்ணியம் தரும்.
சிவபெருமானுக்கு வில்வமும். அம்பாளுக்கு செந்நிற மலர்களும், நந்திதேவருக்கு அருகம்புல்லும் சமர்ப்பிக்கவேண்டும். முக்கியமாக, பிரதோஷத்தின் போது இவற்றை சுவாமிக்கு சமர்ப்பிக்கவேண்டும். அதேபோல, பிரதோஷத்தின் போது சுவாமிக்கும் நந்திதேவருக்கும் பதினாறு வகையான அபிஷேகங்கள் நடைபெறும். நம்மால் முடிந்த அபிஷேகப் பொருட்களை வழங்கவேண்டும்.
ஜாதகத்தில், புதன் திசை நடப்பவர்கள், புதனை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள் புதன்கிழமை அன்று பிரதோஷம் வந்தால் அவசியம் சிவனாரே கதி என்று அவரைச் சரணடைய வேண்டும். இதனால், புதன் பகவானால் வரும் தீய பலன்களில் இருந்து விடுபடலாம். புத்தியை தெளிவாக்குவார் ஈசன். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
புதன் கிழமை நாளில் வரும் பிரதோஷத்தின் போது, நாம் நமது குழந்தைகளைத் தவறாமல் ஆலயத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இதனால் அவர்கள் கல்வி சிறக்கும். இதுவரை கல்வியில் இருந்த மந்தநிலை மாறும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார்கள். கலைகளில் சிறந்து விளங்குவார்கள்.
ஓம் நமசிவாய !