ராமரை பிடித்த தோஷங்கள்?

By nandha

ராவணனிடம் குணம்தான் கெட்டுப் போய் கீழானதாக இருந்ததே தவிர, பலமும், பக்தியும் அனைவரையும் விட உயர்வானதாகவே இருந்தது. அதனால் தான் ராவணனை வதம் செய்த ராமபிரானுக்கு மூன்று விதமான தோஷங்கள் தொற்றிக்கொண்டன. அவையே பிரம்மஹத்தி தோஷம், வீரஹத்தி தோஷம், சாயாஹத்தி தோஷம் என்பன.

 

1.ராவணன் பிராமண குலத்தில் தோன்றியவன். அவனைக் கொன்றதால், ‘பிரம்மஹத்தி தோஷம்’ ராமருக்கு ஏற்பட்டது. 

 

2.கார்த்தவீர்யார்ஜூனன், வாலி ஆகிய இருவரையும் தவிர, தன்னுடன் போரிட்ட அனைவரையும் வெற்றி கொண்டவன் ராவணன். மிகச்சிறந்த மாவீரன். ஒருசிறந்த வீரனைக் கொன்றதால் ராமருக்கு, ‘வீரஹத்தி தோஷம்’ உண்டானது. 

 

3.மூன்றாவதாக, ராவணன் சிறந்த சிவபக்தன். வீணை வாசிப்பதில் வல்லவன். சாம கானம் பாடுவதற்கு அவனுக்கு நிகர் எவருமில்லை. இதனை ‘சாயை’ என்பார்கள். சாயை என்பது ஒளியை குறிக்கும். ஒளி போன்ற பெருமை வாய்ந்த குணங்களை குறிப்பிடும் ‘சாயை’ பெற்ற ராவணனைக் கொன்றதால், ‘சாயாஹத்தி தோஷம்’ ராமரை பற்றிக்கொண்டது.

 

சாயாஹத்தி தோஷம் நீங்க பட்டீஸ்வரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் ராமபிரான். 

 

அதே போல் வீரஹத்தி தோஷம் விலக, வேதாரண்யம் (திருமறைக்காடு) தலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்தார். 

 

பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார்.

 

மண் லிங்கம் பிரதிஷ்டை

 

தன்னுடைய பிரம்மஹத்தி தோஷம் விலகுவதற்காக, ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும் என்று ராமர் முடிவு செய்தார். அதற்காக ஒரு சிவலிங்கத்தை, காசியில் இருந்து கொண்டுவரும்படி அனுமனிடம் கூறினார். தன் இறைவனின் கட்டளையை சிரமேற்கொண்டு நிறைவேற்ற எண்ணிய ஆஞ்சநேயர் காசியை நோக்கி பறந்தார். ஆனால் அவர் வருவதற்கு வெகு நேரம் பிடித்தது.

குறிப்பிட்ட காலம் கடப்பதற்கு முன் சிவலிங்க பூஜை செய்ய எண்ணினார் ராம பிரான். அவரது எண்ணத்தை புரிந்து கொண்ட சீதாதேவி, கடற்கரை மணலிலேயே ஒரு அற்புதமான லிங்கத்தை செய்து முடித்தார். அந்த லிங்கத்தை அங்கு பிரதிஷ்டை செய்த ராமபிரான், அதற்கு வழிபாடும் செய்து முடித்தார். இந்த லிங்கமே ராமலிங்கம் என்று அழைக்கப்படுகிறது.

 

காலம் தாழ்ந்து அனுமன் கொண்டு வந்த லிங்கம், ‘விஸ்வ லிங்கம்’ என்று அழைக்கப்படுகிறது. ராமலிங்க பிரதிஷ்டை விழா ராமேஸ்வரத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழாவாகும். ராமேஸ்வரம் ராமலிங்க சுவாமி கோவிலின் மூன்றாம் பிரகாரம் 4 ஆயிரம் அடி நீளம் கொண்டதாகும். இதன் வடமேற்கு மூலைப் பகுதியில் ஸ்ரீராமரும், சீதாதேவியும் ராமலிங்கத்தை பிரதிஷ்டை செய்வது சுதை வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. ராமலிங்க பிரதிஷ்டை விழா இக்கோவிலில் பத்து நாட்கள் நடைபெறும்.

 

ஆனி மாதத்தில் நடைபெறும் இந்த விழாவில் முதல் நாள் மாலை ராமர், லட்சுமணருடன் தங்க கேடயத்தில் திட்டக்குடி நான்குமுனை சந்திப்பிற்கு எழுந்தருள்வார். அங்குள்ள துர்க்கை அம்மன் கோவில் அருகில் ராவண சம்ஹாரம் நடை பெறும். அப்போது ராமரின் வெள்ளி வேலால் ராவணன் தலை கொய்யப்பட்டு, ராவணனுக்கு முக்தி அளிக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. தொடர்ந்து ராமபிரானுக்கு பால் அபிஷேகம் நடைபெறும். பின்னர் நான்கு ரத வீதிகளில் ராமர், உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

 

2–ம் நாள் விழாவில் தனுஷ்கோடி ரோட்டில் உள்ள கோதண்டராமர் கோவிலில் ‘சேது பந்தனம்’ மற்றும் ‘விபீஷணர் பட்டாபிஷேகம்’ நடைபெறும். மூன்றாம் நாள் ராமலிங்க பிரதிஷ்டை விழா பர்வதமர்த்தினி ஆலயத்தில் நடைபெறும். அதையடுத்தும் 7 நாட்கள் இத்திருவிழா தொடரும். நிறைவு நாளன்று ராமநாத சுவாமியும், ராம பிரானும் பரிவார தேவதைகளோடு அழகிய ரதத்தில் உலகம் உய்வடைய ஊர்வலம் வருவார்கள்.

 

ராவணன் சீதையை கவர்ந்து செல்வது, சடாயு தடுத்து போர்புரிவது, அனுமன் இலங்கை செல்வது, சேது அணை கட்டுவது, ராமபிரான் போரில் ராவணனை வீழ்த்துவது, விபீஷணருக்கு பட்டாபிஷேகம் செய்வது, ராமன் தன் பிரம்மஹத்தி தோஷம் விலக ராமேஸ்வரத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபடுவது முதலிய வைபவங்கள் விழா நாட்களில் நடைபெறுகின்றன.

 

 ஸ்படிகலிங்கம்

 

ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் சம்பந்தர், அப்பரால் பாடல் பெற்றதாகும். இத்தல மூலவர் சன்னிதியில் உள்ள ஸ்படிக லிங்கத்திற்கு தினமும் ஆறு கால பூஜை நடக்கிறது. ‘ஸ்படிக லிங்க தரிசனம்– கோடி பாப விமோசனம்’. இந்த ஸ்படிக லிங்கம் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும்.

 

எத்தகைய கொடிய தோஷமாக இருந்தாலும், ராமேஸ்வரம் கடலில் நீராடி எழுந்து, ஈசனை வழிபட்டால் உடனே விலகும் என்பது நம்பிக்கை. இங்குள்ள அக்னி தலத்தில் நீராடி அந்த கடல் மண்ணில் சிவலிங்கம் பிடித்து பூஜித்து வழிபட்டால் முற்பிறவி, இப்பிறவி தோஷங்கள் விலகும் என்பதுவும் நம்பிக்கையாக இருக்கிறது.

 

இத்தலத்தில் உள்ள விசாலாட்சி அம்மன் சன்னிதியின் அருகில், ராமர் தன் வில்லால் உருவாக்கிய ‘கோடி தீர்த்தம்’ அமைந்துள்ளது. சிவலிங்க பிரதிஷ்டையின் போது ராமர், இந்த தீர்த்த நீரையே பயன்படுத்தியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது.

 

வட இந்தியாவில் இருந்து வரும் பக்தர்கள் கங்கை நீரை கொண்டு, இங்குள்ள ராமலிங்கத்தையும், இங்குள்ள கோடி தீர்த்தத்தை எடுத்துச் சென்று காசியில் உள்ள காசி விஸ்வநாதரையும் பூஜிப்பது வழக்கமாக நடைபெற்றுவரும் நிகழ்வாகும்.

 

கோடி தீர்த்தம் அருகில் பாதாள பைரவர் அருள்பாலிக்கிறார். ராமபிரான், இங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டபோது, அவரைப் பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகியது. நீங்கிய பிரம்மஹத்தியால் பிறருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, ஈசன் பைரவரை அனுப்பினார். பைரவர், பிரம்மஹத்தியை தனது காலால் அழுத்தி பாதாளத்தில் தள்ளினார். எனவே இங்குள்ள பைரவரை வழிபட்டால் கொடிய தோஷங்களும், வறுமை, நோய் யாவும் உடனடியாக அகலும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பாதாள பைரவருக்கு 5 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் மேலும் சிறப்பு தருவதாக அமையும்!!!

 

தென்னாடுடைய சிவனே போற்றி!!!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!!

.
மேலும்