சமயபுரம் மாரியம்மன் கோயில்

By News Room

அமைவிடம் :

கண்ணனூர், விக்கிரமபுரம், மாகாளிபுரம் ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படும் இந்தத் தலம், திருச்சிக்கு வடக்கில் சமயபுரத்தின் கண்ணனூர் அருகில், பெருவளை வாய்க்காலின் கரையில் மகாசக்தி தலமாக விளங்குகிறது.

மாவட்டம் :

சமயபுரம், திருச்சி மாவட்டம்.

எப்படி செல்வது?

அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் திருச்சிராப்பள்ளி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி நகரிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. 

திருச்சி நகர சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்தும், மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்தும், நகரப்பேருந்துகள் திருக்கோயில் வரை வந்து செல்கின்றன.

கோயில் சிறப்பு :

இத்திருத்தலத்தில் மட்டும்தான் பக்தர்கள் தெய்வத்தை நோக்கி விரதம் இருக்கும் மரபு மாறி, மாரியம்மன் தன்னை நாடி வரும் மக்களின் நலன் வேண்டியும், அவர்களுக்கு எந்த தீயசக்தியாலும் பாதிப்பு வராமல் காக்கவும் முப்பெரும் தெய்வங்களான மும்மூர்த்திகளை நோக்கி பச்சைப்பட்டினி விரதம் இருக்கிறாள்.

மேலும் கடுமையான தவம் செய்து இச்சா, கிரியா, ஞான சக்திகளைப் பெற்று அருள் புரிகிறாள். விரதத்துடன் மஞ்சள் உடை அணிந்து அருள் பொங்கும் முகத்துடன், வேண்டும் வரங்களை வாரி வழங்கி மகிழும் அம்மனைக் காண தினமும் லட்சக்கணக்கான மக்கள் இங்கு வருகை புரிகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் மாசி கடைசி ஞாயிறு அன்று ஸ்ரீமாரியம்மன் உலக நன்மைக்காக பச்சைப்பட்டினி விரதம் மேற்கொள்கிறாள். இந்த விரத நாட்கள் மொத்தம் 28 நாட்களாகும். இந்த காலங்களில் அம்மனுக்கு தளிகை நெய்வேத்தியம் கிடையாது.

இந்த விரத நாட்களில் துள்ளு மாவு, திராட்சை, ஆரஞ்சு, இளநீர் பானகம் போன்றவை மட்டும் அம்மனுக்கு நிவேதிக்கப்படுகிறது. 

இந்த விரதம் இனிதே நிறைவேற மூலஸ்தான அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்வதே பூச்சொரிதல் என்று அழைக்கப்படுகிறது.

கோயில் திருவிழா :

சித்திரைத்தேர் திருவிழா, பூச்சொரிதல் விழா, பஞ்சப்பிரகாரம், தைப்பூசம் 11 நாள் திருவிழா, தமிழ், ஆங்கில வருடபிறப்பு, விஜய தசமி, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேஷங்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இந்நாட்களில் அம்மன் தங்கரதத்தில் வரும் போது ஏராளமான பக்தர்கள் கண்டுகளிக்கின்றனர்.

வேண்டுதல் :

இத்தலத்து அம்மனிடம் என்ன வேண்டினாலும் அதை நிறைவேற்றி கொடுப்பதாக கூறுகிறார்கள். சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள் என்ற முதுமொழிக்கு ஏற்றபடி பக்தர்களின் வேண்டுதல்களை எங்கிருந்து வேண்டிக்கொண்டாலும் நிறைவேற்றி கொடுக்கிறாள்.

கண்ணில் பிரச்சனை, கைகால் குடைச்சல், நெஞ்சுப் பகுதியில் வலி, குழந்தை பாக்கியம் இல்லை என்று கண்ணீர் விடுபவர்கள், திருச்சி சமயபுரத்துக்கு வந்து, உடலில் எந்த பாகத்தில் பிரச்சனையோ அந்த உருவத்தை காணிக்கையாகச் செலுத்தி வேண்டிக்கொண்டால் விரைவில் குணமாகும். தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம்.

நேர்த்திக்கடன் :

மொட்டை அடித்தல், அர்ச்சனை, அபிஷேகம், காது குத்துதல், தங்கரதம் இழுத்தல், அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல், அங்கபிரதட்சணம், கரும்பு தொட்டில் பிரார்த்தனை, காணிக்கை, தைப்பூசத் திருவிழா மாவிளக்கு எடுத்தல், நெல் காணிக்கை, ஆடு, மாடு, கோழி, தானியங்கள் செலுத்தல் இவை தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கலாம்.

கோயில் பிரசாதம் :

அம்பாள் சிவ ரூபமாகக் கருதப்படுவதால், விபூதி விசேஷப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

.
மேலும்