சனி தோஷத்துக்கு வெண்ணாற்றங்கரை பெருமாள் கோயில்கள்!

By nandha

இட பிரச்னை, சனி தோஷத்துக்கு தீர்வு காணும்  வெண்ணாற்றங்கரை பெருமாள் கோயில்கள்.

தஞ்சாவூர் பள்ளியக்ரகாரம் அருகேயுள்ள வெண்ணாற்றங்கரையின் தென் கரையில் அருகருகே வரிசையாக மூன்று திருமால் கோயில்கள் கிழக்கு நோக்கி உள்ளன.

108 வைணவத் தலங்களில் ஒன்றான இக்கோயில்கள் திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய மூன்று ஆழ்வார்களால் பாடல் பெற்றவை. ஒரே திவ்ய தேசமாகக் கருதப்படும் இந்த மூன்று கோயில்களையும் சேர்த்தே மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளன.

இந்த மூன்று தலங்களிலும் மூன்று திருமால் வழிபடப்படுகிறார். மூன்று தலங்கள் இருந்தாலும் ஒரே தலமாகவே பாடல் பெற்றுள்ளன. இம்மூன்றும் ஏறத்தாழ அரை கிலோ மீட்டருக்கும் குறைவான தொலைவுக்குள்ளேயே அமைந்துள்ளன. இத்தலத்துக்கு பராசர சேத்ரம், வம்புலாஞ்சோலை, அழகாபுரி, கருடாபுரி, சமீவனம், தஞ்சையாளி நகர் எனப் பல பெயர்களுண்டு.

மேலச் சிங்க பெருமாள் கோயில்

இதில், முதலாவதாக அமைந்திருப்பது மேலச்சிங்க பெருமாள் கோயில். கருவறையில் சிங்கப்பெருமாள் திருமேனி ஏறத்தாழ 6 அடி உயரத்தில் அமர்ந்த கோலத்தில், தாயார் இருவருடன் அமைந்துள்ளது.

இத்தலத்து தாயார் தஞ்சை நாயகி என அழைக்கப்படுகிறார். இத்திருமேனிகளுக்கு முன்பாக நின்ற கோலத்தில் ஆழியும் சங்கும் ஏந்திய திருமால், ஸ்ரீதேவி, பூதேவி உடனுறைய செப்புத் திருமேனிகளாகக் காட்சி அளிக்கிறார்.

சிங்கப்பெருமாளான நரசிம்ம மூர்த்தியின் கருவறைக்குத் தென்புறம் உள்ள தாயார் சன்னதியும் கற்றளியாகவே அமைந்துள்ளது.

மணிக்குன்ற பெருமாள் கோயில்

மேலச் சிங்க பெருமாள் கோயிலுக்கு பின்புறம் அருகிலுள்ள மற்றொரு திருக்கோயில் மணிக்குன்ற பெருமாள் கோயில் என்கிற மாமணிக்கோயில். . இக்கோயில் கருவறையில் அமர்ந்த ஆழியும், சங்கும் ஏந்திய திருமாலும், ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி இருவரும் மிகப்பெரிய திருவுருவங்களாக இடம்பெற்றுள்ளனர். இத்திருக்கோயிலைத்தான் நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.  கருவறையை ஒட்டி ஸ்ரீஅம்புஜவல்லி தாயார் சன்னதியும் உள்ளது.

நீலமேக பெருமாள் கோயில்

மாமணிக் கோயிலுக்கு பின்புறம் அமைந்திருக்கிறது நீலமேக பெருமாள் கோயில். இதில், அமர்ந்த கோலத்தில் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி என்கிற உபய நாச்சியார்களுடன் நீலமேக பெருமாள் எழுந்தருளியுள்ளார். மற்ற கோயில்களில் எம்பெருமானின் இடது கால் சேவைதான் கிடைக்கும். ஆனால், இக்கோயிலில் இடது காலை மடித்து, வலது கால் சேவை தருகிறார். இது மிகவும் விசேஷமானது.

ஒரு சேர தரிசித்தால் பலன்

மேலச் சிங்கபெருமாள் கோயிலில் மட்டுமே  கருவறையில் வீர நரசிம்மர் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். மூலவருக்கு தைலக்காப்பு மட்டுமே செய்யப்படுகிறது. இங்கு உற்சவருக்கு மட்டுமே திருமஞ்சனம் நடைபெறும். திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.

நீலமேக பெருமாள் கோயில் பராசர முனிவருக்கு நேரில் காட்சி கொடுத்த இடம்.

மாமணிக் கோயில் மார்க்கண்டேய முனிவருக்கு பகவான் காட்சி கொடுத்த தலம். இங்கு உள்ள மூன்று கோயில்களையும் ஒரு சேர தரிசனம் செய்தால் மட்டுமே பலன்கள் கிடைக்கும்.

பஞ்ச நரசிம்ம தலம் இங்கு 5 நரசிம்மரை ஒரு சேர தரிசனம் செய்ய பூர்வ ஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

1. வீர நரசிம்மர், 2. முன்மண்டபத்தில் யோக நரசிம்மர், 3. நீலமேகப் பெருமாள் கோயில் பிரகாரத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர், 4. கருடாழ்வார் விமானத்தில் அபயவரத நரசிம்மர், 5. தாயார் சன்னதியில் உள்ள தூணில் கம்பத்தடி யோக நரசிம்மர் என 5 நரசிம்ம சுவாமியை தரிசனம் செய்தால் பஞ்ச நரசிம்மர்கள் அருள் கிட்டும்.

பிரதோஷம் சிறப்பு வழிபாடு

பிரதோஷ காலத்தில் வீர நரசிம்ம வழிபாடு நடைபெறுகிறது. சுவாதி நட்சத்திரத்தில் இக்கோயிலில் வீர நரசிம்ம சுவாமியை தரிசனம் செய்வது சிறப்பு.

நில பிரச்னைக்கு தீர்வு

நிலம், இடம், வீடு என மண் தொடர்பான பிரச்னைகளுக்கு மேலச் சிங்க பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் தீர்வு கிடைக்கும். மேலும், மாங்கல்ய தோஷம், திருமண தோஷம், குரு தோஷம், சர்ப தோஷம், பிதுர் தோஷம், பிராமண தோஷம் உள்பட சகல தோஷங்களுக்கும் நிவர்த்தி பெறலாம்.

இக்கோயிலுக்கு வாரந்தோறும் வியாழன், சனிக்கிழமைகளில் சென்று தேங்காய், பழம், துளசி, பூ, கற்கண்டு என தங்களது வசதிக்கேற்ப கொண்டு சென்று வழிபட்டால் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்.

உயர் பதவி பெற..

சனி திசை, ஏழரை சனி, அஷ்டம சனி உள்ளோர் நீலமேக பெருமாள் கோயிலுக்குச் சென்று நீல நிறப் புடவை சாத்தி எள்ளுச் சாதம் நிவேதனம் செய்து, பக்தர்களுக்கு விநியோகம் செய்தால் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.

மேலும், உத்தியோகஸ்தர்களுக்கு உயர் பதவி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு நிலவும் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். ஆண் குழந்தை பிறக்கும். திருமணம், சொந்த வீடு அமையாதவர்கள் இத்தலத்தில் வழிபட்டால் நல்லபடியாக அமையும்.

அனுஷ நட்சத்திரக்காரர்கள் இக்கோயிலிலுள்ள தாயாரை சேவித்தால் குரு தோஷத்திலிருந்து விடுபடலாம். இதேபோல, மாமணிக் கோயிலிலும் பல தோஷங்களிலிருந்து விடுபடலாம்.

எப்படிச் செல்வது?

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம் சாலையில் 3 கி.மீ. தொலைவில் உள்ள வெண்ணாற்றங்கரையில் இக்கோயில்கள் உள்ளன. பழைய பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசம், திட்டை, திருவையாறு வழித்தடப் பேருந்துகளில் ஏறி வெண்ணாற்றங்கரை பெருமாள் கோயில் எனக் கூறி இறங்கலாம்.

கோயில் நடை திறப்பு காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை. மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை.

.
மேலும்