சிவஸ்தலம் பெயர்: பழையாறை வடதளி

By News Room

சிவஸ்தலம் பெயர்: பழையாறை வடதளி

இறைவன் பெயர்

சோமேஸ்வரர் - பழையாறை தர்மபுரீஸ்வரர் – வடதளி

இறைவி பெயர்

சோமகமலாம்பிகை - பழையாறை விமலநாயகி – வடதளி

தேவாரப் பாடல்கள்

அப்பர்

தலையெ லாம்பறிக் குஞ்சமண்

எப்படிப் போவது

தஞ்சாவூர் - கும்பகோணம் ரயில் மார்க்கத்தில் உள்ள தாராசுரம் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி.மி. தொலைவில் பழையாறை வடதளி என்ற இந்த இரட்டை சிவஸ்தலம் இருக்கிறது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருநந்திபுர விண்ணகரம் என்ற கோவில் பழையாறைக்கு அருகில் உள்ளது. பட்டீஸ்வரத்தில் இருந்து அருகாமையில் உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில் பழையாறை பட்டீஸ்வரம் அஞ்சல் கும்பகோணம் வட்டம் தஞ்சை மாவட்டம் PIN - 612703 தொலைபேசி : 99948 47404 / 93444 36299 / 0435-3919971 இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை திறந்திருக்கும். அருகில் மெய்காப்பாளர் வீடு இருப்பதால் எந்நேரமும் தரிசிக்கலாம்.

தல வரலாறு

 

இவ்வூரின் தெற்கிலும் வடக்கிலும் முடிகொண்டான் ஆறும், திருமலைராயன் ஆறும் ஓடுகின்றன. முடிகொண்டான் ஆறு முற்காலத்தில் பழையாறு எனப்பட்டதால் அதன் கரையிலுள்ள ஊர் பழையாறை எனப்பட்டது; அதன் வடகரையில் உள்ள ஊர் பழையாறை வடதளி எனப்பட்டது.

வடதளி: பழையாறை வடதளி என்று அழைக்கப்படுமிடம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பட்டீஸ்வரம் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து முழையூர் (தேவார வைப்புத் தலம்) வழியாகச் சிறிது தூரத்தில் இருக்கிறது. ஊர் என்று சொல்லும் அளவிற்கு வீடுகள் அதிகம் இல்லை. சோழ மன்னன் கோச்செங்கணான் கட்டிய மாடக் கோவில்களில் ஒன்றாக கருதப்படும் வடதளி கோவில் மிகவும் சிதிலமான நிலையில் காணப்படுகிறது. திருநாவுக்கரசர் இந்த வடதளிக்கு வந்திருக்கிறார். அவர் வந்த போது சமணர்கள் இந்த வடதளிக்கு முன்னால் தங்கள் மடத்தைக் கட்டிக் கோவிலை மறைத்ததோடு, மூர்த்தியையும் தாழி ஒன்றால் மூடி வைத்திருந்தார்கள். திருநாவுக்கரசர் பிடிவாதமாக சிவனை வழிபடாமல் திரும்ப மாட்டேன் என்று அங்கேயே தங்கி உண்ணாவிரதம் இருக்கத் துவங்கினார். இறைவனும் அந்த நாட்டு அரசன் கனவில் தோன்றி தான் இருக்குமிடத்தை அறிவித்துச் சமணர்களை அடக்குமாறு சொல்ல, அரசன் மறுநாள் அங்கு வந்து தாழியை அகற்ற வடதளி ஈசுவரர் வெளிப்பட்டார். இக்கோவிலில் மூலவர் தர்மபுரீஸ்வரர் சந்நிதியும், அம்பாள் விமலநாயகி சந்நிதியும் தவிர வேறு பார்ப்பதற்கு குறிப்பாக ஒன்றும் இல்லை. வடதளியிலுள்ள தர்மபுரீஸ்வரர் ஆலயமே அப்பர் பெருமானால் பதிகம் பாடப்பெற்ற சிவஸ்தலம்.

பழையாறை: பட்டீஸ்வரம் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து ஆவூர் செல்லும் வழியில் திருமலைராயன் ஆற்றுப் பாலம் கடந்து பின் முடிகொண்டான் ஆற்றுப் பாலத்திற்கு சற்று முன்னாலுள்ள தேனாம்படுகை என்ற இடத்தில் இடதுபறம் திரும்பி சுமார் 2 கி.மி. சென்றால் பழையாறை சோமேஸ்வரர் கோவில் வந்து அடையலாம். சோழர் காலத்து சிற்பப் பணிக்கு எடுத்துக் காட்டாக இக்கோவில் வாயில் சுவரும், சுவரில் உள்ள சிற்ப வடிவங்களும் அமைந்துள்ளன. இக்கோவிலும் வடதளி கோவிலைப் போன்றே மிகவும் சிதிலமான நிலையில் இருக்கிறது. முற்றுப் பெறாத முதல் கோபுரத்தின் வழியாக கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் நேரே பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் அம்பாள் லோகாம்பிகை சந்நிதி தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது. இங்குள்ள படிக்கட்டுகளில் பிரகலாத சரித்திரச் சிற்பங்கள் செதுக்கபட்டிருகின்றன. இரண்டாவது கோபுரம் 3 நிலைகளை உடையது. இதன் வழியே உள்ளே சென்றால் நான் காண்பது முன் மண்டபம். பக்கவாட்டிலுள்ள படிக்கட்டுகள் மூலம் எறிச் சென்று முன் மண்டபம் தாண்டி அர்த்த மண்டபம், அதன்பின கருவறையில் மூலவர் சோமேஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது.

அருகில் அர்த்த மண்டபத்தில் உள்ள வீரதுர்க்கை சந்நிதியும் பார்க்க வேண்டிய ஒன்றாகும். ஒரே கல்லில் செய்யப்பட்ட இந்த வீரதுர்க்கையை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இராகு காலத்தில் விளக்கேற்றி வழிபட்டால் குடும்பத்தில் சகல செயகரியங்களும், செயபாக்கியமும் கிடைக்கும் எனபது ஐதீகம். இந்த வீரதுர்க்கை சந்நிதிக்கு அருகில் கடன் தீர்க்கும் கைலாசநாதர் லிங்கம் உள்ளது. இந்த கைலாசநாதரை 11 மாதம் அல்லது 11 வாரம் அல்லது 11 திங்கள், சனிக்கிழமைகளில் விளக்கேற்றி வழிபட்டால் கடன் சுமை, மனச்சுமை தீரும் என்பது ஐதீகம். மூலவர் கருவறைச் சுற்றில் நால்வர் சந்நிதி, வள்ளி தெய்வானையுடனுள்ள முருகர் சந்நிதி மற்றும் நவக்கிரக சந்நிதிகளும் உள்ளன. கோவிலுக்கு வெளியே சோம தீர்த்தம் உள்ளது.

தற்போது இவ்வாலயத்தில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. சுவாமிமலை முருகர் ஆலயத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் சோமேஸ்வரர் ஆலயத்தின் திருப்பணிக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள்.

தேவாரம் பாடப் பெற்ற காலத்தில் பழையாறை நான்கு சிறு பிரிவுகளாக இருந்தது. வடதளி, மேற்றளி, கீழ்த்தளி மற்றும் தென்தளி ஆகிய பிரிவுகளாக இருந்த இந்தப் பழையாறையில் நான்கு சிவன் கோவில்களும் இருந்தன. அவற்றில் இன்று வடதளி தர்மபுரீஸ்வரர் கோவிலும், கீழ்த்தளி சோமேஸ்வரர் கோவிலும் மட்டுமே உள்ளன. இவ்வூருக்கு தெற்கிலும் வடக்கிலும் முடிகொண்டான் ஆறும், திருமலைராயன் ஆறும் ஓடுகின்றன. முடிகொண்டான் ஆறு முற்காலத்தில் பழையாறு எனப்பட்டதால் அதன் கரையிலுள்ள ஊர் பழையாறை எனப்பட்டது. அதன் வடகரையில் உள்ள ஊர் பழையாறை வடதளி எனப்பட்டது.

சிறப்புகள்

 

சோழமன்னர்களின் தலைநகர்களுள் ஒன்றாக விளங்கியத் தலம்.

பல்லவ மன்னவர்க்கு அடங்கிச் சோழர்கள் சிற்றரசாக இருந்த காலத்தில் அவர்கள் வாழ்ந்த இடம் பழையாறை. பிற்காலச் சோழர் ஆட்சியில் இவ்வூர் இரண்டாவது தலைநகரமாயிற்று. சோழர் அரண்மனை இருந்த இடம் "சோழமாளிகை" என்னும் தனி ஊராக உள்ளது.

தேவார காலத்தில் 1. முழையூர், 2. பட்டீச்சரம், 3. சத்திமுற்றம், 4. சோழமாளிகை ஆகிய நான்கு ஊர்களும் சோழர்களின் நாற்படைகளாக விளங்கியுள்ளன.

இவ்வூர் கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் - பழையாறை நகர் என்றும், 8-ஆம் நூற்றாண்டில் - நந்திபுரம் என்றும், 9, 10-ஆம் நூற்றாண்டில் - முடிகொண்ட சோழபுரம் என்றும், 12-ஆம் நூற்றாண்டில் இராசபுரம் என்றும் வழங்கப்பெற்றுள்ளது.

பழையாறை நான்கு சிறு பிரிவுகளாகும் - 1. வடதளி:- (தாராசுரத்திலிருந்து 5 கி. மீ. தொலைவு, அப்பர் பெருமான் உண்ணாவிரதமிருந்த இடம். தற்போது அதிக வீடுகளில்லை.) 2. மேற்றளி, 3. கீழ்த்தளி (பழையாறை), 4. தென்தளி என்பன அந்நான்காகும்.

சம்பந்தப்பெருமான் "அப்பரே" என்று திருவாய் மொழிந்த திருநாவுக்கரசரின் தேவாரப்பாடல் பெற்றத் திருத்தலம்.

சமணர்களால் மறைக்கப்பட்டு அப்பரால் உண்ணா நோன்பிருந்து வெளிப்படுத்தப்பட்ட பெருமான் வீற்றிருக்கும் (வடதளி) தலம்.

மங்கையர்க்கரசி நாயனார் அவதரித்த திருத்தலம்.

மங்கையர்க்கரசி நாயனாரின் திருவுருவச் சிலை இத்திருக்கோயில் உள்பிரகாரத்தில் தெற்கு நோக்கி உள்ளது.

        மங்கையர்க்கரசியாரின்

        அவதாரத் தலம்       : பழையாறி (கீழப் பழையாறை).

        வழிபாடு               : குரு வழிபாடு.

        முத்தித் தலம்         : மதுரை

        குருபூசை நாள்        : சித்திரை - ரோகிணி.

மங்கையர்க்கரசியார் - இவர் மணிமுடிச் சோழனின் மகள் என்பர். இவன் பழையாறையைத் தலைநகராகக் கொண்டவன். இவனே அப்பர் பொருட்டுச் சிவலிங்கத்தை வெளிப்படுத்தியவனாக இருக்க வேண்டும். திருப்பனந்தாளில் சாய்ந்த சிவலிங்கத்தை நிமிர்த்த முயன்றவனும் இவனேயாகும் (திரு. K.M. வேங்கடராமையா அவர்களின் ஆய்வுக் குறிப்பு - பெரிய புராணம் - பட்டுசாமி ஓதுவார் பதிப்பு.)

அமர்நீதி நாயனார் அவதரித்த திருப்பதி.

        அமர்நீதியாரின்

        அவதாரத் தலம்       : பழையாறி (கீழப் பழையாறை).

        வழிபாடு               : சங்கம வழிபாடு.

        முத்தித் தலம்         : நல்லூர்.

        குருபூசை நாள்        : ஆனி - பூரம்.

இங்குள்ள (சோம தீர்த்தம்) தீர்த்தக் குளத்துநீர் சித்தபிரமை முதலியவைகளைப் போக்கவல்லது என்று நம்பப்படுகிறது.

இராசராச சோழனால் திருப்பணி செய்யப்பட்ட இக்கோயில் அவனுடைய இயற்பெயரால் அருண்மொழித் தேவேச்சரம் என்றழைக்கப்படுகிறது.

குந்தவைப் பிராட்டி இவ்வூரில்தான் இராசேந்திரனை வளர்த்தாள்.

இத்தலத்தைச் சூழ்ந்துள்ள 1. நல்லூர், 2. வலஞ்சுழி, 3. சத்திமுற்றம், 4. பட்டீச்சரம், 5. ஆவூர் என்னும் ஐந்து தலங்களையும் ஒரே நாளில் தக்ஷுணாயன புண்ணிய நாளில் - வழிபடுவது சிறப்புடையதென்று மக்கள் வழக்கில் சொல்லப்படுகிறது.

  K.S.BALAMURUGAN

.
மேலும்