ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் யானை கால் நீட்டிப் படுத்திருப்பது போன்ற தோற்றமுள்ள மலை மீது சீனிவாசப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
இந்தக் கோவில் உள்ளூர், வெளியூர் மக்களால் திருவண்ணாமலை என்றே அழைக்கப்படுகிறது.
இந்த மலை 350 படிக்கட்டுகள் மேல் அமைந்துள்ளது. பக்தர்கள் இடையில் இளைப்பாற மூன்று மண்டபங்கள் அமைக்கப்ட்டுள்ளது.
இக்கோவில் நுழைவில் முடி காணிக்கை மடம் உள்ளது. சுற்றியுள்ள ஊர்க்காரர்களுக்கு திருவண்ணாமலை பெருமாள்தான் குல தெய்வம்.
இப்பகுதி மக்கள் இக்கோவிலை பெரிய கோவில் என்றும், இராஜபாளையத்தில் கிழக்கே உள்ள வேட்டை வெங்கடேசப் பெருமாள் கோவிலை சின்ன கோவில் என்றே அழைக்கிறார்கள். ஊரில் உள்ள பாதிப்பேர்களுக்கு குலதெய்வம் பெரிய கோயிலே ஆகும்.
திருவண்ணாமலைக் கோயிலில் மொட்டை போடுதல், காது குத்தும் நிகழ்ச்சிகள் நடக்கும்.
செல்லும் பாதையில் கருப்பண்ண சுவாமி இருக்கிறது. இவர்தான் இக்கோயிலுக்கு காவல் தெய்வம்.
அடிவாரத்தில் பெரிய ஆலமரத்தின் அடியில் விநாயகரும், நாகரும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பக்தரின் கனவில், திருவண்ணாமலைக்கு கிழக்கே, கலசலிங்கம் ஐயனார் கோவில் அருகில் உள்ள ஊருணியில் ஒரு விநாயகர் சிலை உள்ளது. அதை எடுத்து வந்து பிரதிஷ்டை செய் " என உத்தரவு கொடுத்தார். அதன் பின் சாலியர்கள் சமுதாயத்திலிருந்து சென்று எடுத்து வந்து பிரம்மாண்டமான கோயில் கட்டி பூஜைகள் செய்து நிர்வாகித்து வருகின்றனர். விநாயகரின் உருவம் 12 அடி. அகலம் 8 அடி.
திருவண்ணாமலையின் அடிவாரத்தில் ஒரு தெப்பம் அமைந்துள்ளது. அது கோனேரி என அழைக்கப்படுகிறது. முன்பு எல்லா விசேஷங்களுக்கும் இங்கிருந்துதான் தண்ணீர் எடுக்கப்பட்டது.
திருவண்ணாமலை பிரகாரம் சுற்றி அழகான தெய்வச் சிற்பங்கள் வரையப்பட்டுள்ளன.
பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் பெருமாளுக்கு நேர்த்திக்கடனுக்காக செய்து போட்ட பாதுகைகள் கிடக்கின்றன. அதை எடுத்து மார்பிலும், தோளிலும் அடித்துக் கொள்கிறார்கள் பக்தர்கள். தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களை மன்னித்து விடுவான் இறைவன் என்ற நம்பிக்கை. ஸ்ரீனிவாசப் பெருமாளை ஆரத்தி எடுக்கும்போது பார்த்தால் பெருமாள் நம்மைப் பார்த்து புன்னகை புரிவது போல் தோன்றும்.
இவர் திருப்பதி பெருமாளை விட உயரம் அதிகம்.மிகவும் கம்பீரமாக காட்சியளிக்கிறார்.
மலையின் இடையில் தாயார் அலமேலு மங்கை சன்னதியும் உள்ளது. சன்னதிக்கு வெளியே மலையின் ஒரு பகுதியில் பெருமாள் பாதம் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு அவசியம் தரிசனம் செய்ய வேண்டும். அங்கு நின்று பார்த்தால் மேற்கு தொடர்ச்சி மலையின் எழில்மிகு தோற்றம் காணலாம்.
மலை ஏறும் வழியில் வேணுகோபால் சாமி திருக்கோவில் உள்ளது. ஆண்டாள் கோவிலுக்கு உட்பட்டது.
திருப்பதிக்கு நேர்ந்துவிட்டு அங்கு செல்ல இயலாதவர்கள் இங்கு செல்லலாம். காணிக்கையைக்கூட இங்கேயே செலுத்தலாம்.