சுகப்பிரசவம் அருளும் திருச்சிராப்பள்ளி தாயுமானவர்!

By Tejas

திருச்சி என்றாலே நினைவுக்கு வருவது நகரின் மையத்தில் ஓங்கி உயர்ந்து நிற்கும் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில்தான்.

நகரில் நுழையும் போதே குன்றின் மேல் காட்சி தரும் உச்சிப்பிள்ளையார் கோவில். உச்சிப்பிள்ளையாரை வணங்கும் முன் அந்த கோட்டையில் எழுந்தருளி இருக்கும் தாயுமானவ சுவாமிகளையும் மட்டுவார் குழலி அம்மையையும் தரிசிப்பது மரபு. தென்கைலாயம் என்று வழங்கப்படும் இந்த தலத்தில் திரிசரன் என்ற மூன்று முகமுடைய அசுரன் வழிபட்டு பேறு பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த மலையில் சுவாமி, அம்மன், விநாயகர் மூவரும் மூன்று சிகரங்களில் அமர்ந்த படியால் திரிசிரம் எனப்பட்டது.

பிரம்மகிரி என்றும் வழங்கப்பட்ட இந்த மலை பார்ப்பதற்கு நந்தி அமர்ந்திருப்பது போல காட்சி தருவதால் ரிஷபாசலம் என்றும் பெயர் பெற்றது.

இந்த மலைமேல் எழுந்தருளி இருக்கும் ஈசனுக்கு செவ்வந்தி நாதர், திருமலைக்கொழுந்தர், தாயுமானவர் என்றெல்லாம் அன்பர்களால் அழகிய தமிழில் வழங்கப்படுகிறார்.

அன்னை சுகந்த குந்தளாம்பிகை என்றும் மட்டுவார் குழலம்மை என்றும் விளிக்கப்படுகிறார். சாரமா முனிவர் இந்த இறைவனை செவ்வந்தி மலர்களால் பூஜை செய்தமையால் செவ்வந்தி நாதர் என்று வழங்கப்படுவதாகவும் மலைமீது அமர்ந்திருப்பதால் திருமலைக்கொழுந்தர் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்கின்றனர்.

இரத்தினாவதி என்ற பெண் இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் மீது கொண்ட பக்தி காரணமாக அவளின் மகப்பேறு காலத்தில் இறைவனே தாயாக வந்து பிரசவம் பார்த்து தொண்டு செய்தார்.

இதனால் தாயுமானவர் என்றும் மாத்ருபூதேஸ்வரர் எனவும் இறைவன் அழைக்கப்படுகிறார். இந்த நிகழ்ச்சியை எடுத்துக்காட்டும் ஓவியமும் சிற்பங்களும் இந்த ஆலயத்தில் காணப்படுகிறது அப்பர், சம்பந்தர், மாணிக்கவாசகர் அருணகிரி நாதர் ஆகியோர் இத்தலத்து இறைவனைப் பாடி உள்ளார்கள்.

ஹே சங்கர ஸ்மஹர! பிரமாதிநாத மன்னாத! ஸாம்ப! சசிசூட! ஹர! திரிசூலின் சம்போ! சுகப்பிரசவகிருத்! பவ! மே தயாளேச ஸ்ரீ மாத்ரு பூத! சிவ! பாலய மாம் நமஸ்தே!

பெண்கள் சுகப்பிரசவம் அடைய இந்த ஸ்லோகத்தை சொல்லி தாயுமானவ சுவாமிகளை வேண்டிக் கொள்வதும். பிரசவம் சிறப்பாக நடைபெற்றதும் வாழைத்தார் படைப்பதும் இன்றும் இந்த கோவிலில் வழக்கத்தில் உள்ளது.

.
மேலும்