சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள்!

By News Room

மனிதனுக்கு துன்பங்கள் தீரும் வழிகள் இறைவனை வழிபடுவது அதே போன்று ஜீவசமாதி கொண்டுள்ள சித்தர்கள் வழிபாடும் உதவியாக இருக்கும் என்பதும் உண்மையே மனசாந்தி மனஅமைதி மனக்குறை நீங்கவும் மகிழ்ச்சிகள் பொங்கவும் இல்லத்தில் தங்கவும் சித்தர்கள் வழிபாடும் உதவியாக இருக்கும்.

மதுரையிலிருந்து மானாமதுரை செல்லும் வழியில் இருக்கும் திருப்பாச்சேத்தியில் இருந்து தெற்கே எட்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கட்டிக்குளம் . அங்கு குப்பமுத்து வேளாளர், கூத்தாயி அம்மாள் ஆகியோரின் மகனாக காளயுக்தி வருடம் ஆடி மாதம் பூராட நட்சத்திரத்தில் (1855 ஜூலையில்) மாயாண்டி சுவாமிகள் அவதரித்தார் . சிறு வயது முதலே ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

கட்டிக்குளத்தில் உள்ள அய்யனார் கோயிலின் பூசாரியாக இருந்த குப்பமுத்து வேளாளர் ஒரு நாள் தம் மகன் மாயாண்டியையும் பூசை செய்வதற்காக அழைத்துச் சென்றார் . வெளிக்கூடத்தில் மகனை உட்கார வைத்து விட்டு உள்ளே சென்று பூசைகளைச் செய்து விட்டுத் திரும்பியவர் அதிர்ச்சியடைந்தார்.

குத்துக்காலிட்டுத் தியானத்தில் அமர்ந்திருந்த சிறுவன் மாயாண்டியின் தலைக்கு மேலே நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து ஆடாமல் அசையாமல் இருந்தது. அதன் உடற் பகுதியும் வால் பகுதியும் சிறுவனின் உடலைச் சுற்றி இருந்தன. கடும் விஷம் உள்ள நாகம் மகனைக் கொத்தி விடப் போகிறதோ என்கிற பீதியில், ஐயனாரப்பா எம் மகனைக் காப்பாத்து என்று கருவறையை நோக்கி ஓங்கிக் குரல் கொடுத்தார் குப்பமுத்து. பிஞ்சு மகனைப் பார்க்க வாஞ்சையுடனும் பயத்துடனும் திரும்பினார். என்னே அதிசயம்! நாகத்தைக் காணோம்.

தியானத்தில் இருந்து அப்போதுதான் மீண்டிருந்தான் மாயாண்டி. மகனிடம் ஏதோ ஓர் அபூர்வ சக்தி இருக்கிறது என்பதை அப்போது உணர்ந்து கொண்ட குப்பமுத்து, அவனை அப்படியே வாரி அணைத்துக் கொண்டார். இதே போன்ற சம்பவங்கள் பின்வந்த நாட்களிலும் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் விஷயம் ஊருக்குள் பரவி, மாயாண்டியை ஒரு தெய்வ சக்தியாகவே அனைவரும் பார்க்க ஆரம்பித்தனர்.

சிறு வயதில் மாயாண்டி சுவாமிகள், சித்தர் பாடல்களைத் தேடித் தேடிப் படிப்பதையும் அடிக்கடி ஆலய யாத்திரைகள் சென்று வருவதையும் கண்டு அச்சமுற்ற பெற்றோர் அவருக்குத் திருமணமும் செய்து வைத்தனர். இருப்பினும் அவரது ஆன்மிகத் தேடல் குறையவில்லை. அவர் தமது தேடல்களுக்குச் சரியான வழிகாட்டும் குரு ஒருவரைத் தேடியலைந்தார். இறைவன் அதற்கும் வழிகாட்டினான்.

மாயாண்டி சுவாமிகளை இறைவன் எந்தப் பணிக்காக அனுப்பி இருக்கிறான் என்பது, அவனுக்கு மட்டும்தானே தெரியும்?! இல்லறத்திலேயே இவன் இருந்து விட்டால், எதிர்கால சமுதாயத்துக்கு என்ன பயனைச் செய்து விட முடியும்? மாயாண்டியை இறைவன் ஆட் கொண்டான். விளைவு- இல்லறம் இனிக்கவில்லை. தவத்திலும் யோகத்திலும் காலத்தை ஓட்டினார். சிட்டாய்ப் பறக்க விரும்பினார். தவத்திலும் சமாதி நிலையில் உடல் கூட வேண்டும் என்று விரும்பினார். அதற்கு முன் தீட்சை பெற வேண்டுமே! உபதேசம் செய்வதற்கு ஒரு குரு வேண்டுமே! இந்த வேளையில் தான் ராமேஸ்வரத்துக்கு யாத்திரை சென்று கொண்டிருந்த தஞ்சாக்கூர் செல்லப்ப சுவாமிகள் என்பவர், கட்டிக்குளம் வந்தார்.

அவரைச் சந்தித்த மாயாண்டி சுவாமிகள் அவரிடம் தம் விருப்பத்தைக் கூறியதும் உடனே அவருக்குத் தீட்சையளித்தார். அந்த நிமிடமே அனைத்தையும் துறந்த மாயாண்டி சுவாமிகள் கட்டிய கோவணத்துடன் வீட்டை விட்டுப் புறப்பட்டார்.

பல புனித ஸ்தலங்களுக்குச் சென்று யோக சமாதியில் ஆழ்ந்த அவர் இறுதியாகத் திருக்கூடல் மலை என்ற காகபுஜண்டர் மலைக்கு வந்து சேர்ந்தார்.(இன்றைக்கும் காகபுஜண்டர் அந்த மலையில் யோக சாமதியில் இருப்பதாகக் கூறப்படுகிறது). அந்த மலையில் அரூபமாக இருக்கும் சித்தர்கள் அவரை வரவேற்று, இங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடும் படி அருளாசி கூறினர் . அதன்படி மாயாண்டி சுவாமிகள் அங்கிருக்கும் குகை ஒன்றில் லிங்கம் ஒன்றைப் பிரிதிஷ்டை செய்து யோக சமாதியில் ஆழ்ந்து அட்டமா சித்திகளையும் பெற்றார் .

மாயாண்டி சுவாமிகளின் வாழ்க்கையில் நடந்த அற்புதங்கள் எண்ணற்றவை.

ஒரு நாள் சுவாமிகள் மதுரைக்கு அருகே ஒரு சிறு கிராமத்தில் வசித்த பிராமணத்துக் தம்பதியினரின் இல்லத்திற்குள் திடீரென நுழைந்தார்.

அத்தம்பதியினரிடம், “உங்களுக்குப் பத்தாவதாக ஒரு பிள்ளை பிறக்கப் போகிறது . அதற்குச் சுப்பிரமணி என்று பெயர் வை .ஆனால் அவன் சில காலம் மட்டும் உங்களுடன் இருப்பான் . பின்னர் அவனை இந்த உலகமே கொண்டாடும்” என்று ஆசி வழங்கினார்.

அதன் படி பிறந்த சுப்பிரமணி தான் பின்னர் சுவாமிகளிடம் தீட்சை பெற்று ‘சாந்தானந்த சுவாமிகள்’ ஆனார். சேலம் புதுக்கோட்டை போன்ற இடங்களில் உள்ள ‘ஸ்கந்தாஸ்ரமம்’ அமைத்துப் பக்தர்களின் குறைகளைத் தீர்த்தார் . ஒரு முறை சுவாமிகள் நாகப்பட்டினம் சென்றிருந்தார். சுவாமிகளைத் தரிசித்துத் திருநீறு பெறுவதற்காகப் பெரும் கூட்டம் கூடியிருந்தது . அப்போது ஒரு சிறுவன் திருநீறு வாங்குவதற்காக நீட்டிய கையைத் தொட்டதும் சுவாமிகள் மகிழ்ச்சியுடன் “நீ யோகக்காரனப்பா! உன் பேச்சைக் கேட்கப் பணத்தைக் கொட்டிக் கொடுப்பார்கள்.

அதனைக் கொண்டு ஏராளமான ஆலயங்களுக்குத் திருப்பணிகள் செய்யும் யோகமும் உனக்கு இருக்கிறது” என்று கூறி ஆசிர்வதித்தார் . அந்தச் சிறுவன்தான் பின்னாளில் திருமுருகக் கிருபானந்த வாரியார் சுவாமிகள் எனப் புகழ் பெற்றார் . சுவாமிகள் கூறியபடி சுமார் நாற்பது திருத்தலங்களுக்குத் திருப்பணிகளும் செய்தார்.

சுவாமிகளின் நெருங்கிய சீடரான இருளப்பக் கோனார் சுவாமிகளின் அறிவுரையின் படி திருக்கூடல் மலையில், தண்டாயுதபாணியின் சொரூபத்தைப் பிரதிஷ்டை செய்தார். இப்போது அங்கு பெரும் ஆலயம் ஒன்று எழுப்பப்பட்டிருக்கிறது. சுவாமிகளிடம் தீட்சை பெற்றுச் சீடர்கள் பலர் சித்தரானார்கள். கற்றங்குடி ரெட்டி சுவாமிகள், மூக்கையா சுவாமிகள், கச்சைகட்டி சுவாமிகள், வேலம்மாள், முத்துமாணிக்கம் சுவாமிகள், சோமப்பா சுவாமிகள், சாந்தானந்த சுவாமிகள் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

நீரின் மீது நடந்தது தண்ணீரில் விளக் கேற்றியது போன்ற பல சித்துக்களைச் செய்த மாயாண்டி சுவாமிகள் 1928-ம் ஆண்டு புரட்டாசி மாதம் ஆறாம் தேதி, தமது பக்தர்களிடம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் அடக்கம் ஏற்படும் என்று தெரிவித்தார் . அடக்கம் செய்ய வேண்டிய இடத்தைக் குறிப்பிட்டு அங்கே சமாதிக் குழியும் வெட்டச் செய்தார்.

சுவாமிகள் கூறியபடி 1930-ம் ஆண்டு புரட்டாசி மாதம் 11-ம் தேதி இரவு இருளப்பக் கோனாரின் இடது தோளில் சாய்ந்து “அப்பு இந்தச் சட்டையைக் கழற்றிவிடலாமா?” என்று கேட்டுவிட்டுச் சமாதியானார் . சமாதிக் குழிக்குள் சுவாமிகளின் பூத உடலை வைக்கும்போது அவரது ஜீவநாடி ஓடிக்கொண்டிருந்ததாம் . சுவாமிகளின் விருப்பப்படி அவரது சமாதிப் பீடத்தில் சுவாமிகள் பூசித்துவந்த விநாயகரின் சொரூபம் பிரதிஷ்டை செய்யப்பட்டது . திருக்கூடல் மலை என்ற காகபுஜண்டர் மலையில் காகபுஜண்டர் இன்றும் அரூபமாக யோக சமாதியில் இருக்கின்றார் என்றும் அங்கு பல சித்தர்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது . இப்படிப்பட்ட புனிதமான அந்த மலையின் அடிவாரத்தில் மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதியடைந்து அதனை மேலும் புனிதமாக்கி இருக்கிறார்.

அதென்ன சூட்டுக்கோல்? இவர் கையில் வைத்திருக்கும் சூட்டுக்கோல் நல்லவர்களுக்கு நன்மை தருவதாகவும் தீயவர்களுக்குத் தண்டனை தருவதாகவும் இருந்தது. ராமலிங்க சுவாமிகளின் காலத்துக்குப் பிறகு இந்த சூட்டுக்கோல் அவரின் சீடரான செல்லப்ப சுவாமிகளிடமும் அதன் பின் அவருடைய சீடரான மாயாண்டி சுவாமிகளிடமும் வந்தது.

இன்றைக்கும் இந்தச் சூட்டுக்கோலை மாயாண்டி சுவாமிகளின் சமாதியில் தரிசிக்கலாம். மதுரை திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரி நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டு, அங்கிருந்து பத்து நிமிடங்கள் நடந்தால், காகபுசுண்டர் மலை வந்து விடும். இங்கு தான் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் மற்றும் சோமப்ப சுவாமிகள் ஜீவ சமாதி அமைந்துள்ளது.

.
மேலும்