திருப்பள்ளியெழுச்சி பாடல் 6

By News Room

பப்பற வீட்டிருந்து உணரும் நின்னடியார்

பந்தனையறுத்து வந்தறுத்தார் அவர் பலரும்

மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பில்

வணங்குகின்றார், அணங்கின் மணவாளா

செப்புறு கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்

திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!

இப்பிறப்பறுத்து எமையாண்டு அருள்புரியும்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

 

பொருள்: பார்வதிதவியின் துணைவனே! செந்தாமரை மலர்கள் மலர்ந்த குளிர்ந்த வயல் கள் சூழ்ந்த திருப்பெருந் துறையில் வசிக்கும் சிவபெருமானே! எம்பெருமானே! உன் அருள் என்னும் பெருந்தகைமையை உள்ளத்தில் உணரும் அடியவர்கள், குடும்பம், பந்தபாசங்களை உதறிவிட்டு உன்னைத் தரிசிக்க வந்துள்ளனர்.கண்ணில் மை தீட்டிய பெண்மணிகளும் மனித இயல்புக்கு ஏற்ப வணங்க உன்னை வணங்க வந்துள்ளனர். எங்களுடைய பிறப்பை நீக்கி எங்களை ஆட்கொண்டு முக்தி நிலை தர உடனே விழித்தருள வேண்டும்.

 

விளக்கம்: சாதாரண மனிதன் எப்படி இறைவனை வணங்குவான்? பூ கொண்டு வருவான், கற்பூர ஆரத்தி செய்வான், தூபத்தைப் போடுவான், நெய் தீபம் ஏற்றுவான்... இதையெல்லாம் செய்து விட்டு, ஒரு கஷ்டம் வந்து விட்டால், இப்படியெல்லாம் செய்தும் என்னை சோதிக்கிறாயே! இது உனக்கே அடுக்குமா? என்று திட்டுவான். இப்படிப் பட்டவர்களும் கோயிலில் நிற்கிறார்கள். பந்தபாசமே வேண்டாமென்று அவனே கதியென சரணமடைய வந்தவர்களும் நிற்கிறார்கள். எப்படிப் பட்ட பக்தியாக இருந்தாலென்ன! உன்னை நம்பி அவர்கள் வந்து விட்டார்கள்.அந்த இருதரப்புக்கும் பிறப்பற்ற நிலை தந்து பேரானந்தத்தில் திளைக்க வைக்க வேண்டும் என்று வேண்டுகிறார் மாணிக்கவாசகர்.  அறிந்தும், அறியாமலும் பக்திசெலுத்தும் இருதரப்பாரும் பாட வேண்டிய முக்கியமான பாடல் இது.

.
மேலும்