கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து, செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே! புற்றர வல்குல் புனமயிலே! போதராய், சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட, சிற்றாதே பேசாதே செல்லப்பெண் டாட்டிநீ எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.
விளக்கம் :
கன்றுகளை ஈன்று மிகுதியாக பால் சுரக்கும் பசுக்கூட்டங்களை கறப்பவர்களும், பகைவர்களின் பலம் அழிய போர் செய்யும் இடையவர்களின் குலத்தில் தோன்றிய தங்கக்கொடியை போன்ற எழில் மிகு தோற்றம் கொண்ட பெண்ணே! புற்றிலிருந்து வெளிவந்து படமெடுக்கும் நாகத்தின் கழுத்துக்கு நிகரான மெல்லிடையும், கானகத்தில் இருக்கும் மயிலுக்கு நிகரான உருவத்தையும் கொண்டவளே விழித்தெழுந்து வருவாயாக! சுற்றமும், நம்மிடம் பழகும் தோழியர்கள் எல்லோரும் உன் வீட்டின் முற்றத்தில் வந்து நின்று கண்ணணை போற்றி பாடிக்கொண்டு இருக்கின்றோம். அவன் துதியை கேட்டும் நீர் அசையாமலும், பேசாமலும் உறங்கி கொண்டிருக்கிறாயே செல்வமகளே! நற்பலனை விடுத்து நீ எதற்காக உறங்கி கொண்டு இருக்கின்றாய்… இதன் பொருள் யாதென்று உரைத்து தோழியை எழுப்புகின்றாள் ஆண்டாள்.