மார்கழி திங்கள் - திருவெம்பாவை பதிகம் 07

By Senthil

அன்னே இவையும் சிலவோ பல அமரர் உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான் சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய் தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகொப்பாய் என்னானை என்னரையன் இன்னமுதென்று எல்லோமும் சொன்னோம் கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால் என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.

பொருள் :

தேவர்கள் உள்ளிட்ட பலரும் எளிதில் அணுக முடியாதவன் அவன். தேவர்களும், மற்றவர்களும் அவனை தரிசிக்க காத்துக் கொண்டிருக்கையில் எம்பெருமான் புறப்பட்ட தயாராகி விட்டார் என்பதை உணர்த்தும் வகையில் சிவ சின்னங்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. சிவ சின்னங்கள் பலரும் ஒலிக்க துவங்கியதும், தென்னாடுடைய சிவனே போற்று என சொல்வதற்காக தென்னா என வாய் திறந்ததும், ஓடி வந்து, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என இறைவனை போற்றி, போற்றி என புகழ்ந்தவள் நீ.

ஆனால் இன்று சிவனை பற்றி இத்தனை நாங்கள் எடுத்துச் சொன்ன பிறகும் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் சுகமாக தூங்கிக் கொண்டிருக்கிறாயே. சிவனின் பெருமைகளை சொன்னோம், அவரை வழிபடுவதால் என்னவெல்லாம் கிடைக்கும் என்றோம். இன்னும் என்னவெல்லாமோ சொன்னோம். அவற்றை கேட்காமல் இன்னும் நீ தூங்கிக் கொண்டிருக்கிறார். இந்த தூக்கம் உனக்கு என்ன கொடுத்தது? இத்தனை சொல்லியும் அந்த இறைவனின் அருளை பெற முயற்சிக்காமல் சோம்பேறி போல் தூங்கிக் கொண்டிருக்கிறாய் என்ற அவப் பெயரைத் தான் பெற்று தந்தது. தூக்கத்தில் சுகம் கண்டு கொண்டிருந்தால் உலகத்தாரின் அவப்பெயர் தான் கிடைக்குமே தவிர இறைவனின் அருள் கிடைக்காது.

.
மேலும்