ஹனுமான் பற்றி அறியாத தெரியாத விஷயங்கள்

By News Room

ஹனுமான் குழந்தை பருவத்தில் சூரியனைப் பிடிக்க முயற்சி செய்தது, இந்திரனினால் அடிக்கப்பட்டு, மயங்கி கிடந்தது, வாயு கோபம் அடைந்து உலகோரை மூச்சு விடாமல் திணர செய்தது,

மும்மூர்த்திகளும், மற்ற தேவர்களும் தோன்றி அவருக்கு எல்லா வரங்களையும் அளித்த கதை சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

மேலும், அவர் பெரியவரான போது, சுக்ரீவருக்கு மந்திரியானது, ராம லக்ஷ்மணரை சந்தித்தது, ராமருக்காக சீதையை தேட ஆகாயத்தை கடந்தது,

சீதையிடம் மோதிரத்தை கொடுத்து சூடாமணியை வாங்கியது, ராவணனை சந்தித்து அறிவுரை வழங்கியது, இலங்கையை எரித்தது- என்ற நிகழ்ச்சிகள் தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை.

ராம-ராவண யுத்ததில், அவருடைய பங்கு, ராமாயண கதை படித்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். 

அனுமார் இல்லாமல் ராமரால் இவ்வளவு சாதனைகள் செய்திருக்க முடிந்திருக்குமா, என்று நினைக்க தோன்றும்.

ஆனால், அனுமாருக்கு அந்த மாதிரி எண்ணம் வந்ததே இல்லை.வரவும் வராது. அதனால் தான், அவருடைய நல்ல பண்புகளையும் குணங்களையும் நினைத்து, அவரை, இன்றும் என்றும் வணங்கி வருகிறோம்.

எப்படி இவரால், அதுவும் ஒரு குரங்காக இருந்து கொண்டு, இவ்வளவு சாதனைகள் செய்ய முடிந்தது? அதற்கு ஒரே காரணம் தான் இருக்க முடியும்.

அவர் தேவாம்சம் பெற்றவராக இருந்திருக்க வேண்டும். சாதரண தேவருடைய அம்சமாக இருக்க வாய்ப்பில்லை. பின் யாருடைய அம்சம் இவர்?

சாஷாத் பரமேஸ்வரனுடைய அம்சம். அது என்ன கதை ? பார்ப்போமா....!!!!!

சிவபெருமான் தன் தியானத்திலிருந்து எழுந்து வரும் போது ராம நாமத்தை உச்சரித்து கொண்டு வந்தார். பார்வதி தேவி, எம்பெருமானை பார்த்து கேட்டாள்,

“சுவாமி,நீரே எல்லோருக்கும் மேலான கடவுள். அப்படியிருக்க, நீர் ஏன் இன்னொரு கடவுளின் பெயரை சொல்கிறீர்.”

சிவன், அதற்கு பதில் சொல்கிறார். ”தேவி, 'ராம' என்ற எழுத்து 2 விஷயங்களை குறிக்கிறது.

ஒன்று,”ராம” என்பது தான் பிரம்மம். இரண்டாவது, அது விஷ்ணுவின் அவதாரமான ஒரு இளவரசனை குறிக்கிறது. ராமர் தான் என்னுடய இஷ்டமான அவதாரம். நான் பூலோகத்தில் அவதரித்து ராமருக்கு தொண்டு செய்ய போகிறேன்.“

இதை கேட்ட பார்வதிக்கு கோபம் வந்து, தான் சிவனை விட்டு ஒரு நிமிஷம் கூட பிரிந்து இருக்க மாட்டேன் என்று சொன்னாள்.சிவன் சொன்னார். "

தேவி, கவலை வேண்டாம். பூலோகத்துக்கு அனுப்ப போவது என்னுடய ஒரு சிறு பகுதி தான். மற்றபடி நான் உன்னுடன் தான் இருப்பேன்.” என்றார்.

பார்வதியும் சமாதானமாகி சுவாமியுடன் அவர் எடுக்கப்போகும் அவதாரத்தை பற்றிவிவாதிக்க தயாரானாள். 

பலத்த விவாதத்துக்கு பிறகு சுவாமியின் அவதாரம் ஒரு குரங்காக இருக்க வேண்டும் என்று நிச்சயிக்கப்பட்டது.

ஏன், குரங்கு அவதாரம்? பரமேஸ்வரன் விளக்குகிறார். ” மனிதனாக அவதாரம் எடுத்தால், அது தர்மத்திற்கு ஒவ்வாத செயலாக அமையும்.

"எஜமானனை விட சேவகன்  ஒரு படி கீழ் நிலையில் இருக்க வேண்டும். இந்த சூழலில் குரங்கு அவதாரம் பல காரணங்களால் சிறந்தது. குரங்குக்கு விசேஷமான தேவைகள் கிடையாது. நிறைய சேவகம் செய்ய வாய்ப்பு உண்டு.” என்றார்.

பார்வதி தேவி தானும் கூட வருவதாக அடம் பிடித்தாள். சுவாமியும் சம்மதித்து பார்வதி தான் எடுக்க போகும் அவதார குரங்குக்கு வாலாக இருக்கலாம் என்று முடிவு செய்தார். ( இப்போது புரிகிறதா? ஏன் அனுமார் வால் அழகாகவும் பலமுள்ளதாகவும் இருக்கிறது என்று).

பார்வதி கடைசியாக இன்னொரு சந்தேகத்தை கிளப்பினாள். “சுவாமி, ராவணன் உங்கள் பரம பக்தன். நீங்கள் எப்படி அவன் மரணத்துக்கு உதவ முடியும்? ”,என்று கேட்டாள்.

சிவன், ” தேவி,உனக்கு நினைவு இருக்கிறதா? ராவணன் என் 11 ருத்ர அம்சங்களை திருப்தி பண்ணுவதற்காக தன்னுடைய ஒவ்வொரு தலையையும் வெட்டி நெருப்பில் போட்டான்.

ராவணனுக்கு 10 தலைகள் தானே! 10 ருத்ரர்கள் தான் திருப்தி ஆனார்கள். ஓரு ருத்ரருக்கு கோபம். அந்த 11வது ருத்ர அம்சம் தான் குரங்கு அவதாரம் எடுக்க போகிறது.” என்றார்

அனுமான்  நம் எல்லோரையும் காப்பாற்ற, வேண்டி வணங்கி எல்லாம் அருளையும் பெறுவோம்.!!!

.
மேலும்