ஸ்ரீவாஞ்சிநாதர்,கோயில் திருவாரூர்

By Tejas

திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் அருகில் அமைந்து உள்ள அற்புதமான திருத்தலம், ஸ்ரீவாஞ்சியம். வியாசர் அருளிய ஸ்காந்த புராணம், பிரம்மாண்ட புராணம் ஆகியவற்றில் இந்தத் தலத்தின் பெருமை சொல்லப்பட்டிருக்கிறது, கோயிலின் தொன்மையைப் புரிந்து கொள்ளலாம்.

 

இங்கே சிவனாரின் திருநாமம் ஸ்ரீவாஞ்சிநாதர். அம்பாளின் பெயர் ஸ்ரீமங்களாம்பிகை. இந்தத் தலத்தில் தேவர்களும் முனிவர்களும் கடும் தவமிருந்து சிவபூஜை செய்திருக்கிறார்கள். தெய்வங்களே இங்கு வந்து, சிவபெருமானை நோக்கி தவம் மேற்கொண்டிருக்கிறார்கள்.

 

அவ்வளவு ஏன்... எமதருமருக்கு சிவனார் அருளிய பேறு பெற்ற திருத்தலம் இது. ஆகவே இந்தத் தலத்தின் அம்மைக்கும் அப்பனுக்கும் வாகனத் தொண்டு செய்து வருகிறார். இதனால் எமதருமருக்கு இங்கு தனிச்சந்நிதி உள்ளது. இவரை வணங்கிய பிறகுதான் மூலவரை வழிபடுகின்றனர்.

 

நால்வர் பெருமக்கள், அருணகிரிநாதர், வள்ளலார் பெருமான் ஆகியோரால் பாடல்கள் பெற்ற திருத்தலம் இது. இந்தத் தலத்துக்கு வந்து தரிசிக்கும் பாக்கியம் இருந்தால்தான் இங்கு வந்து தரிசிக்க முடியும் என்பது ஐதீகம்.

 

அற்புதமான ஆலயம். தலம், தீர்த்தம், மூர்த்தம் என விசேஷங்கள் கொண்ட கோயில். எம பயம் முதலான பலவற்றுக்கு பரிகாரத் தலமும் இதுவே! இந்த இப்பிறவியில் ஒருமுறையேனும் வாஞ்சியம் வந்து வாஞ்சிநாதரை தரிசித்துவிட்டு, எமதருமனையும் வணங்கினால், இந்த வாழ்க்கை நிம்மதியாகவும் நிறைவுடனும் அமைந்துவிடும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!

 

இந்தக் கோயிலின் தீர்த்தம், குப்த கங்கை எனப்படுகிறது. கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில், இங்கு வந்து நீராடிவிட்டு, இறைவனைத் தரிசித்தால் ஏழு ஜென்மப் பாவங்களும் தீரும் என்பது ஐதீகம்! குறிப்பாக, கார்த்திகை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை இன்னும் விசேஷமாகவும் கூட்டமாகவும் இருக்கும் என்கிறார்கள் பக்தர்கள்!

 

  கார்த்திகை ஞாயிறு.  நாட்களில் ஏதேனும் ஒரு ஞாயிற்றுக் கிழமையில், ஸ்ரீவாஞ்சியம் வாருங்கள். பிறவிப்பயனைப் பெறுங்கள். ஏழு ஜென்மப் பாவம் நீங்கி, புத்துணர்வுடன் வாழ்வீர்கள்!

 

மரண பயத்தை போக்கும் திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில் குறித்து இங்கே காணலாம்.

 

திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி

ஒருவருக்கு மரண பயம் வந்துவிட்டால் எவராலும் அவரை தகர்க்க முடியாது. மரணத்தை விடவும் கொடியது மரண பயம் அத்தகைய மரண பயத்தை எமபயத்தை அடியோடு போக்குகிறது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாஞ்சியம் கோயில்.

 

சந்தன மரத்தைத் தல மரமாகக் கொண்ட திருவாஞ்சியம். திருக்கோவில் கிழக்கு பார்த்து ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் முதலில் தீர்த்தத்தில் நீராடி அருகே உள்ள கங்கைக்கரை விநாயகரை வழிபட வேண்டும்.

 

பின்பு தனி சன்னதியில் உள்ள யமதர்மராஜனை வழிபட்ட பின்னர் அனுக்கிரக விநாயகர், பாலமுருகனை வழிபட வேண்டும். தலத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ராகு கேதுவிற்குப் பாலபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடை அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

 

இத்தளத்தில் உள்ள குப்த கங்கை என்னும் தீர்த்தம் சிவபெருமானின் சூலத்தால் கங்கையின் பாவங்களைப் போக்கிட உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. தட்சனின் யாகத்திற்குச் சென்றதால் வீரபத்திரரால் தண்டிக்கப்பட்ட சூரியன் தனது ஒளியை இழந்தார்.

 

இந்த தீர்த்தத்தில் நீராடித் தான் தனது ஒளியைப் பெற்றான் என்பது தல வரலாறு. கோயிலின் தென்புறத்தில் அக்னி மூலையில் யமதர்மராஜா சித்ரகுப்தனுடன் அமர்ந்த குலத்தில் தென்தி நோக்கி அருள் பாலிக்கிறார்.

 

.மேற்கு உள்பிரகார இறுதி முலையில் சந்திரமவுலீஸ்வரர், கன்னிமூலை, கணபதி, சட்ட நாதர், மீனாட்சி சொக்கநாதர், வள்ளி தெய்வானையுடன் சண்முகர், மகாலட்சுமி என அனைவருக்கும் தனித் தனி சன்னதிகள் உள்ளன.

 

திராவிட கட்டிடக்கலை எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த ஆலயம் முழுவதும் கருங்கல்லால் கட்டப்பட்டிருக்கிறது. மகாலட்சுமி தேவியையும் விஷ்ணுவையும் சிவன் சேர்த்து வைத்த தலம் என்பதால் இதற்கு திருவாஞ்சியம் என்று பெயர் வந்ததாகவும் தல வரலாறு கூறுகிறது.

 

கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்திருக்கும் கணவன் மனைவி இங்கு வந்து இறைவனை வழிபட்டால் ஒற்றுமை பலப்படும் என்பது நம்பிக்கை. திருவாஞ்சியத்தை காசியை விடப் பன்மடங்கு உயர்வான புண்ணிய தலம் என குறிப்பிடத்தக்கதாக கூறப்படுகிறது.

 

இத்தலத்தில் ஓர் இரவு தங்கி இருந்தாலே கயிலாயத்தில் செவ்வகனமாய் இருக்கும் புண்ணியம் கிடைக்கும் என்று தல வரலாறு கூறுகிறது.

 

இந்த திருத்தலத்திற்குச் சென்னை பகுதியிலிருந்து செல்ல வேண்டியவர்கள் கும்பகோணம் வந்து திருவாஞ்சியம் செல்லலாம்.

 

தென் தமிழகம் பகுதியிலிருந்து திருவாஞ்சியம் செல்ல வேண்டுமானால் திருவாரூர் சென்று திருவாஞ்சியம் கோயிலுக்குச் செல்லலாம். திருவாரூரிலிருந்து 15 கிலோமீட்டர் தூரமும் கும்பகோணத்திலிருந்து 35 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது திருவாஞ்சியம்.

 

திருவாஞ்சியம் திருமுறை பதிகம் 01

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ வாஞ்சியநாதர், வாஞ்சி லிங்கேஸ்வரர்

 

இறைவியார் திருப்பெயர் : வாழவந்தநாயகி, மங்களநாயகி

 

திருமுறை : இரண்டாம் திருமுறை 07 வது திருப்பதிகம்

 

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

 

பாடல் எண் : 01

வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம் 

பொன் இயன்ற சடையில் பொலிவித்த புராணனார்

தென்ன வென்று வரிவண்டு இசைசெய் திருவாஞ்சியம்

என்னையாளுடையான் இடமாக உகந்ததே.

 

பாடல் விளக்கம்‬:

வன்னியிலை கொன்றை மலர் ஊமத்தம் மலர் வில்வம் ஆகியவற்றைப் பொன்போன்ற தம் சடையில் சூடிய பழமையாளரும், என்னை அடிமையாகக் கொண்டவரும் ஆகிய சிவபிரான் தமது இருப்பிடமாகக் கொண்டு விரும்பிய ஊர், வரிவண்டுகள் "தென்ன" என்ற ஒலிக் குறிப்போடு இசைபாடும் திருவாஞ்சியமாகும்.

 

பாடல் எண் : 02

கால காலர் கரி கானிடை மாநடம் ஆடுவர்

மேலர் வேலைவிடம் உண்டு இருள்கின்ற மிடற்றினர்

மாலை கோலமதி மாடம் மன்னும் திருவாஞ்சியம் 

ஞாலம் வந்து பணியப்பொலி கோயில் நயந்ததே.

 

பாடல் விளக்கம்‬:

காலனுக்குக் காலர்; கரிந்த இடுகாட்டில் சிறந்த நடனம் புரிபவர்; எப்பொருட்கும் எல்லா உயிர்கட்கும் மேலானவர்; கடலிடைத் தோன்றிய நஞ்சினை உண்டு இருள்கின்ற கண்டத்தை உடையவர்; அச்சிவபிரான், மாலைக்காலத்தே தோன்றும் அழகிய மதி உச்சியில் பொருந்தும் மாடவீடுகள் நிறைந்த திருவாஞ்சியத்தில் உள்ள அழகிய கோயிலை, உலகோர் வந்து தம்மைப் பணிந்து அருள் பெறுமாறு விரும்பி வீற்றிருந்தருளுகின்றார்.

 

பாடல் எண் : 03

மேவில் ஒன்றர் விரிவுற்ற இரண்டினர் மூன்றுமாய்

நாவில் நாலர் உடல் அஞ்சினர் ஆறர் ஏழ் ஓசையர்

தேவில் எட்டர் திருவாஞ்சியம் மேவிய செல்வனார்

பாவம் தீர்ப்பர் பழி போக்குவர் தம் அடியார்கட்கே.

 

பாடல் விளக்கம்‬:

விரும்பி வழிபடின் நீ நான் என்ற வேற்றுமையின்றி அந்நியம் ஆவர். ஒன்றாய் அரும்பிய அவர் பலவாய் விரியுமிடத்து, சிவம் சத்தி என இரண்டாவர். ஒன்றாய் வேறாய் உடனாய் மூன்றாவர். நாவினால் நான்கு வேதங்களை அருளியவர். பரை ஆதி இச்சை ஞானம் கிரியை என்னும் ஐவகைச் சத்தியாகிய திருவுருவை உடையவர். ஆறு குணங்களை உடையவர். ஏழு ஓசை வடிவினர். அட்ட மூர்த்தங்களாய் விளங்குபவர். இத்தகையவராய்த் திருவாஞ்சியத்தில் எழுந்தருளியுள்ள செல்வனார் தம் அடியவர்களின் பாவங்களைத் தீர்ப்பர். அவர் அடியவர்கட்கு வரும் பழியைப் போக்குபவர்.

 

பாடல் எண் : 04

சூலம் ஏந்தி வளர் கையினர் மெய் சுவண்டாகவே 

சால நல்ல பொடி பூசுவர் பேசுவர், மாமறை

சீலம் மேவு புகழால் பெருகும் திருவாஞ்சியம்

ஆலம் உண்ட அடிகள் இடம் ஆக அமர்ந்ததே.

 

பாடல் விளக்கம்‬:

சூலம் ஏந்திய நீண்ட கையினை உடையவர்; தம் திருமேனிக்குப் பொருத்தமாக நல்ல திருநீற்றை மிகுதியாகப் பூசுபவர்; சிறந்த வேதவசனங்களைப் பேசுபவர். ஆலகாலம் உண்டருளிய அவ்விறைவர், ஒழுக்கத்தால் சிறந்தோர் வாழ்வதால் புகழ்பெற்ற திருவாஞ்சியத்தை இடமாகக் கொண்டு அமர்ந்துள்ளார்.

 

பாடல் எண் : 05

கை இலங்கு மறி ஏந்துவர் காந்தளம் மெல்விரல்  

தையல் பாகம் உடையார் அடையார் புரம் செற்றவர்

செய்யமேனிக் கரிய மிடற்றார் திருவாஞ்சியத்து 

ஐயர் பாதம் அடைவார்க்கு அடையா அருநோய்களே.

 

பாடல் விளக்கம்‬:

கையின்கண், விளங்கும் மான்கன்றை ஏந்தியவர்; காந்தள் இதழ் போன்ற மெல்லிய விரல்களை உடைய பார்வதி தேவியைத் தமது பாகமாகக் கொண்டவர்; பகைவராகிய திரிபுரத்து அசுரரின் முப்புரங்களை அழித்தவர்; சிவந்த திருமேனியையும் கரியமிடற்றையும் உடையவர்; இத்தகையோராய்த் திருவாஞ்சியத்துள் எழுந்தருளிய தலைவராகிய சிவபிரான் திருவடிகளை அடைபவர்களைப் போக்கற்கு அரிய நோய்கள் எவையும் அடையா.

 

பாடல் எண் : 06

அரவம் பூண்பர் அணியும் சிலம்பு ஆர்க்க அகந்தொறும்

இரவில் நல்ல பலி பேணுவர் நாணிலர் நாமமே 

பரவுவார் வினை தீர்க்க நின்றார் திருவாஞ்சியம் 

மருவி ஏத்த மடமாதொடு நின்ற எம் மைந்தரே.

 

பாடல் விளக்கம்‬:

அரவை அணிகலனாகப் பூண்பவர்; காலில் அணியும் சிலம்பு ஆரவாரிக்க வீடுகள் தோறும் நாணிலராய் இரவிற் சென்று நல்ல பலியைப் பெறுபவர்; தம் திருப்பெயர்களைக் கூறிப் பரவுவார் வினைகளைத் தீர்க்கத் திருவாஞ்சியத்துள் நாம் சென்று வழிபடுமாறு உமையம்மையாரோடு எழுந்தருளியுள்ளார்.

 

பாடல் எண் : 07

விண்ணிலான பிறை சூடுவர் தாழ்ந்து விளங்கவே

கண்ணினால் அநங்கன் உடலம் பொடி ஆக்கினார்

பண்ணிலான இசைபாடல் மல்கும் திருவாஞ்சியத்து 

அண்ணலார் தம்மடி போற்ற வல்லார்க்கு இல்லை அல்லலே.

 

பாடல் விளக்கம்‬:

வானகத்தே தோன்றிய பிறைமதியைத் தம் திரு முடியில் தங்கி விளங்குமாறு சூடியவர்; நெற்றிக் கண்ணால் மன்மதனின் உடலை நீறாக்கியவர். பண்களில் பொருந்திய இசையோடு பாடும் புகழ்பொருந்திய திருவாஞ்சியத்துள் விளங்கும் அவ்வண்ணலாரின் திருவடியைப் போற்றவல்லார்க்கு அல்லல் இல்லை.

 

பாடல் எண் : 08

மாட நீடுகொடி மன்னிய தென் இலங்கைக்கு மன் 

வாடி ஊட வரையால் அடர்த்து அன்று அருள்செய்தவர்

வேட வேடர் திருவாஞ்சியம் மேவிய வேந்தரைப் 

பாட நீடு மனத்தார் வினை பற்று அறுப்பார்களே.

 

பாடல் விளக்கம்‬:

நீண்ட கொடிகள் நிலைத்துள்ள மாட வீடுகளைக் கொண்ட தென்னிலங்கைக்கு அரசனாகிய இராவணன் வாடிவருந்தக் கயிலை மலையால் அவனை அடர்த்துப்பின் அருள்செய்தவர்; அருச்சுனன் பொருட்டு வேட்டுவக் கோலம் தாங்கியவர். திருவாஞ்சியத்துள் எழுந்தருளிய வேந்தர். அவ்விறைவரைப்பாட எண்ணுவார், வினை, பற்று ஆகியன நீங்கப் பெறுவர்.

 

பாடல் எண் : 09

செடி கொள் நோயின் அடையார் திறம்பார் செறு தீவினை

கடிய கூற்றமும் கண்டு அகலும் புகல்தான் வரும் 

நெடிய மாலொடு அயன் ஏத்த நின்றார் திருவாஞ்சியத்து 

அடிகள் பாதம் அடைந்தார் அடியார் அடியார்கட்கே.

 

பாடல் விளக்கம்‬:

நீண்டுயர்ந்த திருமாலும் பிரமனும் தம்மை வணங்குமாறு ஓங்கி நின்ற திருவாஞ்சியத்து அடிகளாகிய சிவபிரான் திருவடிகளை அடைந்த அடியவர்களின் திருவடிகளை அடைந்தவர்கள், துன்பம் தரும் நோய்களை அடையார். துன்புறுத்தும் தீவினைகளால் மாறுபடார். கொடிய கூற்றுவனும் அவர்களைக்கண்டு அஞ்சி அகல்வான். சிவகதி அவர்களைத் தேடிவரும்.

 

பாடல் எண் : 10

பிண்டம் உண்டு திரிவார் பிரியும் துவர் ஆடையார்

மிண்டர் மிண்டு மொழி மெய்யல பொய்யிலை எம்இறை

வண்டு கெண்டி மருவும் பொழில் சூழ் திருவாஞ்சியத்து 

அண்டவாணன் அடி கைதொழுவார்க்கு இல்லை அல்லலே.

 

பாடல் விளக்கம்‬:

பிறர் திரட்டித் தந்த சோற்றை உண்டு திரியும் சமணரும், செந்நிற ஆடையைப் போர்த்துழலும், அவரின் வேறுபட்ட புத்தரும் ஆகிய மிண்டர்கள் வலிந்து கூறும் உரைகள் மெய்யல்ல. பொய்யிலியாகிய எம் இறைவன் வண்டுகள் கிளறி உண்ணும் தேன் நிறைந்த மலர்களை உடைய பொழில் சூழ்ந்த திருவாஞ்சியத்துள் எழுந்தருளியுள்ளான். அண்டம் முழுவதும் வாழும் அவன் திருவடிகளைக் கைகளால் தொழுது வணங்குவார்க்கு அல்லல் இல்லை.

 

பாடல் எண் : 11

தென்றல் துன்று பொழில் சென்று அணையும் திருவாஞ்சியத்து

என்றும் நின்ற இறையானை உணர்ந்து அடி ஏத்தலால் 

நன்று காழி மறை ஞானசம்பந்தன செந்தமிழ் 

ஒன்றும் உள்ளம் உடையார் அடைவார் உயர் வானமே.

 

பாடல் விளக்கம்‬:

தென்றல், பொழிலைப் பொருந்தி அதன் மணத்துடன் சென்று வீசும் திருவாஞ்சியத்துள் என்றும் நீங்கா துறையும், இறைவனியல்பை உணர்ந்து அவனடிகளை ஏத்தித் துதித்தலால், நன்மை தரும் காழிப்பதியுள் மறைவல்லவனாய்த் தோன்றிய ஞானசம்பந்தனின் இச்செந்தமிழ்ப் பாடல்களில் ஈடுபடும் மனம் உடையவர்கள், உயரிய வீடுபேற்றை அடைவர்.

.
மேலும்