இந்து மதத்தின் முக்கியமான கடவுள் என்றால் அது விநாயகர்தான். எந்தவொரு நல்ல காரியத்தை தொடங்கும் முன்னரும் விநாயகரை வழிபட்டு வணங்குவது பல நூற்றாண்டுகளாய் நிலவும் ஒரு நம்பிக்கையாகும்.
விநாயகரின் வாழ்க்கையை பொறுத்தவரை இரண்டு மாறுபட்ட கதைகள் உள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரை விநாயகர் ஒரு பிரம்மச்சாரி. ஆனால் வடஇந்தியாவை பொறுத்தவரை விநாயகருக்கு இரண்டு மனைவிகள்.
இது கேட்பதற்கு வினோதமாக இருந்தாலும் இதுதான் உண்மை. வடஇந்தியாவை பொறுத்தவரையில் விநாயகருக்கு இரண்டு மனைவிகள் இருப்பதுடன் அவர்களுக்கு கோவில்களும் இருக்கிறது.
விநாயகரின் திருமணத்திற்கு பின் பெரிய கதையே இருப்பதாகவும் அங்கே கூறப்படுகிறது. இந்த பதிவில் விநாயகரின் திருமணத்திற்கு பின்னால் இருந்த சுவாரஸ்யம் என்னவென்று பார்க்கலாம்.
அனைத்து திருமணமும் விநாயகரின் முன்னிலையில்தான் நடக்கிறது. ஆனால் விநாயகருக்கே திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை.
விநாயகர் அனைவருக்கும் பிடித்த அன்பான, புத்திசாலி கடவுளாக இருந்தாலும் அவருக்கு இறுதிவரை திருமணத்திற்கு பெண் கிடைக்கவேயில்லை. அதற்கு காரணம் அவரின் யானை முகமும், பெரிய தொப்பையும்தான்.
திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் விநாயகரின் கோபமும், மற்றவர்கள் மீதான வெறுப்பும் அதிகரித்தது. இதனால் அவர் மற்ற கடவுள்களின் திருமணத்தில் இடையூறுகளை ஏற்படுத்த தொடங்கினார். அவரின் சக்தியை பற்றி நன்கு அறிந்ததால் மற்ற கடவுள்களால் அவரை எதிர்த்து எதுவும் செய்ய இயலவில்லை.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து கடவுள்களும் இணைந்து பிரம்மாவிடம் முறையிட சென்றனர். பிரம்மா நன்கு யோசித்தபின் இதற்கு ஒரு முடிவெடுத்தார். பிரம்மா தன் சக்திகள் மூலம் ரித்தி மற்றும் சித்தி என்ற இரண்டு அழகிய பெண்களை உருவாக்கினார். அவர்களை விநாயகர் திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.
இவ்வாறுதான் விநாயகருக்கு திருமணம் ஆனது.
பிரம்மாவின் புதல்விகளான ரித்தி மற்றும் சித்தியை திருமணம் செய்து கொண்ட பிறகு விநாயகருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் சுபன் மற்றும் லபன் என்னும் இரண்டு மகன்களும், திருப்தி மற்றும் மகிழ்ச்சியின் கடவுளான தேவி சந்தோஷிமா-வும் ஆவர். விநாயகரின் இரண்டு மகன்களும் அவரை போலவே மகிமை நிறைந்தவராக இருந்தார்கள். அவரது மகன் சுபன் மங்களத்தின் அடையாளமாகவும், அவரது மகன் லாபம் லாபத்தின் அடையாளமாகவும் திகழ்கிறார்கள்.
இவர்களின் உருவப்படத்தை வீட்டுவாயிலில் வைப்பது அந்த குடும்பத்திற்கு மகிழ்ச்சியையும், அதிர்ஷ்டத்தையும் வழங்கும்.
விநாயகரின் யானை முகத்திற்கு பின்னால் மூன்று கதைகள் உள்ளது. அதில் பெரும்பாலானோர் நம்புவது சிவபெருமான் விநாயகரின் தலையை வெட்டியதுதான். இது தவிர்த்து பிள்ளயாரின் யானை முகத்திற்கு பின் சனி பகவானின் சாபம் மற்றும் அசுரனான கஜாசுரனின் இறுதி ஆசை போன்ற கதைகளும் கூறப்படுகிறது.
விநாயகர் அனைத்து இடங்களிலும் ஒரு உடைந்த தந்தத்துடனேயே வழிபடப்படுகிறார். இதற்கு பின்னாலும் பல கதைகள் உள்ளது. மகாபாரதத்தை பிள்ளையார் தன் தந்தத்தை உடைத்துதான் எழுதினார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பரசுராமருடன் ஏற்பட்ட போரில்தான் உடைந்தது என்றும், பிள்ளையார் தந்ததால் சந்திரனை தாக்கியதால் உடைந்தது என்றும் கூறப்படுகிறது.
விநாயகர் எப்பொழுதும் அவரின் இடுப்பை சுற்றி பாம்புடன் இருப்பது போலத்தான் காட்சியளிப்பார். அவரின் தந்தைக்கு கழுத்தில் பாம்பு என்றால் இவருக்கோ இடுப்பில் பாம்பு. இதன் அர்த்தம் என்னவெனில் இந்த பிரபஞ்சம் முழுவதும் அவரின் இடுப்பை சுற்றித்தான் இருக்கிறது எனவும், அவர்தான் அனைத்தையும் கட்டுப்படுத்திக்கிறார் என்பதையும் உணர்த்துகிறது.
விநாயகரின் வாகனம் மூஷிகம் ஆகும். மூஷிகம் எதனை உணர்த்துகிறது எனில் மனிதர்களிடையே இருக்கும் கர்வத்தை. இது உணர்த்தும் உண்மை என்னவெனில் ஒருவர் எப்பொழுதும் தன் கர்வத்தை அடக்கி தனக்கு கீழே வைத்திருக்க வேண்டும் என்பதாகும்.
விநாயகர் ஒருமுறை துளசியை மணந்து கொள்ள மறுத்து விட்டார். இதனால் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சாபமிட்டு கொண்டனர். அதனால் விநாயகரையும், துளசியையும் ஒரே இடத்தில் வைக்கக்கூடாது. விநாயகர் இருக்கும் எந்த பூஜையிலும் துளசியை பயன்படுத்தக் கூடாது.