திருப்பரங்குன்றம் பெயர் காரணம் என்ன? 

By saravanan

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடு  திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். முருகப் பெருமான் தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட தலம். அறுபடை வீட்டு முருகப் பெருமான் கோயில்களில் இக்கோயில் அளவில் பெரியது.

லிங்க வடிவில் இருக்கும் இம்மலையைப் பற்றி சைவ சமயக் குரவர்களில் சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோர் இவ்வூருக்கு வந்து ஆலய வழிபாடு செய்து பதிகங்கள் பல பாடியுள்ளனர்.

சங்ககாலப் புலவரான நக்கீரர் இத்தலத்து முருகப் பெருமானை வழிபட்டு தனது குறை நீக்கிக் கொண்ட திருத்தலம். இத்திருத்தலத்திற்கு இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசிவம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன.

கயிலாயத்தில் பார்வதி தேவிக்கு, சிவபெருமான் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசம் செய்தபோது முருகப்பெருமானும் அவ்வுபதேசத்தைக் கேட்டார்.

புனிதமான மந்திரப் பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ளவேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறைமையாகாது. அது பாவம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.   இக்குற்றத்திற்குப் பரிகாரம் தேடி முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்திற்கு வந்து  தங்கி சிவசக்தியை நோக்கி ஆறுமுகப் பெருமான் தவமிருந்தார்.    முருகப்பெருமானுக்கு சிவபெருமான் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று காட்சித் தந்து   அந்த பாவத்தை  போக்கினார் .  

திரு + பரம் + குன்றம். பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான். குன்றம் என்றால் குன்று (மலை). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியாகத் திருப்பரங்குன்றம் என ஆயிற்று.

இக்குன்றமானது சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது. இம்மலையின் உயரம் சுமார் 190 மீட்டராகும். இம்மலையை கிரிவலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று திருஞான சம்பந்தர் தான் இயற்றிய தேவாரத்தில் பாடியுள்ளார்.  இன்றுவரை   கிரிவலம்   செய்கிறார்கள்.

தைப்பூச விழா  கொண்டாட காரணமான  நிகழ்வாக   இது   அமைந்தது. தைப்பூசத்தன்று    சிவபெருமானையும், முருகக் கடவுளையும் வழிபடுகின்றவர்கள் இஷ்ட சித்திகளைப் பெறுவார்கள். 

திருப்பரங்குன்றத்தில் தைப்பூச விழா பத்து நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.  தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் அறுபடை வீடுகளுக்கு பாதயாத்திரையாகவும், காவடி, அலகு குத்தியும் வருகை தருவது வழக்கம்.  அந்த   சிவபெருமான் , பார்வதி தேவி    ஆலயம் இன்று  திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் என்னும் பெயரில் வழங்கி வருகிறது. எனவே திருப்பரங்குன்றம் செல்லும் பக்தர்கள் முதலில் சிவன்-பார்வதியை தரிசனம் செய்த பிறகே முருகன் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும்.

முருகப்பெருமான்  சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக்  காத்தபின்பு,  இந்திரன்  விருப்பப்படி    பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க, இந்திரன் தெய்வயானையைத் தாரை வார்த்து கொடுக்க, முருகப்பெருமான்,  இந்திரன்   மகள்     தெய்வானையைத் திருமணம் செய்து கொண்டதாகத் திருப்பரங்குன்றப் புராணம் கூறுகிறது.  அந்த  வேளையில் நாணம் கலந்த மகிழ்ச்சியுடன் இருப்பது போன்று முருகப் பெருமான்   தெய்வானை திருமணக் கோலம் எழிலுற வடிவமைக்கப் பெற்றுள்ளது.

அறுபடை வீடுகளுள் மற்ற தலங்களில் நின்ற கோலத்தில் அருளும் முருகன், இங்கு தெய்வானையை மணம் முடித்த கோலத்தில் உயர்ந்த இடத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறார்.இந்திரனின் ஐராவதம் என்னும் யானை இந்திரனின் மகளான தேவயானையை பிரிய  மனமின்றி முருகனுக்கு தொண்டு செய்வதற்கு வந்து நிற்பது போன்று  அமைக்கப்பட்டுள்ளது.  

கருவறை மற்ற கோவில்களைப் போன்று அல்லாமல் பெரிய அளவில் ஐந்து தெய்வத் திருவுருவங்களின் இருப்பிடமாகக் காணப்படுகிறது.  முருகப் பெருமானின் திருமணச் சடங்கிற்கு அனைத்துத் தெய்வங்களும் வந்திருந்து வாழ்த்தும்  வகையில் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. மூலவரான முருகப் பெருமானுக்கு என தனியாக கருவறை இல்லை. இறைவன் பரங்கிரி நாதர் கிழக்கு நோக்கியும், கற்பக விநாயகர், துர்க்கை மற்றும் முருகப் பெருமான் வடக்கு நோக்கியும், பவளக் கனிவாய் பெருமாள் மேற்கு நோக்கியும் எழுந்தருளியிருக்கின்றனர். கருவறை சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. 

முருகப்பெருமானின் திருவடியின் கீழ் அண்டராபரனர், உக்கிரர் ஆகிய தேவகணத் தலைவர்களும்  இடம் பெற்றுள்ளனர்.  முருகப் பெருமான் கருவறைக்கு மேற்கில் இடப் பக்கம் தெய்வானையும், வலப் பக்கம் நாரதரும் இடம் பெற்று உள்ளனர். முருகப்பருமான் திருவுருவத்தின் மேற்பாதியில் சூரியன், சந்திரன், காயத்திரி, சாவித்திரியும், சித்த வித்தியாதரர், கலைமகள், நான்முகன், இந்திரன் ஆகியோர் காட்சி தருகின்றனர். கீழே யானை, மயில், ஆடு, சேவல் ஆகியவற்றுடன் அண்டராபரானார், உக்கிரமூர்த்தி ஆகியோர்களும் காட்சியளிக்கின்றனர். வடக்கு நோக்கி அமர்ந்திருக்கும் முருகப் பெருமானையே இப்போது பெரும் சிறப்பளித்துப் போற்றி வழிபடுகின்றனர். 

.
மேலும்