ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குல தெய்வம் இருப்பது வழக்கம். குல தெய்வத்தை வணங்கினால், நம் துன்பங்கள் விலகி, சுபிட்சம் பெறலாம்.
குல தெய்வம் என்பவர் யார்?
நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம் தான் குல தெய்வம். தந்தை பாட்டன், பூட்டன் வழியில் வணங்கி வந்த தெய்வத்தை குல தெய்வம். தந்தை பாட்டன் வழியில் கோத்திரங்கள் ஒழுங்கு படுத்தப்பட்டு, அவர்களின் சந்ததி ஒரே கோத்திரத்தில் இருக்கும். தாய் வழி என்பது வெவ்வேறு குடும்பத்திலிருந்து வந்து, தந்தை வழி கோத்திரத்தில் மாறுவர். இதை ரிஷி வழி பாதை எனவும் கூறுவதுண்டு.
ஒருவருக்கு குணங்கள் மாறி இருக்கலாம், ஜாதகம், பிறந்த தேதி மாறி இருக்கலாம். ஆனால் அவர்களின் ரிஷி வழி பாதை என்று பார்த்தால் அவர்களின் குலதெய்வம் ஒன்றாகத் தான் இருக்கும்.
இதன் காரணமாக ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால், பெயர் வைத்தல், காது குத்துதல், மொட்டை அடித்தல், திருமணத்திற்கு பிந்தைய வழிபாடு என எல்லாவற்றையும் குல தெய்வம் கோயிலில் தான் செய்து வருவது வழக்கமாக இன்றும் பெரும்பாலானோர் பின்பற்றி வருகின்றனர்.
நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த, வணங்கி வந்த குல தெய்வத்தைக் கும்பிடும் போது, அவர்கள் வரிசையில் நின்று வணங்கிய அந்த இடத்தில் நின்று நாம் வணங்கும் போது, குல தெய்வத்தின் அருள் கிடைப்பதோடு, முன்னோர்கள் பித்ருக்களாக வந்து ஆசி வழங்குவர்.
முன்னோர்களின் கூற்று படி, “நாளும், கோளும் கைவிட்டாலும் கூட, நம் குலதெய்வம் நம்மைக் கைவிடாது” என கூறியுள்ளனர்.
குலதெய்வத்தை முறைப்படி வணங்கினால், நாம் உலகத்தின் எந்த மூலையிலிருந்தாலும், அவர் நம் கூடவே இருந்து நம்ம காப்பார்.
குலதெய்வம் குறித்து காஞ்சி மகா பெரியவரின் விளக்கம்: ஒரு முறை ஒரு ஊருக்கு மகா பெரியவர் சென்ற போது, அவரை துன்பத்தில் வாடும் ஒருவர் வந்து சந்தித்தார். பெரியவர் பார்த்ததுமே அவரின் மனக்குறையைத் தெரிந்துகொள்ளக்கூடியவர் என்பதால் அவரின் பிரச்சினைகளை அறிந்து கொண்டார்.
பெரியவரிடம் என் துன்பத்தைத் தீர்க்க வழி சொல்ல வேண்டும் என கேட்டார். அதற்கு பெரியவர், நீ குல தெய்வத்தை வழிபாடு செய்து வருகிறாய் இல்லையா என கேட்டார்.
இல்லை என கூறிய அவரிடம், முதலில் நீ உன் குல தெய்வத்தை வழிபாடு நடத்தி விட்டு வா என்றார். ஆனால் அவரோ ஐயா எங்கள் முன்னோர்கள் பர்மாவில் வசித்து வந்தனர். மூன்று தலைமுறைகளாக தான் நாங்கள் இங்கு வசிக்கின்றோம். அதனால் எங்களின் முன்னோர்கள் எந்த குல சாமியை வணங்கினார்கள் என தெரியாது என்றார். நீ உன் குல தெய்வம் யார் என தேடு, அவர் உனக்கு புலப்படுவார் என்றார்.
சரி என சென்ற அவர், அவரின் பாட்டனுக்கு நெருங்கிய சிலரிடம் கேட்க, ஒருவழியாக புதர் மண்டி கிடந்த இடத்தில் சுத்தம் செய்து பார்த்து, பேச்சாயி அம்மன் என்ற அவரின் குல தெய்வத்தை கண்டுபிடித்தார்.
அதை மகா பெரியவரிடம் வந்து சொன்னார். இப்போது என் துன்பத்தை தீருங்கள் என்றார். நீ தினமும் குல தெய்வத்திற்கு பூ பொட்டு வைத்து,விளக்கேற்றி வழிபடு செய்துவா என்றார்.
அப்படி செய்தால் மட்டும் எப்படி என் துன்பம் அகலும் என கேட்டதற்கு, நீ ஒரு வருடம் பூஜை செய்து விட்டு என்னை வந்து பார் என்றார்.
ஒரு வருடம் கழித்து அந்த நபர் தட்டு நிறையப் பழங்கள், பூ, பணம் வைத்து தன் துன்பத்தை, குல தெய்வ வழிபாடு நடத்தச் சொல்லி போக்கியதற்காக இதை சமர்ப்பிக்கிறேன் என மகா பெரியவரை வந்து வணங்கினார்.
குலதெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்ய வேண்டும்? ஒரு கலசத்தில் தண்ணீர் வைத்து அதில் சந்தனம், குங்குமம் சிறிது கலந்து அதை குலதெய்வமாக ஏற்று, பூ வைத்து வணங்க வேண்டும்.
அல்லது ஒரு சிகப்பு துணி விரித்து, அதன் மேல் குத்துவிளக்கு ஏற்றி, அதை கூட நாம் குல தெய்வமாக நாம் வழிபடலாம்.
காஞ்சி பெரியவரின் பொன்மொழி: தேடினால் நம் குலதெய்வம் புலப்படுவார். நாம் குலதெய்வத்தை தேட முயன்றால் அவர் நமக்கு புலப்படுவார். என தெரிவித்துள்ளார்.
குல தெய்வத்தை எப்படி வழிபடுவது: குல தெய்வம் தெரிந்தவர்கள் அடிக்கடி சென்று வணங்குவது நல்லது. அப்படி இல்லையெனில் ஆண்டுக்கு ஒருமுறையாவது சென்று, குல தெய்வத்திக்கு அபிஷேகம் செய்து புது துணி சாத்தி, பொங்கலிட்டு வழிபட்டு வருவது சிறந்தது.
சிலரின் வீட்டில் பணம், பொருள் என எல்லாம் இருந்தும் நிம்மதி இருக்காது. இது குல தெய்வ வழிபாடு செய்யததால் ஏற்படும் குறை என கூறுவார்கள். அவர்கள் குல தெய்வத்தை வணங்கினால் பிரச்சினை தீரும்.
நாம் தேடினால் நம் குல தெய்வம் கிடைப்பார். அது வரையில், வீட்டில் கலசத்தில் தண்ணீர் வைத்தோ, விளக்கேற்றியோ அதை குல தெய்வமாக வணங்கி வாருங்கள். குல தெய்வத்தின் அருளை பெற்றிடுங்கள்.