சிவாலயங்களில் கர்ப்பக்கிரகத்திற்கு எதிரில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் நந்திதேவர் தருமவிடை எனப்படுவார்.
அழிவே இல்லாதது தருமம். அது விடை (ரிஷபம்) வடிவில் இறைவனிடத்தில் சென்றடைய அந்த நந்தியின் மீது ஈஸ்வரன் அமர்ந்திருக்கிறார்.
தருமம் இறைவனைத் தாங்குகிறது.
அது விடும் மூச்சுக்காற்றுதான் இவருக்கு உயிர்நிலை தருகிறது.
இதனால்தான் மூலவரின் தொப்புள் பகுதியை உயிர் நிலையாகக் கொண்டு, அதன் நேர்க்கோட்டில் நந்தியின் நாசி அமையுமாறு அமைக்கப்படுகிறது.
இம்மூச்சு தடையேதுமின்றி மூலவரைச் சென்றடையத்தான் நந்தியின் குறுக்கே போவதும் விழுந்து வணங்குவதும் கூடாது என்பது வழக்கத்தில் இருக்கிறது.
ருத்ரன், தூயவன், சைலாதி, அக்னிரூபன், மிருதங்க வாத்யப்ரியன், சிவவாஹனன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன், சிவப்ரியன்- இப்படி பல்வேறு சிறப்புப் பெயர்களோடு புராணங்களும் ஆகமங்களும் போற்றும் மூர்த்தி நந்தியெம் பெருமானே.
திவ்ய வடிவமும், நெற்றிக் கண்ணும், நான்கு புயங்களும்,
கையில் பிரம்பு உடைவாளும், சடை முடியும், சந்திர கலையும், நீலகண்டமும், யானை புரியும், இருபுயங்களில் மானும் மழுவும் கொண்டு இன்னுமொரு சிவரூபனாகவே திகழும் நந்தியின் கதைதான் என்ன?
சிலாதர் கண்டெடுத்த சிவக்குழந்தை
வீதஹவ்யர் என்ற பெயர் கொண்ட முனிவர், தம் சிறு வயதில் சிவனடியார் ஒருவரின் அன்னப் பாத்திரத்தில் விளையாட்டாக கல்லைப் போட்ட தீவினையால்,
இறந்த பிறகு பெரும் பாறை ஒன்றைத் தின்று தீர்க்க வேண்டும் என்ற தண்டனை இருப்பதை யமதூதர்கள் மூலம் முன்னரே அறிந்து, இறப்பதற்கு முன்னரே பாறையைத் தின்று தன் பாவம் போக்கிக் கொண்டவர்.
ஆதலால்தான் இவருக்கு “சிலாத முனிவர்’ என்ற பெயர் வந்தது.
திருமணம் முடிந்து பிள்ளை பெற்று பிதுர்க் கடனை நிறைவேற்ற சிலாத முனிவர் தவறியதால், அவரின் முன்னோர் நரகத்தில் உழன்று கொண்டிருந்தனர்.
இதனால் வருந்திய சிலாத முனிவர் சித்திரவதி என்ற பெண்ணை மணம் செய்து கொண்டும் பிள்ளைப் பேறு கிடைக்கவில்லை.
கலக்கமுற்ற சிலாத முனிவர் இந்திரனின் ஆலோசனைப்படி ஸ்ரீ சைலமலை சென்று புத்திர காமேஷ்டி யாகம் செய்ய முற்பட்டபோது, தங்கப் பெட்டியில் சிவரூப சுந்தரனாக குழந்தையொன்றைக் கண்டெடுத்தார்.
அந்தக் குழந்தையே நந்தியெம் பெருமானாவார்.
நந்தி என்றால் மகிழ்ச்சி என்று பொருள்.
சிலாதரின் கவலையைப் போக்கி மகிழ்ச்சி உண்டாக்கும் விதம் கிடைத்தவர் ஆதலால் நந்தி என்று அவருக்குப் பெயரிட்டார் சிலாதர்.
நந்தியின் தவமும் ஈசன் தந்த பட்டமும்
சிறு வயதிலேயே அனைத்து சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தார் நந்தி.
இந்நிலையில் சிலாதரின் இல்லத்துக்கு வருகை தந்த மித்ரன், வருணன் போன்றோர் நந்தியின் ஆயுள் இன்னும் ஒரு வருடமே என்று சிலாதரிடம் எடுத்துச் சொல்ல, மிக வருத்தம் கொண்டார் சிலாத முனிவர்.
நந்தி தன் தந்தைக்கு ஆறுதல் கூறிவிட்டு, சிவதவம் செய்யக் கிளம்பினார்.
முந்நூறு வருடங்கள் கடும் தவம் செய்தார் நந்தி.
இறுதியாக அவரின் தவத்தினால் மகிழ்ந்த ஈசன், நந்தியைத் தன் அம்சமாகவே மாற்றி,
தன் சிரசிலிருந்து மாலை எடுத்து நந்திக்கு அணிவித்து, அதிகார நந்தி என்ற பட்டத்தையும் அளித்து கயிலாயத்தில் அமர்த்தினார்.
நந்திதேவர் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் அற்புதக் காட்சி ஒன்று நாகை மாவட்டம், ஆத்தூர் மந்தாரவனேசுவரர் ஆலய கோஷ்டத்தில் கருங்கல்லில் வடிக்கப்பட்ட சிற்ப வடிவில் உள்ளது.
தவம் செய்ததனால் நந்தியெம் பெருமான் சிவாலயங்கள்தோறும் வீற்றிருக்கும் பேறும், பிரதோஷ காலங்களில் வழிபடுவோருக்கு அருள் வரம் தரும் பேறும் கிடைக்கப் பெற்றார்.
சிவபெருமான் இருக்குமிடம் கயிலாயம். சிவபெருமானை நேரடியாகச் சென்று தரிசித்துவிட முடியாது. நந்தி உத்தரவு பெற்றுத்தான் கயிலைக்குள் நுழைய முடியும்.
எதையாவது செய்ய முடியாமல் யாராவது தடுத்தால், “இவன் என்ன நந்தி மாதிரி தடுக்கிறான்’ என்பார்கள். நந்தியின் வேலை தடுப்பதுதான்.
முப்புரம் எரிப்பதற்காக சிவன் புறப்பட்டார். அப்போது அச்சு முறிந்தது.
விஷ்ணு நந்தியாகி, தேரினைத் தாங்கினார்.
தர்மதேவதை சிவனுக்கு நந்தியானார்.
அந்த நந்திதான் சிவாலயத்தின் கர்ப்பக் கிரகத்துக்கு மிக அருகில் இருக்கும் நந்தியாகும்.
அந்த நந்திக்கும் மூலவருக்கு இடையில் குறுக்கே போகக் கூடாது என்பார்கள்.
தர்ம நந்தியின் மூச்சுக்காற்று மூலவர்மீது பட்டுக்கொண்டே இருக்கும் என்பது ஐதீகம்.