பாரதியார் பாடல்கள் ஒவ்வொன்றும் அவரைச் சுற்றி நிகழ்ந்த நிகழ்வுகளின் வெளிப்பாடாகும். ஒவ்வொரு பாடல்களும் இயற்றுவதற்கு காரணமான சுவாரஸ்யமான நிகழ்வுகள் பல உள்ளன.
பாரதியார் பாண்டிச்சேரியில் வசிக்கும் போது, இடி மின்னலுடன் பேய் மழை பெய்தது. இதனால் வீடு, மரம் போன்றவை பல வீழ்ந்தன. இதன் காரணமாக மக்கள் அனைவருக்கும் தேவையான உதவிகள் செய்து முடித்தப் பின், முன்பு சுற்றி வந்த மடு, தோப்பு போன்ற இடங்களைச் சுற்றிப் பார்க்கப் போனார் பாரதியார். ஒரு சின்னத் தோப்பு, நூறு மரங்களுக்கு மேல் இருக்காது. அதில் சில மரங்கள் மட்டுமே விழுந்து பாக்கி மரங்களெல்லாம் சீராக இருந்தன. அதைக் கண்டதும் ஏழையின் தோப்பைக் காத்த பராசக்தியைப் பாட வேண்டும் என்று அவருக்குத் தோன்றியதாம். 'பிழைத்த தென்னந்தோப்பு' என்ற தலைப்பில் ஒரு கவிதை செய்தார். "ஏழை என்றால் காற்றிற்குக் கூடக் கருணை உண்டு என்பதற்கு இதைவிட உதாரணம் வேண்டுமா?" என்றார். பாரதியார் பாடிய பிறகு தென்னந்தோப்பு ஒரு கண்காட்சித் தோப்பாக ஆகிவிட்டது. ஊர் மக்களெல்லாம் போய்ப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். பிழைத்த தென்னந்தோப்பு
வயலிடை யினிலே செழுநீர் மடுக் கரையினிலே. அயலெவரு மில்லை, தனியே ஆறுதல் கொள்ளவந்தேன்.
காற்றடித் ததிலே, மரங்கள் கணக்கிடத் தகுமோ? நாற்றினைப்போலே சிதறி நாடெங்கும் வீழ்ந்தனவே.
சிறிய திட்டையிலே உளதோர் தென்னஞ் சிறுதோப்பு வறியவ னுடைமை அதனை வாயு பொடிக்கவில்லை.
வீழ்ந்தன சிலவாம் மரங்கள் மீந்தன பலவாம்; வாழ்ந்திருக்க வென்றே அதனை வாயு பொறுத்துவிட்டான்.
தனிமை கண்டதுண்டு; அதிலே சார மிருக்குதம்மா! பனிதொலைக்கும் வெயில், அதுதேம் பாகு மதுரமன்றோ;
இரவி நின்றதுகாண் விண்ணிலே இன்ப வொளித்திரளாய்; பரவி யெங்கணுமே கதிர்கள் பாடிக் களித்தனவே.
நின்ற மரத்திடையே சிறிதோர் நிழலினில் இருந்தேன்; என்றும் கவிதையிலே நிலையாம் இன்பம் அறிந்துகொண்டேன்.
வாழ்க பராசக்தி! நினையே வாழ்த்திடுவோர் வாழ்வார்; வாழ்க பராசக்தி! இதையென் வாக்கு மறவாதே! *************
இதே நாளில் ஜப்பானில் ஒரு புதிய சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அந்த ராஜ்யத்தை ஒரே சமனாக பகுத்து எல்லா ஜப்பானியருக்கும் ஆளுக்கு இவ்வளவு என்று பிரித்துக் கொடுத்து விடுவது; இனி பிச்சைக்காரர்களும் சோம்பேறிகளும் தங்கள் தேசத்தில் இருக்கக்கூடாது என்று செய்தார்கள். இதைப் பார்த்த புதுவை சுதேசித் தலைவர்கள் நம் நாட்டில் ஒரு சின்னக் குடும்பம் பிழைக்க எவ்வளவு நிலம் வேண்டும் என்று ஆராய்ந்தார்கள். அதைப் பாரதியார், 'காணி நிலம் வேண்டும்' என்ற பாட்டில் பாடிக்காட்டியிருக்கிறார்.
காணி நிலம்வேண்டும்
காணி நிலம்வேண்டும், -- பராசக்தி காணி நிலம்வேண்டும்; -- அங்குத் தூணில் அழகியதாய் -- நன்மாடங்கள் துய்ய நிறத்தினவாய் -- அந்தக் காணி நிலத்திடையே -- ஓர் மாளிகை கட்டித் தரவேண்டும்; -- அங்குக் கேணி யருகினிலே -- தென்னைமரம் கீற்று மிளநீரும்,
பத்துப் பன்னிரண்டு -- தென்னைமரம் பக்கத்திலே வேணும்; -- நல்ல முத்துச் சுடர்போலே -- நிலாவொளி முன்பு வரவேணும்;-அங்குக் கத்துங் குயிலோசை-சற்றே வந்து காதிற் படவேணும்;-என்றன் சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந் தென்றல் வரவேணும்.
பாட்டுக் கலந்திடவே -- அங்கே யொரு பத்தினிப் பெண்வேணும்; -- எங்கள் கூட்டுக் களியினிலே -- கவிதைகள் கொண்டு தரவேணும்; -- அந்தக் காட்டு வெளியினிலே, -- அம்மா, நின்றன் காவ லுறவேணும்; -- என்றன் பாட்டுத் திறத்தாலே -- இவ்வையத்தைப் பாலித் திடவேணும்.
யதுகிரி அம்மாள் எழுதிய 'பாரதி நினைவுகள்' நூலிலிருந்து...
இன்று இந்த நூல் அமேசானில் விலையில்லாமல் கிடைக்கிறது. தோழர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.