கொசுக்கள் எப்படி நீர் மேல் நடக்கின்றன?

By News Room

நோயைப் பரப்பி, நம் உடல் நலத்தைக் கெடுத்துத் தொல்லை கொடுக்கும் கொசுக்களுக்கு (Mosquitoes) ஒரு வியக்கத்தக்க ஆற்றல் இருக்கிறது. அவை நீரின் மேல் நிற்பதையும், நடப்பதையும் பார்த்து இருப்பீர்கள். கொசுக்களால் எப்படி அவ்வாறு நீர் மீது நடக்க முடிகிறது (How mosquitoes walk on water) ? அதற்கு சில அறிவியல் காரணங்கள் உள்ளன;

கொசுக்களின் வளைந்து கொடுக்கக் கூடிய கால்கள், ஃபெமுர் (Femur), டிபியா (Tibiya), மற்றும் டார்சஸ்(Tarsus) என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது.  இதில், மூன்றாவது பகுதியான நீண்ட, மெல்லிய, டார்சஸ்-எனப்படும் காலின் கீழ்ப்பகுதியானது, கொசுக்கள் நீர் மேல் நடப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. காலின் மூன்றாவது பகுதியான டார்சஸ் (Tarsus), நீரை விலக்கக் கூடிய செதில்கள் (Scales) போன்ற அமைப்புடன் கூடியது.

டார்சஸ், கொசுவின் எடையைப் போல் 20 மடங்கு எடையைத் தாங்கக் கூடியது. கொசுவின் மொத்த எடையையும் கால்களின் இந்த மூன்றாவது பகுதி தாங்குவது மட்டுமல்ல; கொசுவின் எடையானது, நீரின் மீது  அதிக அழுத்தம் கொடுக்காதவாறு, நீரின் மேல் பரப்பில் மிகக் குறைவான விசையைச்(Force), செலுத்துகிறது.

கொசுவின் காலின் டார்சஸ் பகுதி, அதன் பெரும்பாலான எடையையும் தாங்கிக் கொண்டு, மிகக் குறைவான விசையை நீரின் மேல் செலுத்தும் போது,  நீரின் பரப்பு இழுவிசை (Water’s Surface Tension) கொசு நீர் மேல் நடக்க உதவுகிறது. இதனால், நீரின் மீட்சித்தன்மை கொண்ட மெல்லிய திரை (Thin film like water’s surface that acts like an elastic) போன்ற மேற்பரப்பானது,  குறைவான கொசுவின் எடையைத் தாங்குகிறது.

கொசுக்களின் இந்த வியக்கத்தக்க ஆற்றலைப் பார்த்து, நீரின் மேல் உலாவும் மிகச்சிறிய ரோபோக்களை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

.
மேலும்