வாழ்க்கையை சீரழிக்கும் பழக்கங்கள்?

By News Room

முன்னோர்கள் 5 பழக்கங்களைப் பஞ்சமா பாதகங்கள் எனக் குறிப்பிட்டு அவற்றைத் தவிர்க்கச் சொன்னார்கள். எனது 5ம் வயதில் நான் கற்ற அவை எந்த அளவுக்கு உண்மையும் அவசியமும் என்பதை என் வாழ்வின் அனுபவ பாடமாக தெரிந்து இங்கே பதிலாகத் தருகிறேன். பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற செய்யாமை செய்யாமை நன்று என்பது வள்ளுவர் வாக்கு. ஔவையாரும் வேறு பல அறிஞர்கள் ஆன்மீக வாதிகளும் சொல்லும் இந்த அறிவுரையை முதன்மையாக கருதுகிறேன்.

பொய்யாமை என்பதை சிந்தனை சொல் செயல் என மூன்று நிலைகளிலும் மிக இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும். சிந்தனை எண்ணங்கள் வடிவமாக முதலில் எமது மனங்களை சொல் செயல் வடிவங்களாக மாறி எங்களை ஆட்டிப் படைக்கின்றன. அதனால்தான் வள்ளுவர் 'களவாக ஒரு பொருளை அடைவோம் என மனதால் நினைப்பதும் தீதே என 'உள்ளத்தால் உள்ளலும் தீதே கள்ளத்தாற் கவர்வோம் எனல்' என்றார்.

எல்லாக் குற்றங்களையும் செய்வதற்கான துணிச்சலையும் வெறியையும் தருவது பொய் பேசும் பழக்கம் தான். ஒரு பொய்யைக் காப்பாற்ற கோடி கோடியாகப் பொய்களைச் சொன்னாலும் அது எப்போது எப்படி அம்பலமாகி எம்மைக் குற்றவாளி ஆக்கிவிடும் எனச் சொல்ல முடியாது.

எனவே ஒருவன் நல்லவனாக உத்தமனாக வாழ பொய் பேசாமல் வாழ்ந்தாலே போதும்.'நெஞ்சுக்கு நீதி' என ஆயிரம் பக்க விளக்கம் தேவை இல்லை. அடுத்த முக்கிய நற்குணங்களாக சூது, களவு, கள்ளுக், காமம், என்பவற்றை எமது வாழ்வில் முற்றிலுமாகத் தவிர்த்து விடுவது கட்டாயமாகும். இவற்றை நாம் கடைப்பிடித்தால் எம்மைச் சுற்றி உள்ள யாருக்கும் எம்மைப் பிடிக்காது. முக்கியமாக நண்பர்கள் என எம்முடன் ஒட்டி வாழும் கெடுமதியாளர்களைச் சொல்லலாம்.

தாம் செய்யும் எல்லாக் கெட்ட செயல்களுக்கும் துணையாக எம்மையும் இழுத்து விட்டு தாம் செய்பவை எல்லாவற்றையும் எமது பெயரைச் சொல்லியே நியாயப் படுத்துவார்கள். தருணம் பார்த்து எல்லாப் பழிகளையும் எம்மீது சுமத்தி விட்டுத் தாங்கள் தப்பித்து விடுவார்கள். எனவே நாங்கள் எங்கள் நண்பர்களைத் தெரிவு செய்வதில் கவனமும் எச்சரிக்கையும் கொள்ளாது விட்டால் எமது கதி அதோ கதிதான்.

அதனால்தான் எம்மை விட வயதிலும் அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்த மூத்தோரின் உறவும் நட்பும் கோடி கொடுத்தும் கொள்ள வேண்டும் என்றார்கள். இறுதியாக நாம் நல்ல நண்பர்களையும் நல்ல புத்தகங்களையும் எப்பொழுதும் எம்முடன் வைத்திருந்தால் யாரும் எங்களின் வாழ்வைச் சீரழித்து விட முடியாது என உறுதியாகச் சொல்வேன்.

.
மேலும்