திருமணத்திற்கு பிறகு ஏற்படும் பிரச்னைகள்?

By saravanan

கணவன் மனைவி, இருவரின் பெற்றோர்கள் தலையீடுகள் அதிகம் இருந்தால் பிரச்சினை வரும். தம்பதியர் இடத்தில் தங்களின் முடிவுகளில் தனித்துவம் வேண்டும். தனிக்குடித்தனம் அல்ல. கணவனை பெற்ற தாய், மருமகளிடம் கரிசனம் வேண்டும், ஆனால் அதிகாரம் கூடாது. கடைசி காலத்தில் மருமகள் தான் சேவை செய்வாள். மகள் கூட வேடிக்கை பார்த்துவிட்டு செல்வாள். தற்போது இருக்கும் மருமகள்கள் யாருக்கும் முழுமையாக சமைக்க தெரியாது. அதேபோல் எல்லாம் வேலைகளிலும் கொஞ்சம் குறைகள் இருக்க தான் செய்யும். அதை பெரிது படுத்தவும் கூடாது. அனுசரிப்பு அவசியம் தேவை மாமியாருக்கும் மருமகளுக்கும்!

மனைவியை பெற்ற தாயார்கள், எல்லா நேரத்திலும் எல்லாம் விஷயத்திலும் தலையீடு கூடாது. குறிப்பாக சம்பிரதாயம் சம்பந்தமான விஷயங்களில்… சில பேர் நாத்தனாருக்கு செய்யும் சீர்களில் கூட மூக்கை நுழைப்பர். அதேபோல் கணவரின் தனிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்த கூடாது. மனைவிமார்கள் புகுந்த வீட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களை, பொறந்த வீட்டில் அப்படியே ஒப்பிக்க கூடாது. இதுபோன்ற spy வேலை பார்க்க கூடாது. இதனால் உங்களின் நற்பெயர் கெடுவது மட்டும் அல்ல, உங்கள் மேல் உள்ள நம்பிக்கை சிதைந்து போகும்.

கணவன்மார்கள், மனைவி மேல் உள்ள உரிமையில் மனைவி வீட்டாரிடம் அதிகம் உரிமை எடுத்துக் கொள்ள கூடாது. ஒரு நாள் அவமதிப்பு ஏற்படும். மனைவி வீட்டாரிடம் எதையும் அதிகம் எதிர்பார்க்க கூடாது. குறிப்பாக கல்யாணத்துக்கு பைக் வாங்கறது, கார் வாங்கறது, வீடு அல்லது காலி மனை வாங்கறது எல்லாம் ஒரு நாள் கல்யாணத்திற்கு நன்றாக பந்தாவாக இருக்கும். ஆனால் கடைசியில் சொல்ல மறந்த கதை சேரன் கதை தான்!!

இருவரின் பெற்றோர்களும் தம்பதியர் இருவரின் பொருளாதாரத்தில் தலையீடு கூடாது. குறிப்பாக இருவரின் உடன்பிறப்புகள் தம்பதியர் இடம் அளவோடு பழக வேண்டும். அதிகம் உரிமைகள் எடுத்தால், கடைசியில் ஒட்டு உறவே இல்லாமல் போய்விடும்.

கணவன் மனைவிக்குள் பரஸ்பரம் வேண்டும். தங்களின் நிறை குறைகளை தாங்களே பார்த்து கொள்ள வேண்டும். இருவருக்கும் நம்பிக்கை தீர்மானம் மிக முக்கியமானது. மனைவி சொல்லும் விஷயங்கள் கணவரும்… கணவர் சொல்லும் ரகசியங்கள் மனைவியும் கடைசி வரை காப்பாற்ற வேண்டும். கணவன் மனைவி இருவரும், தங்களின் சொந்த பந்த உறவுகளை மதிக்க வேண்டும். எதிலும் அளவோடு இருந்தால் நல்லது.

தம்பதியர் விஷயத்தில் மூன்றாம் நபர் தலையீடு கூடாது. இது பெற்றோர்களாக இருந்தாலும் அளவோடு இருக்க வேண்டும். எதுவாக இருந்தாலும் கணவர் மனைவியுமே பார்த்து கொள்ள வேண்டும். மூன்றாம் நபர்கள் யாரிடமும் தங்களின் பிரச்சினையை சொல்லாதீர்கள். கடைசியில் அதுவே உங்களின் வாழ்க்கைக்கு எதிராக அமையும்.

கணவன் மனைவி இருவருமே பொருளாதார விஷயத்தில் மிகவும் சரியாக இருக்க வேண்டும். சேமிப்பு, முதலீடு, வியாபாரம் போன்ற விஷயங்களில் மனைவியின் ஆதரவு அவசியம் வேண்டும். பணத்தில் சிக்கனம் தேவை. தாராளமான செலவுகள் உங்களை கடனாளி ஆக்கிவிடும். பொறுப்பு இருவருக்கும் அவசியம் தேவை.

கணவனோ மனைவியோ தங்களுக்குள் உண்மையான நம்பிக்கை கூடிய அன்பும், மதிப்பு கூடிய மரியாதையுடன் நடந்த கொள்ள வேண்டும். இதில் நடிப்பும் தேவையில்லாத பொய்கள் கூடாது. எல்லாம் பிரச்சினைகளுக்கும் மனைவி கணவனுக்கு துணையாகவும், கணவன் மனைவிக்கு துணையாகவும் இருக்க வேண்டும்.

இதை தம்பதியர் இருவரும் கடைபிடித்தால் இருவருக்குள் எந்த பிரச்சனையாக இருந்தாலும் சுமூகமாக முடியும். தேவையற்ற விவாதங்களும் விரோதங்களும் வராது. எல்லாமே தம்பதியர் கையில் உள்ளது அழகான வாழ்க்கை!!

.
மேலும்