இது தவறான எண்ணத்தை உண்டாக்கும் ஒரு பொருள் மருவிய பழமொழியாகும். மனித மனம் தான் குரங்காயிற்றே. ஒரு நொடியில் இன்னொரு மரத்துக்கு தாவிவிடும். அதுவும் தவறான பொருளில் புரிந்து கொள்ள.
பொதுவாக, தாய் தந்தை இருவர் காலத்திற்குப்பின், அண்ணன் மற்றும் அண்ணி தான் அடுத்து பெற்றோர் ஸ்தானத்தில் இருப்பார்கள். ஆனால் பாழும் மனதில் பணம், சொத்து பத்து பகைமை உணர்ச்சிகள் உறவுகளை நாசமாக்கி விடுகின்றன. சரி, இப்போது அந்த அபத்தமாக தோன்றும் பழமொழியின் சரியான பொருளை ஒரு சிறு உதாரணம் மூலம் காண்போம்.
முன்னரெல்லாம் கூட்டு குடும்பம் தான். ஒரே வீட்டில் மாமனார், மாமியார், பாட்டி, தாத்தா, பெரிய மருமகள், சின்ன மருமகள், பத்து பதினைந்து குழந்தைகள் என குடும்பமே குட்டி திருவிழா போல இருக்கும். மாமியார் தான் வீட்டின் எல்லா பொறுப்பையும் பார்த்துக்கொள்வார். முதல் மருமகள் வந்ததும் அந்த பொறுப்பு எல்லாம் மருமகளிடம் சென்றுவிடும். குழந்தைகள், பெரியவர்கள், வீட்டு நிர்வாகம் என எப்போதுமே முதல் மருமகள் பிசியாக தான் இருப்பார்.
பெரியவர்களுக்கு சாப்பாடு போட்டு, நண்டு, சிண்டையெல்லாம் தூங்க வைத்துவிட்டு, பாத்திர பண்டங்களை துலக்கி, அப்படி இப்படியென இந்த வேலை எல்லாம் முடித்துவிட்டு கணவருடன் தூங்க செல்ல அரை ராத்திரிக்கு மேல் ஆகிவிடும். அதாவது பன்னிரண்டு மணிக்கு மேல் ஆகிவிடுமாம். இப்படி அரை ராத்திரி ஆகிவிடுவதால் அண்ணனுக்கு அரை பொண்டாட்டியாம். அதே சமயத்தில் மற்ற இளைய மருமகளுக்கு அவ்வளவு பொறுப்புகள் இருக்காது. மேலும் வீட்டு பழக்க வழக்கங்களை அறிந்து கொள்ள நேரம் எடுக்கும். மாமியார் காலத்திற்கு பிறகு இருவரோ அதற்கு மேலோ பங்களிக்க தேவை ஏற்படும்.
அதுவரை தம்பியும் அவன் மனைவியும் கவலையில்லா வாழ்க்கையை முழுவதுமாக அனுபவிக்க முடியும். ஒரு கூட்டுக் குடும்ப பார்வையுடன் நோக்க வேண்டிய பழமொழியை குட்டிச்சுவராக்க வேண்டாம்.