கோவிலில் அன்னதானம் நடந்து கொண்டிருந்தது. அன்னதானம் செய்தவர் தன் குடும்பத்தினருடன் சேர்ந்து எல்லோருக்கும் உணவுப் பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தார்.
உணவை வாங்கிச் சென்று கொண்டிருந்த ஒருவர், "ஏதோ வேண்டுதலாம்!" என்றார். அன்னதானம் செய்தவரின் வேண்டுதல் பலிக்க வேண்டுமே என்று பரிதாபப்பட்டு இவர் உணவை வாங்கிக்கொண்டு போவது போன்ற தொனி அவர் குரலில் ஒலித்தது.
இன்னொரு நாள் அந்தக் கோவிலில் அதே போன்று வேறொரு அன்னதானம் நடந்து கொண்டிருந்தது. ஆனால் அன்னதானம் செய்தவரை அங்கே காணோம். கோவில் அர்ச்சகரே சர்க்கரைப் பொங்கலையும், புளியோதரையையும் பிரசாதமாக வழங்கிக் கொண்டிருந்தார்.
பிரசாதத்தை வாங்கிச் சென்றவர் ஒருவர் "யாருடைய உபயம் இது?" என்று கேட்டதற்கு, அர்ச்சகர் 'யாரோ ஒரு புண்ணியவான் என்னிடம் பணம் கொடுத்து புளியோதரையும், சர்க்கரைப் பொங்கலும் செய்து ஸ்வாமிக்கு நிவேதனம் செய்து விட்டு, பிரசாதத்தை எல்லோருக்கும் கொடுக்கச் சொல்லி விட்டுப் போனார். நிறையச் செய்து எல்லோருக்கும் நிறையக் கொடுங்கள் என்றும் சொன்னார். அவருக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என்பதே எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் 'பூஜைக்கு என்னை எதிர் பார்க்காதீர்கள்' என்று சொல்லி விட்டுப் போனார். அதன்படியே அவர் இன்று வரவில்லை" என்றார்.
இந்த இரு அன்னதானங்களைப் பற்றி ஆன்மிகச் சொற்பொழிவாளர் ஒருவரிடம் கேட்டேன். அவர் சொன்னார் "தானே நேரில் அன்னதானம் செய்தவர் ஏதோ ஒரு பலனை எதிர்பார்த்துச் செய்திருக்கிறார். நல்லது செய்தால் நல்லது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் செய்யப்பட்டது அது. இது போன்ற நல்வினைகள் நமக்குக் குறுகிய பலனையே அளிக்கும்.
"நீங்கள் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் கடனாகக் கொடுத்தால், அந்தப் பணம் உங்களுக்கு வட்டியுடன் திரும்பக் கிடைக்கலாம். ஒரு வேளை கடன் திரும்பி வராமல் போனால், 'கொடுத்த கடன் திரும்ப வரவில்லையே' என்று கவலைப் படுவீர்கள், வருந்துவீர்கள்.
"பலனை எதிர்பார்த்து நல்வினைகளைச் செய்பவர்களும் தாங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்காவிட்டால், 'இத்தனை நல்ல காரியங்கள் செய்தேனே! அவற்றுக்குப் பலன் இல்லையா?' என்று புலம்புவார்கள். அன்னதானம் வாங்கிச் சென்றவர் கூட அன்னதானம் செய்தவரைச் சற்றே இளக்காரமாக நினைத்து 'ஏதோ வேண்டுதலாம்' என்று பரிதாபப் பட்டோ, எகத்தாளம் செய்தோ பேசினார் பாருங்கள்!
"இரண்டாவது அன்னதானம் பலனை எதிர்பாராதது. ஒரு நாள் சிலருக்காவது ஒரு வேளை உணவு வழங்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் விளைந்தது. இதற்காக அவர் பலன் எதையும் எதிர்பார்க்கவில்லை. தான் யார் என்பதையும் காட்டிக் கொள்ளவில்லை. கோவில் பூஜையில் கலந்து கொண்டு புண்ணியத்தை அடைய வேண்டும் என்றோ, அன்னதானம் பெற்றுச் செல்பவர்கள் தம் முகத்தைப் பார்த்துத் தன்னை வாழ்த்த வேண்டும் என்றோ அவர் எதிர்பார்க்கவில்லை. அர்ச்சகர் அவரைப் 'புண்ணியவான்' என்கிறார்!
புண்ணியத்தை எதிர்பார்க்காதவருக்குப் புண்ணியவான் என்ற பெயர் கிடைக்கிறது! புண்ணியத்தை எதிர்பார்த்துச் செயல்பட்டவருக்குப் பச்சாதாபம்தான் கிடைத்தது!
"தீவினைகள் செய்தால் பதிலுக்கு நாமும் தீமைகளை அனுபவிக்க வேண்டும், நரகத்துக்குப் போக வேண்டும் அல்லது மீண்டும் பிறவி எடுத்து வந்து கஷ்டப்பட வேண்டும்.
"அதுபோல் புண்ணியங்களை எதிர்பார்த்து நற்காரியங்களைச் செய்தால் அதனால் புண்ணியம் கிடைக்கும். அந்தப் புண்ணியம் ஒரு விதத்தில் டிராவலர்ச் செக் போல. வேறொரு சந்தர்ப்பத்தில் அவை நமக்கு நன்மைகளாக மாறும். டிராவலர்ச் செக்கை மாற்றுவது போல் நம் விருப்பப்படி விருப்பமான நேரத்தில், விருப்பமான விதத்தில் மாற்றிக்கொள்ள முடியாதுதான். ஆயினும் புண்ணியங்களுக்குப் பலன்கள் நிச்சயமாகக் கிடைக்கும்.
"அந்த நற்பலன்கள் இந்தப் பிறவியிலேயே கிடைக்கலாம், அடுத்த பிறவியில் கிடைக்கலாம். அல்லது உல்லாசப் பயணம் போல் சில காலம் சொர்க்கத்தில் இன்ப வாழ்வு வாழும் வாய்ப்புக் கிடைக்கலாம். ஆனால் அதன் பிறகு மீண்டும் பிறவி உண்டு.
"ஆனால் பலனை எதிர்பாராமல் நன்மைகளைச் செய்பவர்கள் இறைவனுக்கு நெருக்கமாக ஆகிறார்கள். 'நிஷ்காம்ய கர்மம்' என்று கீதையில் பகவான் சொல்கிறார். அதாவது 'பலனை எதிர்பாராத செயல்.'
"இத்தகைய செயல்களைச் செய்பவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையே சொர்க்கமாகும். இப்பிறவி முடிந்ததும் அவர்களுக்கு மறு பிறவி இருக்காது. இறைவன் திருவடி நிழலிலேயே நிரந்தரமாக இருக்கும் பேறு கிட்டும். ஆனால் இப்பிறவியிலேயே இறைவனின் திருவடிகளைப் பற்றியவர்களால்தான் இது போன்று பற்றற்றுச் செயல்பட முடியும்."
எனக்கு ஓரளவு புரிந்தது போல் இருந்தது. உங்களுக்கு?
திருவள்ளுவர் சொல்வதும் இதைத்தானோ?
குறள் 5:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு
பொருள்:
இறைவனின் உண்மையான புகழை உணர்ந்து அதில் ஈடுபடுபவர்களை அறியாமையால் விளையும் இரு வினைகளும் அணுகுவதில்லை.