பள்ளியில் படிக்கும் போது, கணக்குப் பாடத்தில் (கணக்கு மணக்கு பிணக்கு என்று பாரதியார் பாணி நம் கதையும்)மதிப்பெண் நாளடையில் குறைத்து எடுக்கும்போது, ஆசிரியரால் இந்த பழமொழி சொல்லி திட்ட கேள்விப்பட்டிருக்கிறேன்.
"வர வர மாமியார் எப்படி கழுதை போல ஆகமுடியும் "
நானும் இதன் பொருள் பற்றி அடிக்கடி நினைத்துக் கொள்வேன் ,எதற்காக இந்த பழமொழி வந்தது என்று. .இதற்காக இணையத்தைப் புரட்டிய போது கிடைத்தது தான் பின்வரும் தகவல்…
சில நேரங்களில் எதற்காக சொல்லுகிறோம் என்று தெரியாமல் எல்லாத்தையும் நாம் பயன்படுத்தி வருகிறோம். அதில் ஒன்றாக இந்த பழமொழி இருக்குமோ?
ஒருவர் தன் வாழ்க்கையில் பின்னோக்கி சென்றாலும் அல்லது தடுமாறி சென்றாலும் அல்லது தன் இயல்பிலிருந்து மாறி தேய்மானத்தை அடைந்தாலோ இந்த பழமொழியை வழக்கத்தில் பயன்படுத்துவது இயல்பு .
"வர வர மாமியார் கழுதை போலானார்".
மாமியார் உண்மையிலேயே கழுதை போல் ஆயிடுவாங்களா என்ன? மருமகளை எட்டி உதைப்பாங்களோ? (இப்படி கூட நடக்குமா என்ன என்றெல்லாம் யோசித்தது உண்டு. எனக்கு அந்த மாதிரி அனுபவங்கள் ஏதும் இல்லை.என் மாமியார் ரொம்ப ரொம்ப நல்லவங்க…பாட்டி மாதிரி.அவ்வளவு வயது வேறுபாடு.)
ஆனால் பழமொழியின் உண்மையான பொருள் வேறு ."வரவர மாமியார் கயிதை போல ஆனார்" என்று சொல்ல வேண்டும்.
' கயிதை' என்பது ஊமத்தங்காயின் இன்னொரு பெயர் . ஊமத்தம் பூ , அதனின் அரும்பு பருவத்தில் மென்மையாய் நீல வண்ணத்தில் சங்கு புஷ்பம் போல் மிக அழகாக காட்சியளிக்கும். பார்த்தவுடனேயே கண்களுக்கு அழகு தரும் இந்த ஊமத்தம் பூ காய் பருவத்தை அடையும்போது வெளிப்புறத்தில் கடின முட்களோடு ,உட்புறத்தில் கொடிய விஷத்தன்மையை கொண்டிருக்கும். அதாவது தன்னுடைய இயல்பான குணத்தை அப்போதுதான் வெளிப்படுத்தும் .
பூ பருவத்தில் இருந்த தோற்றம் வேறு. வளர்ந்த பிறகு உருவாகும் தோற்றம் வேறு . பூ பருவத்தில் ரசித்தவர்கள் காய் பருவத்தில் தொட்டாலோ உண்டாலோ அவர்களுக்குத் துன்பத்தைக் கொடுக்கும் ஊமத்தம் பூ…
அதுபோலவே …
மாமியார்கள் ஆரம்பத்தில் மருமகளிடம் அன்பாய் இருப்பதும் ,பிறகு மெல்ல மெல்ல கருத்து வேறுபாடு ஏற்பட்டு விடும். அதனால் தான்' வரவர மாமியார் கழுதை போல ஆனார் 'என்ற பழமொழி தோன்றியது.
ஆக,
போலியாக பழகி நிஜமான தன் குரூர குணத்தை காட்டும் அத்தனை நபர்களுக்கும் இந்த பழமொழி பொருந்தும் என்றாலும் மாமியாரை மட்டுமே இன்னுமும் சுட்டிக்காட்டி குற்றம் சொல்ல முடியாது… அதுவும் இந்த நவீன யுகத்தில்..