விவேகானந்தர் அமெரிக்காவில் இருந்தபோது, ஹாலிஸ்டர் என்ற சிறுவனுடன் புல்வெளி ஒன்றின் வழியாக நடந்துகொண்டிருந்தார். அங்கே...
கோல்ஃப் மைதானம் இருந்தது. விவேகானந்தர் கோல்ஃப் பற்றி அறியாதவர்.
எனவே மைதானத்தில் ஒரு கொடி பறந்ததைக் கண்டதும் ஹாலிஸ்டரிடம் அதுபற்றி கேட்டார். கோல்ஃப் விளையாட்டைப்பற்றி விரிவாக விளக்கினான் ஹாலிஸ்டர்.
பிறகு, ‘ஆரம்பத்தில் விளையாடுபவர்கள் அந்தக் கொடிக்குக் கீழே உள்ள குழியில் பந்தைப் போடுவதற்கு 4,7 அல்லது 9 அவகாசங்கள் தரப்படுகின்றன’ என்று கூறினான்.
உடனே விவேகானந்தர், ‘நான் ஒரே தடவையில் குழியில் பந்தைப் போடுகிறேன். வேண்டுமானால் பந்தயம் கட்டலாம்’ என்றார். விவேகானந்தர் இதுவரை கோல்ஃப் விளையாடாதவர், எனவே அவரால் அது சாத்தியம் இல்லை என்று கருதினான் ஹாலிஸ்டர்
. எனவே, ‘பந்தயத்திற்கு நான் தயார். நீங்கள் ஒரே அடியில் பந்தைக் குழிக்குள் போட்டால் நான் உங்களுக்கு 50 சென்ட் தருகிறேன்’ என்றான். ‘போடாவிட்டால் நான் ஒரு டாலர் தருகிறேன்’ என்றார் விவேகானந்தர்.
அப்போது அங்கே வந்த லெக்கட் என்பவரும் பந்தயத்தில் கலந்துகொண்டார். ‘விவேகானந்தர் பந்தைப் போட்டுவிட்டால் நான் 10 டாலர் தருகிறேன்’ என்றார் அவர்.
விவேகானந்தர் மட்டையைக் கையில் எடுத்தார். சிறிதுநேரம் கூர்மையாகக் கொடியைப் பார்த்தார். பிறகு வேகமாகப் பந்தைத் தட்டினார். பந்து சரியாகச் சென்று குழியில் விழுந்தது!எல்லோரும் திகைத்து நின்றனர்.
‘ஆமாம் சுவாமிஜி, நீங்கள் இப்படி ஒரே அடியில் பந்தைக் குழிக்குள் போட்டது உங்கள் யோக சக்தியாலா?’ என்று கேட்டார் லெக்கட்.
அதற்கு விவேகானந்தர், ‘இதுபோன்ற அற்ப விஷயங்களுக்கெல்லாம் நான் யோக ஆற்றலைப் பயன்படுத்துவதில்லை’ என்றார்.பிறகு விளக்கினார்: ‘நான் என்ன செய்தேன் என்பதை உங்களுக்கு இரண்டு வாக்கியங்களில் சொல்கிறேன்.
முதலில் தூரத்தை என் கண்களால் அளந்துகொண்டேன், அத்துடன் என் கை வலிமை எனக்குத் தெரியும்.
இரண்டாவதாக, இந்தப் பந்தயத்தில் ஜெயித்தால் எனக்குப் பத்தரை டாலர் பணம் கிடைக்கும் என்பதை மனத்திற்குக் கூறினேன். பிறகு பந்தை அடித்தேன்.’