உடலை நேசிப்பவருக்கு வியாதி ஒரு சாபமே !!
ஏனெனில்,முதலில் நாக்கைக் கட்டுப்படுத்தவேண்டும் ! பிறகு ஆசையை அடக்கவேண்டும் ! இவையிரண்டும் உடல் மேல் ஆசை உள்ளவரை மிகவும் கஷ்டமான காரியம் !
ஆனால் பகவானையும்,பக்தியையும் நேசிப்பவருக்கு வியாதி ஒரு ஆசிர்வாதமே !
● ஸ்ரீ நாராயண பட்டத்திரிக்கு பக்கவாதம் என்னும் வியாதியே அவரை நாராயணீயம் எழுத வைத்தது !
● வாசுதேவ கோஷுக்கு அவரின் தொழு நோயே அவருக்கு ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யரின் தரிசனத்தை பெற்றுத் தந்தது !
● ஸ்ரீ நாராயண தீர்த்தருக்கு அவரின் வயிற்று வலியே வராஹ தரிசனத்தையும், க்ருஷ்ண லீலா தரங்கிணியையும் தந்தது !
● ஸ்ரீ சனாதன கோஸ்வாமிக்கு அவரின் உடல் புண்களே அவருக்கு ஸ்ரீ சைதன்யரின் பரிபூரண ப்ரேமையைக் கொடுத்தது !
● பீஷ்ம பிதாமகருக்கு அவரின் உடலில் தைத்த அம்புகளின் வலியே அவரை சஹஸ்ர நாமத்தை சொல்ல வைத்தது !
● மாரனேரி நம்பிக்கு ராஜ பிளவை நோயே அவருக்கு ஆளவந்தாரின் அனுக்ரஹத்தையும் மோக்ஷத்தையும் சாபல்யமாக்கியது !
இப்படி பல மஹாத்மாக்களின் வாழ்வில் வியாதிகளே மிகப்பெரிய மாற்றத்தையும், பக்குவத்தையும் கொண்டுவந்திருக்கிறது . . .
புண்ணிய நதிகளான கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகள் கூட , மக்கள் நீராடியதால் அவர்களின் பாவக்கறை தங்கள் மீது படிந்துள்ளதைப் போக்க சிவபெருமானின் அருளாசிப்படி துலா மாதத்தில் - ஐப்பசி மாதத்தில் - காவிரியில் நீராடி தங்களைப் புனிதப்படுத்திக் கொண்டன என புராணங்கள் கூறுகின்றன. அப்படியானால் மஹாத்மாக்களும் கூட தங்களை புனிதப் படுத்திக் கொண்டிருக்கலாம்.
அதற்காக நீங்கள் வியாதிகளை வரவேற்க வேண்டாம் ! ஆனால் வியாதிகளில் துவண்டு போகாமலிருக்க வேண்டும் !
நீங்கள் வியாதியால் வாடும் வெறும் உடலல்ல ! நீங்கள் வியாதியே இல்லாத சுத்தமான ஆத்மா★ !
வியாதிகள் உங்கள் வாழ்வை தீர்மானிப்பதில்லை ! பக்தியே உங்கள் வாழ்வை நிர்ணயிக்கிறது !
உடலை கவனித்துக் கொள்ளுங்கள் வியாதி வராமல் காத்துக்கொள்ளுங்கள் ! வியாதி வந்தால் சரி செய்து கொள்ளுங்கள் !
வியாதிக்காக மனமுடைந்து போகாதீர்கள் ! வியாதியில் வாழ்வை வெறுக்காதீர்கள்! வியாதியை வெல்ல முயற்சி செய்யுங்கள் !
வியாதியில்லாமல் நீங்கள் வாழ என்றும் பகவானின் ஆசீர்வாதங்கள் உண்டு. . . .! ..