ஆடிமாசம் பொறந்தாச்சு. புதுமண தம்பதிகளை தலை ஆடி பண்டிகைக்கு அழைத்துப்போய் மணக்க மணக்க விருந்து செய்து போட்டு புத்தம் புது ஆடைகளை கொடுத்து பானைகள் நிறைய நிறைய பலகார சீர் கொடுத்து அனுப்புவார்கள். தமிழ்நாட்டில் குறிப்பாக கிராமங்களில் இன்றைக்கும் ஆடிப்பண்டிகை அப்படித்தான் கொண்டாடப்படுகிறது. இந்த ஆடி மாதத்தில் திருமணம் நடத்த மாட்டார்கள்.
புதுமணத்தம்பதியர் சேரக்கூடாது என்றும் சொல்லி பிரித்து வைப்பார்கள். இன்றைய கால இளைய தலைமுறையினருக்கு இதெல்லாம் மூட நம்பிக்கையின் வெளிப்பாடாக இருக்கலாம். இந்த சங்கதிகள் எல்லாம் முன்னோர்கள் காரணம் இல்லாமல் செய்திருக்க மாட்டார்கள். என்ன காரணத்திற்காக ஆடியில் திருமணம் நடத்துவதில்லை, சாந்திமுகூர்த்தம் குறிப்பதில்லை, புதுமணத்தம்பதிகளை சேர விடுவதில்லை என்று பார்க்கலாம்.
தகப்பனான சூரியன், தாயான சந்திரன் வீடான கடகத்திற்குள் நுழையும் மாதமே ஆடி மாதம். ஜோதிடப்படி சூரியனே பிதுர் காரகன். ஜோதிடப்படி மாத்ரு காரகன் சந்திரன். சூரியனின் அதிதேவதை அக்னி. பிரத்யதிதேவதை சிவன். சந்திரனின் பிரத்யதி தேவதை கௌரி எனப்படும் பார்வதி.
இறைவன் அன்னைபார்வதியின் இல்லத்தை நாடிச் செல்லும் காலம். அதாவது, தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற சக்தியோடு சிவம் இணையும் காலம் என்பதால் ஆடி மாதம் சக்தி மிகவும் மகத்துவம் பெறுகிறாள். கோவில்களில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் அதிகம் நடக்கின்றன.
ஆடி மாதத்தில்தான் அம்மனே தவமாய் தவமிருந்து இறைவனோடு இணைந்தார். இறைவனே அம்பிகையை நாடிச்சென்று இணையும் இந்த ஆடி மாதத்தில் தம்பதியரை பிரித்து வைப்பது என்பது அவர்கள் ஒன்று சேரக்கூடாது என்பதற்காக அல்ல என்றும் காலமெல்லாம் இணை பிரியாமல் வாழும் கலையைக் கற்றுத்தருவதற்காக என்றும் கூறப்படுகிறது. புதிதாகத் திருமணமாகிச் சென்ற பெண்ணை அம்பிகைக்கு உகந்த இந்த ஆடி மாதத்தில் தம் இல்லத்திற்கு அழைத்து வந்து தாயார் அவளுக்கு விரதங்களையும், பூஜை முறைகளையும் சொல்லித் தரவேண்டும். மணப்பெண் இந்த ஒரு மாதம் முழுவதும் தாய்வீட்டினில் சாஸ்திர சம்பிரதாயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆடி மாதத்தில் புதுமணப் பெண்ணை பிறந்த வீட்டிற்கு சீர் வைத்து அழைத்துச் செல்கின்றனர் .
ஆடி மாதத்தில் தம்பதியர் இணைந்தார் கரு உருவாகும். ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் பிள்ளை பிறக்கும் என்பது தெரிந்ததே. சித்திரை மாதத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதனால் பிறக்கும் பிள்ளைக்கும், பிரசவிக்கும் தாய்க்கும் உடல் நலம் கெடும். அதனால்தான் புதுமணத் தம்பதியர் பிரித்து வைக்கப்படுகிறார்கள் என்று சினிமாவில் வசனங்கள் பேசப்படுகின்றன.
கத்திரி வெயில் காலமான சித்திரையில் தலைச்சான் குழந்தை பிறந்தால் சீரழியும் என்றும், அதோடு தகப்பனுக்கு ஆகாது என்று மூட நம்பிக்கையை பரப்பி விடுகின்றனர். இதற்காகத்தான் தம்பதிகளை பிரிக்கின்றனர் என்றும் சொல்லப்படுகிறது. இதுவும் உண்மையா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டும். சித்திரை மாதத்தில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பிரசவித்த தாய்க்கு பாதிப்பு ஏற்படும் என்பதாலேயே சித்திரை மாதம் குழந்தை பிரசவிப்பதை தள்ளிப்போடுவதற்காகவே ஆடியில் கருத்தருக்காமல் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.
ஆடி மாதத்தில் மழையும் காற்றும் அற்புதமாக இருக்கும். 'ஆடிப்பட்டம் தேடி விதை என்பது பழமொழி' ஆடி மாதத்தில் உழவுப்பணிகளை மேற்கொள்கின்றனர். விவசாயத்திற்காக அதிக பணம் செலவாகிவிடும் எனவே திருமணத்திற்கு பணத்தை செலவு செய்வது சிரமமாக இருக்கும் என்ற காரணத்தினாலும் ஆடியில் திருமணங்களை நடத்துவதில்லை. ஆடியில சேதி மட்டும் சொல்லி விட்டு அடுத்த மாதமான ஆவணியில் பரிசம் போட்டு திருமணம் நடத்துகின்றனர்.
ஆடி மாதம் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டும். இறை வழிபாட்டிற்காக இந்த மாதத்தினை ஒதுக்க வேண்டும் என்பதற்காகவே ஆடி மாதத்தில் திருமணங்கள் நடத்துவதில்லை. ஆடி மாதம் தவமிருந்து அன்னை பார்வதி தனது கணவர் சிவபெருமானை இணைந்தார். இதனை நினைவுகூறும் விதமாகவே ஆடித்தபசு பண்டிகை சிவ ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது. கணவன் மனைவி ஒற்றுமை அற்ப விஷயத்திற்காக தம்பதியருக்குள் பிரிவினை உண்டானாலும் மனைவியானவள் கணவனையே தெய்வமாக பாவிக்க வேண்டும். கணவனும் மனைவியின் மனநிலை புரிந்து, கருத்து வேறுபாட்டினை மறந்து தன் இல்லாளை நாடிச் செல்ல வேண்டும் என்பதே புராணங்கள் நமக்குச் சொல்லும் கருத்து.
திருமணங்கள் கணவனின் நலனே தன் நலன் என மனைவியும், மனைவியின் துணையே தன் பலம் எனக் கணவனும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்யக்கூடாது என்ற கருத்தும் நிலவுகிறது. எனவேதான் திருமணங்களும் ஆடி மாதத்தில் செய்யப்படுவதில்லை என்கின்றனர் முன்னோர்கள். எல்லாம் நன்மைக்கே....