நடிகர் மோகன், தமிழில் நடித்த முதல் மூன்று படங்களுமே ( மூடுபனி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, கிளிஞ்சல்கள்) சூப்பர் ஹிட்டானவை. இந்த அதிர்ஷ்டவாய்ப்பு, தமிழில் இதுவரைக்கும் மோகனுக்கு அடுத்து ராஜ்கிரண் க்கு மட்டுமே கிடைத்துள்ளது.
இந்திய திரையுலக வரலாற்றிலேயே, ஒரு இசையமைப்பாளருக்கு, ரசிகர்கள் கட்அவுட் வைத்த பெருமைக்குரிய முதல் படமான பயணங்கள் முடிவதில்லை படமும் மோகன் படம் தான். அந்த இசையமைப்பாளர் இளையராஜா தான். இளையராஜாவின் 100 வது படமான மூடுபனி, 300 வது படமான உதயகீதம் இரண்டுமே மோகன் நடித்த படங்களாகும்.
.ஒரே ஆண்டில் அதிகபடங்களில் நடித்த சாதனையைப் புரிந்துள்ள மிகச்சில தமிழ் நாயக நடிகர்களுள் மோகனும் ஒருவர். மிக பிரபலமான கதாநாயகனாக விளங்கியபோதே, கதாநாயகிக்கே அதிக முக்கியத்துவமளிக்கும் வகையிலான கதைகொண்ட படங்களிலும் அதிகளவில் நடித்து, வெற்றியும், புகழும் தேடிக்கொண்ட நடிகர்களுள் மோகனும் ஒருவர்.
மோகன், தன் சொந்தக்குரலில் பேசி நடித்த முதல் தமிழ்ப்படம்" பாசப்பறவைகள்". மோகனை, கோகிலா மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் பாலுமகேந்திரா. ஆனால் அவருடைய இயக்கத்தில், முழுநீள கதாநாயகனாக, மோகன் ஒரே ஒருபடத்தில் மட்டுமே நடித்துள்ளார். அப்படம், "ரெட்டைவால் குருவி".
இவர் ஒரு படத்தில் நடித்தாலே, அப்படம் மினிமம் வசூல் கியாரண்டி என்ற நிலை நிலவியதால், இவர், முழுபடத்தில் நடிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை; கௌரவ வேடத்திலாவது தம் படங்களில் நடித்தால் போதுமென தயாரிப்பாளர்கள் விரும்பிய காலம் உண்டு.. மோகன் நடித்த "ஓ மானே! மானே!" என்ற படத்தில் இடம் பெற்ற "பொன்மானை தேடுதே!" என்ற பாடலை, கமல் பாடியுள்ளார் என்ற விவரம், பலரும் அறியாதது.
அன்புள்ள காதலுக்கு" என்ற ஒரே ஒரு படத்தை மட்டும் சொந்தமாக இயக்கி, தயாரித்து, நடித்துள்ளார் மோகன். திரையுலக மறுபிரவேசத்திலும், கதாநாயகனாகவே நடிக்க விரும்பிய மோகன், தன்னைத்தேடிவந்த பல பட வாய்ப்புகளை நிராகரித்தார்.