தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழியில் 1000த்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பல்வேறு புதுமைகளை சினிமாவிற்குள் புகுத்திய மாபெரும் கலைஞன் நடிகர் நாகேஷ். அவர் தன் வாழ்நாளில் சந்தித்த அனுபவங்களும், வலிகளும், சந்தோஷங்களும் ஏராளம். அதுகுறித்த தொகுப்பு இங்கு காணலாம்.
தமிழ் சினிமாவின் காமெடி நடிகன் என்ற அடைப்புக்குள் மட்டுமே பொருத்திவிட முடியாத அசாத்திய கலைஞன் நடிகர் நாகேஷ். அவர் காமெடி நடிகர் என்றால் காமெடியன், குணச்சித்திர நடிகர் என்றால் குணச்சித்திர நடிகர், கதாநாயகன் என்றால் கதாநாயகன், வில்லன் என்றால் வில்லன், செத்த பிணம் என்றால் அதுவும் தான்... நண்பனாக, அண்ணனாக, தம்பியாக, மச்சானாக, தந்தையாக, தாத்தாவாக, மூச்சு முட்ட சிரிக்க வைக்கும் நடிகனாக, தேம்பித் தேம்பி அழவைக்கும் சோக உருவமாக, பார்த்தவுடன் கொலை நடுங்கும் வில்லனாக, குழைந்து குழைந்து காரியம் சாதிக்கும் நயவஞ்சகனாக, உயிரற்றவனாக, உயிர் மறைந்தாலும் கலை உலகம் தேடி உயிர்ப்பளிக்கும் மங்காத ஆளுமையாக, ஆணாக, பெண்ணாக என இவர் நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது. இந்த உலகை விட்டு மறைந்தாலும், தொழில்நுட்ப உதவியின் மூலம் மீண்டு(ம்) தன் கலைத் தாகத்தை தீர்த்துக் கொண்டவர் நடிகர் நாகேஷ்.
ஆண்டுகள் பல கடந்தும் இன்றளவும் துளி மரியாதை குறையாத மனிதர்களை தன்னைச் சுற்றி வைத்திருக்கும் இவர், மைசூரை பூர்வீகமாகக் கொண்டவர். அப்போது, ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் தாராபுரத்தில் 1933ம் ஆண்டு பிறந்தார். செயூர் கிருஷ்ண நாகேஸ்வரன் என்ற இயற்பெயர் கொண்ட நாகேஷ், பள்ளி காலம் தொட்டே நடிப்பில் ஆர்வம் கொண்டவர். இதனால், தன் பள்ளி, கல்லூரி காலத்தில் தன் அசாத்திய நடிப்பால் பலரையும் கவர்ந்தார். இதனால், சினிமாவிற்கு வரும் முன்பே நடிகர் எம்ஜிஆரிடம் பாராட்டையும் பெற்றார்.
நாட்கள் இப்படி செல்ல, தன் கல்லூரி காலகட்டத்தில் தொடர்ந்து 3 முறை அம்மை நோயால் பாதிக்கப்பட்ட அவரின் தேகம் முற்றிலும் மாறிப்போனது. ஒடிசலான உடல், புள்ளிகள் நிறைந்த முகம் என சினிமாவில் நடிகராவதற்கான எந்த முக அமைப்பும் இல்லாமல் சினிமா கனவுடன் வீட்டை விட்டு ஓடிவந்தார். அந்த சமயத்தில் இவருக்கு ரூம் மேட்டாக அறிமுகம் ஆனவர் தான் பாடலாசிரியர் வாலி. வறுமையின் பிடியில் சிக்கியிருந்த இருவரும் சினிமாவில் சிறு சிறு பணி செய்து முன்னேறியவர்கள் தான்.
தமிழில் 1958ம் ஆண்டு வெளியான 'மனமுள்ள மறுதாரம்' என்ற திரைப்படம் தான் நடிகர் நாகேஷை திரை உலகிற்குள் அழைத்து வந்த படம். இந்தப் படத்தில் அவரது நடிப்பை பலரும் கேலி செய்ய எம்.ஆர். ராதாவின் ஆறுதலே அவருக்கு ஊக்கம் அளித்தது.
பின், கிடைக்கும் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த அவரின் சினிமா பசிக்கு தீனி போட்ட திரைப்படம் 'சர்வர் சுந்தரம்'. இயக்குநர் கே.பாலச்சந்தரின் நாடகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அந்த படத்தில், தன் அசாத்திய நடிப்பாலும், உடல் மொழியாலும், வசன உச்சரிப்பு, பாவனைகளாலும் மக்களைக் கவர்ந்தார். இதற்குப் பின் நாகேஷின் திரை வாழ்க்கையில் வெறும் ஏறுமுகம் மட்டுமே இருந்தது.
மக்களை மகிழ்விக்கும் கலைஞனான நாகேஷ், திரைப்படங்களில் போட்ட கெட்டப்களே, அவரை ரசிகர்களிடம் வெகுவாக கொண்டு சென்றது. 'திருவிளையாடல்' திரைப்படத்தில் தருமியாக வந்து சிவனுடன் தர்க்கம் செய்யும் இவரது நடிப்புக்கு இன்றுவரை ரசிகர்கள் உண்டு. அதிலும் 'கேள்விகளை நீ கேட்கிறாயா அல்லது நான் கேட்கட்டுமா' என்ற வசனம் காலம் தாண்டியும் ஒலித்து வருகிறது.
புதுமுக நாயகனாக அறிமுகமான ரவிச்சந்திரன், முத்துராமன், பாலையா உடன் சேர்ந்து 'காதலிக்க நேரமில்லை' திரைப்படத்தில் அதகளம் செய்திருப்பார் நாகேஷ். முழுக்க முழுக்க காமெடி கலந்த காதல் திரைப்படமாக வெளிவந்த இந்தப் படத்தில் சினிமா இயக்குநராகவும். தந்தையின் சொத்துகளை வைத்து 'ஓஹோ புரொடக்ஷன்ஸ்' எனத் தொடங்கி வீட்டிலுள்ள ஒவ்வொருவரிடமும் கதை சொல்லும் விதம் உள்ளதே அப்பப்பா... இவர்களின் நடிப்பால், இந்தத் திரைப்படம் இப்போதும் பார்ப்போர் கண்களுக்கு எவர்கீரனாகவே அமையும். நாகேஷின் நச் வசனங்கள், அன்று தொட்டு இன்றைய சினிமா வரை பிரதிபலிக்கிறது.
பட்டனத்தில் பூதம், தில்லானா மோகனாம்பாள், அன்பே வா போன்ற திரைப்படங்களில் நாகேஷின் நடிப்பு மக்கள் மனதில் மெஹா ஹிட் அடித்தது. வழங்கப்பட்ட கேரக்டர் எதுவாக இருந்தாலும், அதில் தன்னுடைய முழு முயற்சியையும் அளித்து அதனை மக்களின் மனதிற்கு கடத்தும் மாயக்காரனாக பல படங்களில் இருந்துள்ளார்.
இதுவரை காமெடியால் மட்டுமே மக்களை இழுத்து வந்த நாகேஷ், 'எதிர்நீச்சல்' படத்தில் கதாநாயகனாக அசத்தி இருப்பார். ஒரு ஒண்டி குடித்தன குடியிருப்பில், அங்கு வசிக்கும் குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்து, அவர்கள் தரும் உணவினை உண்டு வரும் ஓர் அனாதைப் பையனாக அந்தப் படத்தில் வாழ்ந்தே இருப்பார் நாகேஷ். வறுமை, படிப்பு, காதல், திருட்டுப் பட்டம் என அனைத்திலும் அவமானங்களை கண்ட நபர் வாழ்க்கை எப்படி எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறுகிறார் என அந்தப் படத்தில் 'மாது'வாக வாழ்ந்து காட்டி வறுமையின் பிடியிலுள்ள மக்களுக்கு ஊக்கத்தை அளித்திருப்பார் நாகேஷ்.
ஒரு நடிகனுக்கு அழகே, தனது நடைப்பை ஒவ்வொரு படைப்பிலும் மெருகேற்றி செல்வது தான். அதனை தன்னுள் மட்டும் சுழல விடாமல், அடுத்த தலைமுறைக்கும் கடத்த வேண்டியதும் தான். அப்படி நடந்து கொண்டவர் நாகேஷ். இயக்குநர் சிகரம் பாலச்சந்தரின் ஆஸ்தான மாணவரான நாகேஷ், தனது அசாத்திய திறனால் அவரது மனதில் உச்சத்தில் இருந்துள்ளார். இதனால், பாலச்சந்தர், நாகேஷை எப்போதும் பாராட்டி வருவாராம். பாலச்சந்தரின் பட்டறையில் வளர்ந்து வந்த தற்போது உலகம் போன்றும் 'உலக நாயகனாக' உள்ள கமலுக்கு இது எரிச்சலையே தந்ததாம். இதனால், நாகேஷை கொலை செய்துவிடலாம் என்ற எண்ணம் கூட தோன்றியுள்ளது என கூறியுள்ளார் நடிகர் கமல் ஹாசன்.
பின், அவரின் அபாரமான நடிப்புத் திறமையால் ஈர்கக்பப்ட்ட கமல், தன்னுடைய பல திரைப்படங்களில் நாகேஷை முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைத்துள்ளார். அதில், குறிப்பிட்டு கூறவேண்டும் என்றால், மைக்கேல் மதன காமராசன், நம்மவர், மகளிர் மட்டும், அபூர்வ சகோதரர்கள், பஞ்சதந்திரம், அவ்வை சண்முகி, தசாவதாரம் என அவர் உயிர் உள்ள வரை அவரின் நடிப்புத் திறமையை பயன்படுத்தியிருப்பார்.
மேலும், நாகேஷின் நடிப்பில் காமெடியையும், சோகத்தையும் பார்த்து வந்த சினிமா ரசிகர்களை வில்லத்தனத்தையும் காட்ட வைத்தவர் கமல்ஹாசன் தான். தன்னுடைய 'அபூர்வ சகோதரர்கள்' திரைப்படத்தில் மிகக் கொடுரமான வில்லனாகவும், 'மைக்கில் மதன காமராசன்' திரைப்படத்தில் மகளின் திருமணத்திற்காக பணத்தை திருட நினைக்கும் தகப்பனாகவும் பயங்கரமாக ஸ்கோர் செய்திருப்பார்.
மேலும், நம்மவர் படத்தில் மகளின் பிரிவை தாங்க முடியா தந்தையாக அவர் காட்டிய நடிப்பு அசாத்தியமானது. இதுமட்டுமா, இதுவரை உயிருள்ள ஒரு நபராக நடித்து மக்களை ஈர்த்து வந்தது போக, மகளிர் மட்டும் திரைப்படத்தில், உயிரற்ற பிணமாக நடித்து பார்ப்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருப்பார். ஓரே காட்சியில் நடித்திருந்தாலும், அந்தக் காட்சிக்கான மவுசு என்பது காலம் தாண்டி நிலைத்து நிற்கிறது.
அவரது கலைப்பயணம் இத்தோடு நின்று விடாமல், 'மின்னலே' திரைப்படத்தில் மாதவனுக்கு தாத்தா சுப்ரமணியாக வந்து இளைஞர்களின் ஸ்கோர் செய்திருப்பார். மேலும், நடிகர்கள் அஜித், விஜய் என இவர் கைகோர்த்த நடிகர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
நாகேஷின் நடிப்பை வெறும் காமெடி என மட்டும் வரையறுத்து நம்மால் ஒரு பெட்டிக்குல் போட்டு அடைத்துவைக்க முடியாது, நடிப்பில் நவரசத்தையும் காட்டி சினிமா வரலாற்றில் கால் மேல் கால் போட்டு அமர்ந்துள்ள இவர், நடனத்திலும் கெட்டிக்காரர். முறையாக யாரிடமும் நடனப் பயிற்சியை மேற்கொள்ளா விட்டாலும், தமிழ் சினிமாவில் இவரைப் போல் நடனமாட இன்றுவரை யாருமில்லை என்பதே உண்மை. அதுமட்டுமின்றி, நாகேஷ் பாணி என நடனத்தில் தனக்கான பெயரையும் பதித்துவிட்டு சென்றுள்ளார்.
தனது உயிர் பிரியும் வரை சினிமாவில் நடித்து பல வரலாற்றை உருவாக்கிய நாகேஷுக்கு, நடிகர் ரஜினிகாந்த், ஒருபடி மேலே சென்று மரியாதை அளித்துள்ளார். ரஜினி காந்த்தின் மகள் சௌந்தர்யா இயக்க, ரஜினி காந்த் நடித்த 'கோச்சடையான்' திரைப்படத்தில் மறைந்த நடிகர் நாகேஷை தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் நடிக்க வைத்திருப்பர். அந்தப் படத்தில், அவரது உடல்மொழியையும் குரலையும் மீண்டும் கேட்ட ரசிகர்கள் அந்தக் காட்சிகளுக்கான பாராட்டையும் வழங்கினர்.
எம்ஜிஆர், சிவாஜி, முத்துராம்ன், ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், சிவக்குமார், கமல் ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித், மாதவன் என 4 சினிமா தலைமுறைகளுடன் சுமார் 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மொழி சினிமா என தனது எல்லையை சுருக்காமல் பல தென்னிந்த மொழி படங்களில் நடித்துள்ளார்.
இவரின் நடிப்புத் திறமையை சினிமா வட்டாரம் வெகுவாக பாராட்டி வந்த நிலையில், கமல் ஹாசனின் 'நம்மவர்' திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்திருந்த 'பிரபாகர் ராவ்' என்ற கதாப்பாத்திரம் மக்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், அவருக்கு தேசிய விருது கிடைத்தது. தமிழ் சினிமாவில் ஒரு காமெடி நடிகர் தேசிய விருது வென்றது அதுவே முதல் முறை.
மேலும், இவர் தேசிய விருது உள்ளிட்ட எந்த விருதையும் வீட்டின் ஷோ கேஸ்களில் வைத்து அழகு பார்த்து கிடையாதாம். அதுமட்டுமின்றி, பண விஷயங்களில் கராரான இவர், ஏவிஎம் ஸ்டூடியோவில் பணத்திற்காக சண்டையும் போட்டுள்ளாராம். சினிமாவிற்கு முன் வீட்டை விட்டு ஓடி வந்த இவர், தன்னை தன் குடும்பத்தாரிடம் நிரூபிக்க பல போராட்டங்களை எதிர்கொண்டுள்ளார். ஆனால், அதிக பணம் சம்பாதித்து தன் தாயை கௌரவிக்க எண்ணிய நாகேஷுக்கு அது ஏமாற்றத்தையே தந்தது.
திரைப்படங்களில் மக்களை சிரிக்க வைத்த நாகேஷ் வாழ்க்கையின் பல நாட்களை துயரிலேயே கடந்துள்ளார். அவர் புகழின் உச்சிக்கு சென்ற போது, அவரது படத்தில் வந்த காட்சியைப் போலவே, இவர் தாயை காண செல்லும் முன்பே அவர் உடல் நலக் குறைவால் இறந்து போயிருந்தார். நாகேஷால் அவரின் தாயாருக்கு இறுதி சடங்குகளைக் கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்தக் காரணத்தால், நடிகர் நாகேஷ் சொல்ல முடியா துயரையும் சந்தித்தார்.
தன் தாய்- தந்தையிடம் காட்ட முடியாத பாசத்தை, தன் 3 பிள்ளைகளிடம் காட்டி சந்தோஷப்பட்டார் நாகேஷ். தன் பிள்ளைகள் தேர்ந்தெடுத்த கெரியர், அவர்கள் தேர்ந்தெடுத்த வாழ்க்கைத் துணை என அனைத்திற்கும் சம்மதம் தெரிவித்து நல்ல தந்தையாகவும் ஸ்கோர் செய்துள்ளார்.
எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும், தன்னை சட்டென அதில் பொறுத்திக் கொள்ளும் நாகேஷ் ஒரு நடிகன் மட்டுமல்ல கலைஞன் என பலரும் அவரை கௌரவித்து வருகின்றனர். உலக நாயகனாக அறியப்படும் கமல் ஹாசன் இன்றளவும் ஒருவரின் நடிப்பு திறமைக்கு வியந்து, அவரை ஒவ்வொரு மேடையிலும் நினைவுபடுத்தி வருவதுடன் தனது குருவாக எண்ணி மரியாதை செய்து வருகிறார் என்றால் அதுவும் நாகேஷ் தான்.
திரையுலகில் தன்னை நிரூபிக்க தேகமும் முகமும் தேவையில்லை, குறிக்கோளை நிறைவேற்ற நாம் கொண்டுள்ள வியூகமே முக்கியம் என, பல கனவுகளுடன் வீட்டை விட்டு வெளியேறும் சினிமா ஆர்வலர்களுக்கு பெரும் பாடமாகவும் நிற்கிறார் 'நம்மவர்' நாகேஷ் அவர்கள்.
காலங்கள் உருண்டோடினாலும், அவர் விட்டுச் சென்ற பாதையும், சாதனைகளும் என்றும் நிலைத்தே நிற்கும் என்பதில் சந்தேகமே இல்லை.