இந்திய சினிமா உலகமே தலைவர் என அழைக்கும் ஒரே நடிகராக ரஜினி இருக்கிறார். நம்ம ஊரு விஜய் மட்டுமல்ல. பாலிவுட் சூப்பர்ஸ்டாரான ஷாருக்கான், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் என எல்லோருக்கும் ரஜினி தலைவர்தான். அந்த அளவுக்கு தனது பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கிறார் ரஜினி.
50 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். இதில், 45 வருடங்களாக ஹீரோவாக நடித்து வருகிறார். எப்போது ஹீரோவாக நடிக்க துவங்கினாரோ அப்போதே சூப்பர்ஸ்டாராகவும் மாறிவிட்டார். அவருக்கு பின் பல நடிகர்கள் வந்துவிட்டாலும் ரஜினியின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது.
அவ்வளவு ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். 72 வயதிலும் அவரால் ஜெயிலர் எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுக்க முடிகிறது. சமீபத்தில் வெளியான வேட்டையன் படமும் நல்ல வசூலை பெற்று வருகிறது. இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார்.
திரையுலகில் ரஜினியை போல எளிமையான ஒரு மனிதரை பார்க்கவே முடியாது. இதற்கு உதாரணமாக பல சம்பவங்கள் இருக்கிறது. இப்போதுதான் படப்பிடிப்பு தளத்தில் ஹீரோக்கள் ஓய்வெடுக்க கேரவான் வந்துவிட்டது. ஆனால், 80களில் அப்படி இல்லை. வெளியூர் படப்பிடிப்புக்கு போனால் அங்கு இருக்கும் லாட்ஜ்களில்தான் தங்க வேண்டும்.
அது எல்லாமே வசதியாக இருக்கும் என சொல்ல முடியாது. கிராமபுறங்களில் படப்பிடிப்பு நடந்தால் அந்த ஊரில் ஏதேனும் ஒரு இடத்தில்தான் தங்க வேண்டும். பஞ்சு அருணாச்சலம் கதை எழுதி தயாரித்த திரைப்படம் தம்பிக்கு எந்த ஊரு. இந்த படத்தின் படப்பிடிப்புக்காக கொடைக்கானலுக்கு சென்றிருக்கிறார்கள். அங்குள்ள ஒரு கிராமத்தில் காட்சிகளை எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.
ஆனால், தொடர்ந்து 3 நாட்கள் மழை வந்ததால் அங்கு படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. எனவே, மலையிலிருந்து கீழே இறங்கி வேறொரு கிராமத்திற்கு போயிருக்கிறார்கள். கொண்டு சென்ற வேன் வேறு ஒரு ஊரில் நிற்கிறது. சாப்பாட்டுக்கு வழி இல்லை. ரஜினியோ கவலைப்படவில்லை.
இங்கே டீ கடைகளில் கிடைக்கும் வடை, போண்டாக்களை வாங்குகள். பீடா கடைகளில் சாப்பிட என்ன இருக்கிறதோ வாங்குங்கள் என சொல்லிவிட்டாராம். சில நாட்கள் அதை மட்டுமே சாப்பிட்டு அந்த படத்தில் நடித்திருக்கிறார். மேலும், தங்க இடம் இல்லாததால் அந்த ஊரில் இருந்த ஒரு சிறிய சாதாரண கல்யாண மண்டபத்தில் படுத்து தூங்கி இருக்கிறார்.
இந்த தகவலை அந்த படத்தில் பணிபுரிந்த ஒருவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் கூறியிருக்கிறார்.