நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'விக்ரம்'. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ம் தேதி வெளியாக உள்ளது. விக்ரம் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வருகிற மே 15-ந்தேதி அன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த திரைப்படத்தின் நடிகர் கமல்ஹாசன் எழுதி, கமல்ஹாசன் மற்றும் அனிருத் இணைந்து பாடியுள்ள 'பத்தல பத்தல' என்று தொடங்கும் பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி வெளியானது. கமல் நடனமாடும் இந்த பாடலில் கமலின் குத்தாட்டம் ரசிகர்களை பெரும் அளவில் கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலானது. மேலும் யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடம் பிடித்தது.
இந்தப் படத்தின் பாடல் வரிகள் 'பத்தல பத்தல' பாடலில் இடம்பெற்றுள்ள சில வரிகள் தற்போது பல சர்ச்சைகளை ஏற்படுத்து வருகிறது. அதில் இடம்பெற்றுள்ள “ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்லே இப்பாலே” எனும் வரிகள் ஆளும் அரசை விமர்சிக்கும் வகையில் அமைந்து இருப்பதாகக் கூறி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனை விமர்சிக்கும் வகையில் நடிகை கஸ்தூரி அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில், சகலகலாவல்லவன்+மார்க்கண்டேயன் = கமல். வானதி அம்மையாரிடம் தோத்த காண்டு மொத்தத்தையும் லிரிக்ல இறக்கிட்டாப்ல. ஒன்றியம் ங்குற ஒத்தை வார்த்தையில தன் மொத்த அரசியலையும் சுருக்கிட்டாப்ல. கூட்டணி ஆட்சியில இல்லைனாலும் படக்காட்சியில வந்துருச்சு என்று பதிவிட்டு கமலை காட்டமாக விமர்சித்துள்ளார். இது சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாகி உள்ளது.