திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் பிரசாந்தின் படம் அந்தகன். இந்தப் படத்திற்கு பிரபல சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் கொடுத்துள்ள விமர்சனம் இதுதான்..! அந்தகன் படத்தில் பிரசாந்த் கண் தெரியாத பியானோ கலைஞராக நடித்துள்ளார். இந்தப் படத்தைத் திரைக்கதை வசனம் எழுதி இயக்கியவர் அவரது தந்தை தியாகராஜன். படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அந்தாதூண் என்று இந்தியில் வெளியாகி வசூல் சாதனை படைத்த படம். அதன் தமிழ் ரீமேக் தான் அந்தகன்.
அந்தகன் என்றால் கண் தெரியாதவன் என்று தமிழில் அர்த்தம். பிரசாந்துடன், கார்த்திக், சமுத்திரக்கனி, ஊர்வசி, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, வனிதா, பெசன்ட் ரவி என பலர் நடித்துள்ளனர். கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் கதையில் அடுத்தடுத்து நிறைய திருப்பங்கள் உள்ளது. கண் தெரியாத பிரசாந்துக்கு பியானோ வாசிக்கத் தெரியும். அவர் ஒரு இக்கட்டான சூழலில் மாட்டிக் கொள்கிறார். அவரை ஒரு குடோனில் கடத்தி வைத்து துன்புறுத்துகிறார்கள். துரோகிகளின் சதியில் இருந்து எப்படி மீள்கிறார் என்பது தான் கதை.
அடுத்தடுத்து கண்களைத் திருப்ப முடியாத அளவுக்கு திருப்பங்கள் நிறைந்த படம். அஜீத், விஜய், கமல், ரஜினி போன்றவர்கள் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்பவர்கள். அது போல தான் இந்தப் படத்தில் பிரசாந்த். இந்த வயதிலும் இளமையாக இருக்கிறார். கண்களை மூடிக்கொண்டு குருடனாக நடித்து விடலாம். ஆனால் இந்தப் படத்தில் கண்களைத் திறந்து கொண்டு பார்வையற்றவராக அற்புதமாக நடித்துள்ளார். ஆனால் திடீரென அவருக்குக் கண் பார்வை தெரியும். அது எப்போ தெரியும்னு யாருக்கும் தெரியாது. திடீர்னு தெரியாமப் போகும். அதுவும் நீங்க ஏன்னு படத்தைப் பார்த்தால் தான் தெரியும்.
சமுத்திரக்கனி இந்தப் படத்துல மோசமான கேரக்டர். போலீஸ் அதிகாரியாக இருந்தும் சிம்ரனை சின்னவீடாக வைத்திருப்பார். இது யாருக்குத் தெரியும், தெரியாது.. தெரிந்தால் என்ன நடக்கும்கறதைத் தான் கதை விவரிக்கிறது. வில்லன்களையே பிளாக் மெயில் செய்கிறார் யோகிபாபு. சிம்ரனையும் பிளாக் மெயில் செய்கிறார். வனிதா சமுத்திரக்கனியைத் திட்டும்போது காது கொடுத்து கேட்க முடியாது. மனோபாலா ரெண்டு சீன் வந்தாலும் மனதைக் கவர்கிறார். கார்த்திக் நடிகராகவே வருகிறார். அவர் புதுமாதிரியாக நடித்து அசத்துகிறார்.
மருத்துவராக வரும் கே.எஸ்.ரவிகுமாரின் நடிப்பு சிறப்பு. படம் முடிந்ததும் அந்தகன் அந்தத்தை தியாகராஜன் இணைத்துள்ளார். இந்த இசை ஆல்பத்தை வெளியிட்டவர் தளபதி விஜய். இந்திப் படத்தில் இருந்து அந்தகன் எதில் வித்தியாசப்படுகிறது என்றால் அந்தப் படத்தில் வரும் கேரக்டர்களை இதுல என்லார்ஜ் பண்ணியிருக்கிறார் தியாகராஜன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கம்பேக் என்பார்கள். ராமராஜன், மோகனுக்கு இல்லாத கம்பேக் பிரசாந்துக்கு நிச்சயம்.