1. வாலி எழுதுவதைப் போலவே, ஓவியம் வரைவதிலும் வல்லவராவார். பள்ளியில் படிக்கும்போதே ஓவியம் நன்கு வரைவார். அக்காலகட்டத்தில், ஆனந்த விகடனில், "மாலி" என்பவர் வரைந்த ஓவியங்கள், மிக பிரபலமாக விளங்கின. அவரைப்போலவே இவரும், ஓவியத்துறையில் வளர்ந்து வரவேண்டும் என்றெண்ணி, வாலியின் பள்ளித்தோழர் பாபு, வாலிக்கு அப்பெயரை இட்டார். வாலியின் இயற்பெயர் "ரங்கராஜன்" என்பதாகும்.
2.மாருதிராவ் என்பவருடன் இணைந்து, வாலி, ஒரு படத்தையும் இயக்கியுள்ளார். படத்தின் பெயர் "வடைமாலை" என்பதாகும். 1982ல் வெளியான இந்த படம் தோல்வியடைந்தாலும், தரமான படமென்று, விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.
3. தமிழக அரசின் விருதாக ஒருலட்சம் ரூபாய் இப்படத்திற்குக் கிடைத்தது.
4."அபூர்வ சகோதரா்கள்" படத்தில், ஒரு பாடலின் சூழலுக்கு, வாலி நான்கு, ஐந்து பாடல்கள் எழுதியும், கமலஹாசனுக்கு எதுவுமே பிடிக்கவில்லை. கமலஹாசன், தன் அதிருப்தியை இளையராஜாவிடம் வெளியிட, இளையராஜா, அவரைச் சமாதானப்படுத்தினார். பிறகு, இளையராஜா வாலியிடம், பக்குவமாக விஷயத்தை எடுத்துரைத்து, கமலின் எதிர்பார்ப்பை விளக்கினார். அதன்பிறகு வாலி எழுதிய பாடல், அனைவரையும் கவர்ந்து, சாகாவரம்பெற்ற பாடலானது. அப்பாடல்தான் "உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்" என்ற பாடலாகும்.
5. ஐந்து தலைமுறைகளுக்கு, ஏறத்தாழ 12000 பாடல்களுக்கும் மேல்எழுதி, உலகிலேயே அதிக திரைப்படப்பாடல்கள் எழுதியவர் என்ற சாதனையைப் படைத்தவர், "வாலி" ஒருவரே.
6. வாலி, 16 படங்களுக்கு, வசனமும் எழுதியுள்ளார் என்ற விஷயம், பலரும் அறியாதது.
7. வாலியின் பாடல்கள் சிலவற்றைக் கேட்கும்போது, கண்ணதாசனுக்கே இப்பாடல் நாமெழுதியதா?என்ற சந்தேகம் எழும். அந்த அளவிற்கு, தத்ரூபமாக, கண்ணதாசனே மயங்கும்வண்ணம், பாடல்களை எழுதியுள்ளார் வாலி.
8. எம்.ஜி.ஆர், வாலியிடம், ஒருமுறை குறும்பாக, "நீங்கள் இந்த படத்தில் பாடல்களெழுதியிருந்தாலும், உங்கள் பெயரைப் படத்தில் போடப்போவதில்லை" என்றார். வாலியோ ஜாலியாக, "எனது பெயரில்லாமல், உங்கள் படத்தையே வெளியிடமுடியாது" என்றார். எம்.ஜி.ஆர் எப்படி என்று வினவ, " இந்த படத்தின் பெயர் "உலகம் சுற்றும் வாலிபன்". இதில் வாலியை எடுத்து விட்டால் "உலகம் சுற்றும் பன்" என்றல்லவா ஆகும்?" என்று கூற, எம்.ஜி.ஆர், நன்கு சிரித்தபடி, வாலியைத் தட்டிக்கொடுத்தாா்.
9. வாலி, சுயசரித நூலும் எழுதியுள்ளார். "இருபதாம் நூற்றாண்டும் நானும்" என்பது, அந்தநூலின் பெயராகும். முழுமையான சுயசரிதை நூலென்று, இதைக் கூறமுடியாவிட்டாலும், வாலி, தன் வாழ்வியல் நிகழ்வுகள் பலவற்றை, விவரித்துள்ளார்.
10. வாலி, எம்.ஜி.ஆருக்கு எழுதிய பாடல்களிலேயே, தனிச்சிறப்பு மிக்க பாடல், "நேற்று இன்று நாளை" படத்தில் இடம்பெற்ற "தம்பி நான் படித்தேன்" என்ற பாடலாகும். படத்தின் சூழலுக்குப் பொருந்திவரும் இப்பாடலில், அக்கால அரசியல்சூழலையும் பொருத்தி, திறம்படப் பாட்டெழுதியிருந்தார் வாலி. எம்.ஜி.ஆர் இப்பாடலைக் கேட்டு, வாலியைக் கட்டித் தழுவிப் பாராட்டினார்.
11. 52 எம்.ஜி.ஆர் படங்களிலும், 66 சிவாஜி படங்களிலும், வாலி பாடல்களெழுதியுள்ளார். எம்.ஜி.ஆர் நடித்த மொத்த படங்களே, 136 தான் என்பது குறிப்பிடத்தக்கது. எம்.ஜி.ஆர், வாலியை "ஆண்டவரே!" என்று அழைப்பார்; சிவாஜி "வாத்தியாரே!" என்று அழைப்பார்.
12. வாலி எழுதிய பாடல்கள், மிகவும் பிரபலமான முதல்படம் "கற்பகம்" ஆகும். இந்த படப்பாடல்களில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், அனைத்து பாடல்களும் பாடகிகளுக்கானவை; பாடகர்களின் குரலுக்கு வேலையே இல்லை.
13. வாலி, கதை−திரைக்கதை −வசனம்−பாடல்கள் எழுதிய "ஒரே ஒரு கிராமத்திலே" திரைப்படம், இடஒதுக்கீடு முறைக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருந்ததால், கடும் எதிர்ப்புகளைப் பெற்றது. சமூகத்தில் கொந்தளிப்பை உண்டாக்கியதால், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட முதல் திரைப்படமாக இது அமைந்தது. திரையரங்குகளில் மீண்டும் திரையிடப்படாமலே, தேசியவிருதைப் பெற்றது. தற்போது வலியுறுத்தப்படும், பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீட்டை, இப்படத்தில் வலியுறுத்தியிருப்பார் வாலி. நீதிமன்ற வசனங்கள் ஆணித்தரமாக அமைந்திருந்தன.
14. 1973ல் வெளியான "பாரதவிலாஸ்" படத்தில் இடம்பெற்ற, "இந்திய நாடு என்வீடு" என்ற வாலியின் பாடலுக்கு, தேசியவிருது கிடைத்தது. அரசியல் முரண்பாடு காரணமாக, இவ்விருதை ஏற்க மறுத்துவிட்டார் வாலி.
15. வாலி, இளவயதிலேயே "நேதாஜி" என்ற கையெழுத்துப் பத்திரிக்கையைத் தொடங்கினார். இதைத் தொடங்கிவைத்தவர் கல்கி. இப்பத்திரிக்கையில் எழுதுவதை இளைஞர்கள் விரும்பினர். இப்பத்திரிக்கையில் எழுதியவர்களுள் குறிப்பிடத்தக்கவர், எழுத்தாளர் "சுஜாதா" ஆவார்.
16.மரபுக்கவிதை, புதுக்கவிதை ஆகிய இரண்டுவகை கவிதைகளை எழுதுவதிலும் வல்லுநராக விளங்கினார் வாலி. இத்திறமை படைத்த முதல் தமிழ்ப்படப் பாடலாசிரியர் வாலியே ஆவார்.
17.வாலி, பாடல்வாய்ப்பு தேடிய நாட்களில், அவரை, பல சினிமா தயாரிப்பு நிறுவனங்களுக்கு அழைத்துப்போய், பாடல்வாய்ப்பு கேட்டு, வாலியின் உயர்வுக்கு வழிவகுத்தவர், திரைப்படக் குணச்சித்திர நடிகரான "வி.கோபாலகிருஷ்ணன்" ஆவார்.
18. வாலியின் பள்ளித்தோழர்களுள் உயிர்த்தோழராக இருந்தவர் நடராஜ சுந்தரம். பள்ளிப்பருவத்திலேயே, தீவிர பெரியாரியவாதியாக இருந்தவர் நடராஜசுந்தரம். வாலியை, எந்த சூழலிலும், விட்டுவிலகாதவர்; விட்டுக்கொடுக்காதவர். ஒருமுறை, வாலியைக் கடிக்கவிருந்த கோதுமைநாகத்தைக் கொன்று, வாலியின் உயிரைக் காத்தவர். அப்போதே, வாலியின் பாடல்கள், நாடகங்களை இரசித்தவர். வாலி, வருங்காலத்தில் பாடலாசிரியராக வர, ஊக்கமும், உற்சாகமும் தந்தவர். வாலியினுடைய ஓரளவு சங்கீத அறிவு, நடராஜசுந்தரத்திடமிருந்து கிடைத்ததே! துரதிர்ஷ்டம் என்னவென்றால், வாலி, பெரிய பாடலசிரியராக உயர்ந்தபோது, அதைப் பார்த்துமகிழ, நடராஜசுந்தரம் உயிரோடு இல்லை.
19. சிறந்த கவியரங்கக் கவிதைகள், ஆன்மீக நூல்கள், படைத்த வாலி, பல இலக்கியத்தரமான பாடல்களை எழுதினாலும், சில சமயங்களில், விரசம் ததும்பும் பாடல்களை எழுதி, சர்ச்சைக்கு ஆளாவது தேவைதானா? என்றொருவர், வாலியிடமே கேட்டார். வாலி அளித்த பதில் " இங்கே நான், வண்ணமொழிப் பிள்ளைக்குத் தாலாட்டும் தாய்; அங்கே நான், விட்டெறியும் எலும்புக்கு வாலாட்டும் நாய்" என்றார். எவ்வளவு உயர்விலும், வாலி, பணிவுடனிருந்தார் என்பதற்கு, இது மிகச்சிறந்த உதாரணமாகும்.
20. வாலி எழுதிய நூல்களுள், சற்றே சர்ச்சைக்குள்ளாகிய நூல், "நினைவு நாடாக்கள்" என்பதாகும். தான் சந்தித்த, பழகிய மனிதர்களின் குணநல இயல்புகளை, ஒளிவுமறைவில்லாமல், வெளிப்படையாக அதில் போட்டுடைத்ததுதான் காரணமாகும்.
21. வாலி, மு.க.முத்து நடித்த, "பிள்ளையோ பிள்ளை" படத்தில் "மூன்றுதமிழ் தோன்றியதும் உன்னிடமோ? என்ற பாடலைச் சிறப்பாக எழுதியிருந்தாா். பாடலைக்கேட்டு, எம்.ஜி.ஆர், தனது படத்தில், தனது புகழ்பாடும் காதல் பாடலாக, வரவேண்டிய இந்த அருமையான பாடலை, வாலி, மு.க. முத்துவிற்கு எழுதிவிட்டாரே! என்று, ஆதங்கமும், கோபமும் அடைந்தார். வாலியிடம் அதை வெளிப்படுத்த, வாலி, அது இயல்பாகவும், தற்செயலாகவும் தன்னுள் வெளிப்பட்ட பாடலென்று கூறி, எம்.ஜி.ஆரை, வாலி சமாதானம் செய்தார்.
21. எம்.ஜி.ஆர் படங்களுக்கு, வாலி, பாடல்களெழுதிய முதல்படம் "படகோட்டி". இப்படத்திற்கு இரு பாடல்களை மட்டுமே எழுதினார் வாலி. பாடல்களைப் படித்து அசந்துபோன எம்.ஜி.ஆர், அப்படத்தில், அனைத்துப் பாடல்களும் எழுதும் வாய்ப்பை வழங்கியதுடன், தனது படங்களுக்கு, இனி வாலியே, பிரதானமாகப் பாடல்களெழுதுவார் என்றும், அறிவிப்பு வெளியிட்டார்.
22. வாலி, படத்தின் கதை சாராம்சத்தை, சுருங்கிய வடிவில் கூறுவதில் வல்லவர். உதாரணமாக, "காதலர் தினம்" படத்திலிடம்பெற்ற, "நினைச்சபடி நினைச்சபடி" பாடலில் இடம்பெறும்,
"காதலென்ற சொல்லை நானும் சொல்லவில்லை.
சொல்லவந்த நேரம்காதல் எந்தன் கையில் இல்லை.
வாழ்வுதந்த வள்ளல் வாரிக்கொண்டு போக
வாழ்த்துச்சொல்ல நானும்வந்தேன் கண்கள் ஈரமாக"
என்ற வரிகளில், படத்தின் கதையே, கூறப்பட்டிருக்கும் நயத்தைக் கவனியுங்கள்.
23. இளையராஜா இசையில், அதிக பாடல்களை எழுதிய பாடலாசிரியர் வாலிதான்.
24. வாலி அவர்களின் மனைவிபெயர் வித்யாசமானது. "ரமண திலகம்" என்பது, அவர்கள் பெயர்.
25. தீவிர முருக பக்தர் வாலி. திரையுலகில், பிரபலமாவதற்கு முன்பே, "கற்பனை என்றாலும்", "ஓராறு முகமும்" உள்ளிட்ட சில முருகன் பாடல்களை எழுதிப் பிரபலமானவர்; பிற்காலத்தில் "சரவண சதகம்" என்ற முருகன் புகழ்பாடும் வெண்பா நூலையும் இயற்றினார்.
26."மௌனம் சம்மதம்" படத்தில், வாலி எழுதிய "கல்யாணத் தேன்நிலா" என்ற பாடல், அனைத்து வரிகளின் இறுதி எழுத்தும், "லா" என்ற எழுத்திலேயே முடியும் சிறப்புக்களுடையது.
27.தமிழ்ப்படப் பாடலாசிரியர்களிலேயே, டைமிங்சென்ஸ் காமெடி மற்றும் பஞ்ச் வசனங்கள் பேசுவதில் வல்லுநராக விளங்கியவர் வாலிதான்.