2014ல் வெளியான ஒரு ரஷ்யப் படம்.
ஊழல் மலிந்து போன ஒரு சமுதாயத்தில் ஒரு நேர்மையான மனிதன் வாழ்ந்தால் அவன் முட்டாளாகவே கருதப்படுவான். அப்படிப்பட்ட ஒருவனைப் பற்றிய படம்தான் இது.
1950-களில் சோவியத் யூனியனில் உள்ள ஒரு சிறிய ஊரில் கதை நடக்கிறது. ஒரு பிளம்பர் மிகவும் நேர்மையானவன். அவன் தன் தாய், தந்தை, மனைவி, குழந்தைகளோடு ஒரு குடியிருப்பில் அமைதியாக வாழந்து வருகிறான். எல்லா குடியிருப்புகளிலும் பிளம்பிங் வேலை செய்வதுதன அவனது அன்றாடப் பணி. அப்படி ஒரு பழைய குடியிருப்பில் வேலை நிமித்தமாக சென்றபோது. அந்த குடியிருப்பு மிகவும் நலிவடைந்து காணப்படுவதுடன் கீழிருந்து மேல் வரை ஒரு பெரிய விரிசல் இருந்தது. அவனது டெக்னிகல் அறிவு அதை நன்றாக ஆய்வு செய்தபோது அவன் மிகவும் அதிர்ச்சியடைந்தான்.
அந்த குடியிருப்பில் கிட்டத்தட்ட 800க்கும் மேற்பட்ட மக்கள் குடியிருக்கிறார்கள். அது ஒரு குறைந்த வருமானப் பிரிவினர் வசிக்கும் குடியிருப்பு. அதனால் பராமரிப்பின்றி மிகவும் மோசமாக இருந்தது. அது எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடலாம் என்ற நிலையை அறிந்த பிளம்பர் உடனே அதை தன் தந்தையிடம் கூறினான். அவரும் ஒரு பிளம்பர் தான். உடனே இதை மேயரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்று கூறுகிறார். தாயும், அவனது மனைவியும் உங்களுக்கு ஏன் வீண்வேலை. இதை இப்படியே விட்டுவிடுங்கள் என்றார்கள். ஆனால் அவனால் அப்படி இருக்க முடியவில்லை. அவ்வளவு பேர் இறப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்று நினைத்தான்.
பிறகு தாய் கூறினாள். தற்போது உள்ள மேயருடைய உதவியாளர் தன் சிநேகிதிதான் என்றும் அவளைப் போய்ப் பார்க்கும்படி கூறுகிறாள். உடனே மகனும் விரைகிறான். ஆனால் அப்போது இரவு வெகு நேரமாகிவிட்டது. மேயரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் அதிகாரிகள் அனைவரும் ஒரு ஹோட்டலில் பார்ட்டியில் இருந்தனர். இவன் போய்ப் பார்க்கும்போது எல்லோருமே குடித்துக்கொண்டு இருந்தனர். இந்த நேரத்தில் தான் அங்கு சென்று மேயரைச் சந்திப்பது மிகவும் சிரமமாக இருந்தது.
இருந்தாலும் எப்படியோ அவர்களிடம் விஷயத்தை கூறிவிட்டான். அவர்கள் இவனை முதலில் நம்பவில்லை. ஒருவேலையாக அனைவரையும் அழைத்துக்கொண்டு அந்த குடியிருப்புப் பகுதிக்கு வந்தான். சோதனைகள் நடைபெற்றன. நிலைமை மோசமாகத்தான் இருந்தது. ஒரு நாள் கூட தாங்காத நிலைதான்.
ஆனால் மேயரோ மக்களைக் காப்பாற்றாமல். அந்த குடியிருப்பின் பாதுகாப்பு அதிகாரிகளையும், இந்த அப்பாவி பிளம்பரையும் ஒரு வேனில் போலீஸோடு அனுப்பி விட்டார். போகும்போது தான் தெரியும் அவர்கள் எல்லாம் கொல்லப்படப்போகிறார்கள் என்று. ஆனால் அதிகாரிகளோ நிலைமையை உணர்ந்து தாங்கள் செய்த தவறுகளுக்காக தங்களுக்கு தண்டனை சரி, ஆனால் அப்பாவி பிளம்பரை ஏன் கொல்ல வேண்டும் என்று விட்டுவிடச் சொல்கிறார்கள்.
தப்பிய பிளம்பரோ உடனடியாக வீட்டுக்கு வந்து, குடும்பத்தினரிடம் விவரத்தைச் சொல்லி ஊரைவிட்டே கிளம்பிப் போகிறான். போகும் வழியில் அந்த பழைய குடியிருப்பைப் பார்க்கிறான். அங்கே எந்த வித மீட்புப் பணியும் நடைபெறுவதாகத் தெரியவில்லை. வண்டியை நிறுத்தச் சொல்கிறான். குடும்பத்தை அனுப்பிவிட்டு, தான் மட்டும் இறங்கிக் கொள்கிறான்.
அந்தக் குடியிருப்பில் ஒவ்வொரு வீடாக சென்று உடனடியாக கட்டிடத்தை விட்டு வெளியேறுமாறு கூறுகிறான். ஆனால் அவர்கள் யாரும் இவன் சொல்வதை நம்பவில்லை. இவன் ஒரு அரசு அடியாள் என்று நினைத்து இவனை நையப் புடைக்கிறார்கள். இவன் எழுந்திருக்க முடியாத நிலையில் தரையில் வீழ்ந்து கிடக்கிறான். குடியிருப்பில் இருப்பவர்களோ அமைதியாக உறங்கச் செல்கிறார்கள். இப்படியாகப் படம் முடிகிறது.