இயக்குனர் பாசில் இயக்கிய அருமையான படங்கள்...
மலையாள திரையுலகத்தில் இருந்து நமக்கு கிடைத்த ஒரு அற்புதமான இயக்குனர் பாசில். இவரது படங்கள் எப்பொழுதும் பெரும்பாலும் மனித உறவுகளின் பாசப் போராட்டங்களே கதையாக இருக்கும். அந்தப் படங்கள்பெரும்பாலானவை சூப்பர் ஹிட்..
1. பூவே பூச்சூடவா - பாட்டிக்கும் பேத்திக்கும் இடையேயான பாசப்போராட்டமே கதையின் கரு. அதற்கு முன்பும் சரி அதன் பிறகும் சரி அப்படியான கதையம்சம் கொண்ட படம் வந்ததே எனலாம். படம் சூப்பர் ஹிட்.
2. பூவிழி வாசலிலே- குடும்ப உறவுகளை இழந்த ஒரு குடிகாரனுக்கும் தாயை இழந்து வாடும் குழந்தைக்கும் இடையேயான பாசப் போராட்டம். படம் ஹிட்.
3. என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு- குழந்தைச்செல்வம் இல்லாத ஒரு தம்பதியினர் தத்தெடுக்கும் குழந்தையின் உண்மையான தாய் தந்தையினர் வந்துவிட அவர்களுக்கு இடையே நடக்கும் சிக்கலான போராட்டங்கள் கதை.
4. வருஷம் 16- கூட்டுக்குடும்பத்தில் வாழும் மனிதர்களுக்கு இடையேயான சிக்கல்களைப் பற்றியது. படம் சூப்பர் டூப்பர் ஹிட்
5. அரங்கேற்ற வேளை- வேலை வெட்டியில்லாத மூன்று நபர்கள் தங்களின் நம்பி இருக்கும் குடும்பங்கள்/பிரச்சனைகளுக்காக ஒரு ஆள் கடத்தல் சம்பவத்தால் இப்படி சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள் என்பதை நகைச்சுவை கலந்து சொன்னார். பாடல்கள் சூப்பர் ஹிட்.
6. கற்பூர முல்லை- அடையாளம் தெரியாத தாயை தேடி அலைந்து பின்னர் தாய்க்கும் மகளுக்கும் இடையேயான பாசப்போராட்டாமே கதை. பூங்காவியம் பேசும் ஓவியம் என்று ஜேசுதாஸ் பாடிய பாடல் மிக பிரபலம்.
7. கிளிப்பேச்சு கேட்கவா- வேலையில்லாத இளைஞர் வாத்தியார் வேலைக் கிடைத்து கிராமத்திற்கு வந்து பேய் பங்களாவில் தங்க, அந்த பேய் பங்களாவை சுற்றி நடக்கும் கதை.
8. காதலுக்கு மரியாதை- விஜய் பல படங்கள் நடித்திருந்தாலும் அவருக்கு பிரேக் கொடுத்தத் திரைப்படம். இரு வேறு மதத்தை சேர்ந்த இருவரிக்கிடையே காதல் வர, அவர்களை சுற்றியுள்ள உறவுகளுக்கு அதை ஏற்க மனமில்லாமல் அவர்களுக்கிடையே நடக்கும் பாசப்போராட்டங்கள் தான் கதை. கிளைமேக்ஸ் அனைவராலும் பாராட்டப்பட்டது. இசைஞானியின் இசை என்றென்றும் அவரே இசையுலகின் ராஜா என்பது போல் இருந்தது. படம் மெகா ஹிட்.
9. கண்ணுக்குள் நிலவு-விஜயை வைத்து பாசில் இயக்க இரண்டாவதுத் திரைப்படம். மனநிலை பாதிக்கப்பட்ட கதாநாயகனை மீட்டெடுக்கும் கதாநாயகி. பாடல்கள் நன்றாக இருந்தது.
10. ஒரு நாள் ஒரு கனவு- இலக்கை நோக்கி பயணிக்கும் ஒரு இளைஞனை காதலிப்பதாகக் கூறி சவால் விட்டு அவனது வீட்டுக்கு சென்று அவனது உறவுகளை சந்திப்பது போன்று கதை நகரும்..'காற்றில் வரும் கீதமே' என்கிற பாடல் மனதை வருடிச் சென்றது..
பாசிலின் அனைத்துப் படங்களுக்கும் இசைஞானி இளையராஜாவே இசை என்பது கூடுதல் தகவல்.
பாசில் மலையாளத்தில் இயக்கிய 'மணிசித்ரதாழ்' திரைப்படம் தான் பின்னாளில் சந்திரமுகியாக தமிழில் வந்தது..