எங்க ஊரு பாட்டுக்காரன், பூவிலங்கு, டார்லிங் டார்லிங் டார்லிங் , சுவரில்லாத சித்திரங்கள்,மோட்டார் சுந்தரம்பிள்ளை, இன்று போய் நாளை, ஒரு கை ஓசை, கதாநாயகன் போன்ற 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.இவர் சொந்தமாக நாடக்குழு வைத்து நாடகங்கள் பலவும் மேடையேற்றியுள்ளார்.
கறுத்து மெலிந்த தேகம், திகிலடைந்த ஆனால் சுயதைரியம் அளித்துக் கொள்வதன்மூலம் திடீர் பிரகாசமடையும் கண்கள், திறந்த வாய், தோரணையான நடை என்ற அடையாளங்களுடன் நகைச்சுவை கலந்த குணச்சித்திரப் பாத்திரங்களில் வலம் வந்தவர்.
எண்பதுகளில் அவர் பங்கேற்ற படங்களில் நகைச்சுவை ஏரியாவை கலகலக்க செய்தவர். தமிழ் வணிக சினிமாவின் வெற்றிகரமான திரைக்கதையாளரான பாக்யராஜ் முதன் முதலில் இயக்கிய சுவர் இல்லாத சித்திரங்களில் கல்லாப்பெட்டி சிங்காரத்தை அறிமுகம் செய்தார்.
அறுபதுகளிலேயே மோட்டார் சுந்தரம்பிள்ளை போன்ற படங்களில் சிறு வேடங்களில் சிங்காரம் வந்திருந்தாலும் முக்கியத்துவம் பெற்ற வேடம் என்ற வகையில் இது தான் முதல் படம் என்பதால், ஒருவேளை அறிமுகம் என்று பாக்யராஜ் குறிப்பிட்டிருப்பார் .
பாக்யராஜ், சிறு வேடம் என்றாலும் கதையுடன் ஒட்டிய பாத்திரங்களை கல்லாப்பெட்டிக்கு தன் பல படங்களில் தந்தார். அவரை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட ஒரே இயக்குனர் பாக்யராஜ் தான் என்று சொல்லவேண்டும்.
அவர் இயக்கிய சுவரில்லாத சித்திரங்கள், ஒரு கை ஓசை, டார்லிங் டார்லிங் டார்லிங், இன்று போய் நாளை வா போன்ற படங்களில் கல்லாப்பெட்டி ஏற்று நடித்தப் பாத்திரங்கள் தனித்த நகைச்சுவைக்காக இன்றும் பேசப்படுகின்றன.
எண்பதுகளில் குறிப்பிட்ட சில இயக்குனர்களால் கீழ் மத்தியத் தர மக்களின் வாழ்க்கை திரையுலகில் அசலாய் கொண்டு வரப்பட்டபோது எதார்த்தமான முகம் கொண்ட புதிய நடிகர்களின் வருகை முக்கியத்துவம் பெற்றது. அன்றாடம் எதிர்ப்படும் முகங்கள் அறிமகமான சமயத்தில் திரையில் தோன்றிய கல்லாப்பெட்டி மிக அருமையாக அந்த மக்களின் வாழ்க்கையை திரையில் பிரதிபலித்தார்.
முக்கியத்துவம் பெற்ற நடிகர் இல்லையென்றாலும் கல்லாப்பெட்டி சிங்காரம் இன்றும் நினைவு கொள்ளப்பட அவரது வசன உச்சரிப்பும் முகபாவனையும் பிரத்யேகக் குரலுமே காரணம்.
"கண் அடிச்சா வறாத பொம்பள கைய பிடிச்சு இழுத்தா மாத்திரம் வந்திரவா போறா....."சுவர் இல்லாத சித்திரங்கள் படத்தில் கவுண்டமணி உடன் ஆன உரையாடல் பிரசித்தம்.
இன்று போய் நாளை வா படத்தில் சோமா பயில்வான் ஆக வந்து படத்தை கலகலப்பாக்கிவிடுவார்
டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில்.. குளியல் தொட்டியில் இருந்து கம்பீரமாக எழுந்து சென்று கோட் சூட் அணியும் காட்சியில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த புதுப் பணக்காரர் போலவே இருப்பார். அடுத்த காட்சியில் அவர் வெறும் வாட்ச்மேன் தான் என்று பார்வையாளர்களுக்குப் போட்டு உடைத்து விடுவார் மகன் பாக்யராஜ். ” குட்டுடைந்த கல்லாப்பெட்டியின் முகபாவனை சிறப்பாக இருக்கும்.
பாக்யராஜின் வீட்டு ஓனராக நடித்த அந்த ஏழு நாட்களிலும் தன் தனிச் சிறப்பை அவர் பதிவு செய்தார். வீடு பார்க்க பாக்யராஜிடம் அவரது உயர்த்திய வேட்டியை கீழே விட சொல்லும் காட்சி இயல்பான நகைச்சுவைக்கு ஒரு சான்று.
உதயகீதம் படத்தில் கால் சட்டைக்கு படு முடிச்சு போட்டதால் இதை மட்டும் விட்டுட்டு போய்ட்டான் என்னும் போது பாவமாய் இருப்பார்.
மறக்கமுடியாத ஒரு நல்ல கலைஞன் ! எல்லா பால்ய கால நினைவு மீட்டல்களிலும் கல்லா பெட்டி சிங்காரம் அவர்களுக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு !
கல்லாப்பெட்டி சிங்காரம் கடைசியாக நடித்த திரைப்படமான கிழக்கு வாசல், படப்பிடிப்பின் போது தனது 52 வயதில் இறந்தார்.
நன்றி: இணையம்