1989 ல் 'கரகாட்டக்காரன்' திரைப்படத்தில் கதை பேசும் விழிகளோடு கங்கை அமரனின் ‘காமாட்சி’ கதாபாத்திரத்திற்கென்றே பிறப்பெடுத்தவர் போல கச்சிதமாகப் பொருந்தி அந்த அறிமுகத்திலேயே அழகிலும், நடிப்பிலும் ஒரு சேர அசரடித்திருந்தார் கனகா.
இந்தத் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியால் , அறிமுகமான அடுத்த ஆண்டியிலேயே பத்து படங்களில் நாயகியாக நடித்தார். இதில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த 'அதிசயப் பிறவி'வும் ஒன்று.
குறிப்பாக , கங்கை அமரனின் படங்களில் கனகாவை நிறையவே ரசிக்க முடியும். 'கரகட்டாக்காரன்', 'கும்பங்கரை தங்கய்யா' மற்றும் 'கோயில்காளை' மூன்று படங்களிலுமே கங்கை அமரன் கனகாவை சிறப்பாக பயன்படுத்தியிருந்தார்.
நடிப்பிலும் , நடனத்திலும் கனகா சிறப்பாக இயங்கக்கூடியவர். 'கோயில் காளை' படத்தின் 'பள்ளிக்கூடம் போகலாமா' பாடலில் கட்டழகியாக, பாடலுக்குத் தேவையான அங்க அசைவுகளிலும் எல்லை மீறாத கவர்ச்சியில் கனகா கலக்கியெடுத்திருப்பார். போலவே இதே படத்தின் 'வண்ணச் சிந்து வந்து விளையாடும' பாடலில் இன்னும் கூடுதல் வசீகரத்தோடு அவரின் நடனம் இருக்கும்.
ராமராஜனின் ஜோடியாக இவர் நடித்த 'தங்கமான ராசா' திரைப்படத்தின் 'சொக்குப் பொடி வச்சிருக்கேன்' பாடலில் , பாடலின் இறுதியில் மரப்பாலம் ஒன்றில் ராமராஜன் கனகாவைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பார்.. முதுகுப் பக்கம்தான் கனகாவிற்கு ஃபோகஸ் இருக்கும், ஆனால் பாடலின் பீட்டிற்கு அவரின் ஷோல்டர் அபிநயம் பிடித்துக்கொண்டே இருக்கும் , அதெல்லாம் ரத்தத்தில் நடனம் ஊறிப்போனவர்களுக்கான உடல்மொழி!
பிரபுவின் ஜோடியாக நடித்த 'தாலாட்டு கேக்குதம்மா ', மம்முட்டிக்கு ஜோடியாக நடித்த 'கிளிப்பேச்சு கேட்கவா' படங்களில் கனகாவிற்கு அமைந்த கதாபாத்திரங்கள் அத்தனை சுவாரஸ்யமானவை. குறிப்பாக , 'கிளிப்பேச்சு கேட்கவா' படத்தில் மம்முட்டிக்கு இணையான கனமான கதாபாத்திரம். கதாபாத்திரத்தை உணர்ந்து அத்தனை இலகுவாக கையாண்டிருப்பார்.
மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்த 'வியட்நாம் வீடு' மற்றும் முகேஷின் ஜோடியாக நடித்த 'காட் ஃபாதர்' படங்களின் வழியாக கனவாவிற்கென்று இன்றும் கேரளாவில் ஒரு ரசிகர் வட்டம் உண்டு.
கோயில் காளை, சாமுண்டி, சக்கரைத் தேவன் உள்ளிட்ட திரைப்படங்களில் கிராமிய கதாபாத்திரங்களில் ஊடு கட்டி அடித்த கனகா, அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்த 'பெரிய இடத்துப் பிள்ளை' மற்றும் 'முதல் குரல்', கார்த்திக் ஜோடியாக நடித்த 'எதிர்காற்று' உள்ளிட்ட சில படங்களில் மாடர்ன் உடை அணிந்தும் நடித்திருந்தார். கிராமிய படங்கள் அதிகமாக நடித்தாலோ என்னவோ, நகர பெண்ணாகவும் தான் சிறப்பாக பொருந்துவேன் என்று நீருபிப்பதற்காகவே சற்று மிகையாக நடித்து அந்தக் கதாபாத்திரங்களில் அவர் பொருந்தாமல் சொதப்பி இருப்பதாகத் தோன்றும்.
'கரகாட்டக்காரன் ' , 'தாலாட்டு கேக்குதம்மா' , 'பெரிய வீட்டுப் பண்ணக்காரன்' , 'சீதா' , 'முதலாளியம்மா' , 'வெள்ளையத்தேவன்' உள்ளிட்ட படங்களில் கனகா மிக அழகாகத் தெரிவார். கங்கை அமரன் கண்ணில் அப்சரஸ் மாதிரி அழகியாக தெரிந்த அதே கனகாவை , அதிசய பிறவியில் மிகை ஒப்பனையிலும், மிரண்டு போகும் கேமரா கோணங்களிலும் காட்டி ரசிகர்களை பயமுறுத்தியும் இருந்ததையும் நினைவுகூறத் தோன்றுகிறது.
கனகா நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே, அறிமுக நாட்களில் இருந்த முகப் பொலிவு இவரிடம் விரைவிலேயே காணாமல் போனதால் , ஒடுக்கு விழுந்த கன்னம் என்றே தோற்றத்தைப் பிரதானப்படுத்தி பேசியதில் இவரின் திறமைக்குக் கிடைக்க வேண்டிய உரிய அங்கீகாரம் கிடைக்காமல் போனதாக ஓர் எண்ணம் உண்டு. 'கிளிப்பேச்சு கேட்கவா' படத்தில்கூட 'மாங்கொட்டையை சப்பி போட்ட மாதிரி ரெண்டு கன்னம்' என்று மம்முட்டிக்கு ஒரு வசனமே இருக்கும், 'ஆனாலும் அவள எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு' என்பார்.
உண்மையும் அதுதான், கனகாவிடம் தோற்றப் பொலிவைத் தாண்டியும் ஏதோ ஒரு வசீகரம் உண்டு. இவரின் திறமைக்கு இன்னுமே பெரிதாக வந்திருக்க வேண்டியவர். தாய் தேவிகாவின் அரவணைப்பிலேயே இருந்ததால் அம்மாவின் திடீர் மரணத்தால் மொத்தமாக தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு வாழும் நிலைக்கு அவர் சென்றது சோகம்.
நன்றி: நாடோடி இலக்கியன்